இலங்கை பிரதான செய்திகள்

கள் இறக்க தடை. ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினேன் என்கிறார் டக்ளஸ். கலந்துரையாட வேண்டிய தேவையே இல்லை என்கிறார் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

திருத்தப்பட்ட மதுவரி திணைக்கள சட்டத்தின் பிரகாரம் கித்துள் மரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதி பெறப்பட தேவையில்லை என்பதே அமுலுக்கு வரவுள்ளதா க வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தனது முகநூலில் குறிப்பிட்டு உள்ளார்.அது தொடர்பில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவரின் முகநூலில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

பனை மரத்தில் கள் இறக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அரசினால் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கின்ற மதுவரித் திணைக்களச் சட்ட மூலத்திற்கான ஒரு மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டே பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே உள்ள மதுவரித் திணைக்களச் சட்டத்தின் படி மதுவரித் திணைக்கள அனுமதி இல்லாமல் எந்த மரத்திலிருந்தும் கள்ளிறக்க முடியாது. 
 
இப்போது வரவிருக்கும் திருத்தத்தில் அச் சொற்றொடரிற்குப் பதிலாக ‘கித்துள்” மரத்தைத் தவிர எந்த மரத்தில் இருந்தும் கள் இறக்க முடியாது.’ இதை இன்னொரு வகையாகக் கூறுவதாயின் இது வரை எந்த மரத்திலிருந்தும் (உ-ம்: தென்னை, பனை, கிட்துல்) கள் இறக்குவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படல் வேண்டும்.
 
இச் சட்டமூலத்தின் மூலம் கித்துள் மரத்திலிருந்து கள் பெறப்படுவதற்கு மது வரித்திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறப்படத் தேவையில்லை. அவ்வளவுதான். இதற்காக ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, நிதி அமைச்சரிடமோ முறையிடத் தேவையில்லை. என குறிப்பிடப்பட்டு உள்ளது. 
 
 பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் டக்ளஸ் கலந்துரையாடல்.
 
அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் , பிரதமர் மற்றும்  நிதியமைச்சர்   “கள்” இறக்கப்படுவதற்கு அரசால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார் என செய்தி வெளியிடபட்டு உள்ளது.
குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 
 

கொழும்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம்(30) இடம்பெற்றதாகவும் ,

இதன்போது வடக்கு – கிழக்கு பகுதியில் வாழும் குறித்த தொழில் வல்லுநர்கள் அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதான தொழில் நடவடிக்கையால் அதனை நம்பிவாழும் குடும்பங்கள் தற்போது அச்சமடைந்துள்ளன.

வடக்கில் குறித்த தொழில் தடை நடைமுறைக்கு வருமாயின் அதனை நம்பிவாழும் 12 ஆயிரம் குடும்பங்கள் பேரவலத்தை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இதுவிடயத்தில் உரிய கவனம் செலுத்தி குறித்த தொழித்துறை சார்ந்தவர்களது குடும்பங்களின் நிலைமையை கருத்தில்கொண்டு சாதகமான முறையில் பரிசீலிக்கவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக குறித்த தொழில் துறைசார்ந்த வல்லுநர்கள் கவலை அடையவோ அன்றி அச்சமடையவோ தேவையில்லை எனவும் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது. என கட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.