இந்தியா பிரதான செய்திகள்

ஆதார் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம்:-

சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, ரேஷன், மொபைல் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கெடு 2018 மார்ச் 31-ம் திகதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆதார் கட்டாய இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் அவசியம் என்று கூறப்படுகிறது. இது சட்ட விரோதம் என வாதிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு ஆதார் அவசியம் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்க தயார் என தெரிவித்தார். மேலும், மார்ச் 31-ம் திகதி வரை கால அவகாசம் நீட்டிப்பு என்பது ஆதார் பதிவு செய்யாத மற்றும் பதிவு செய்ய விரும்புவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றார். இதையடுத்து, இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நவம்பர் இறுதி வாரத்தில் விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மம்தா அரசுக்கு கண்டனம்

மேற்கு வங்க அரசு சார்பில் ஆதார் கட்டாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை எதிர்த்து அதை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மாநில அரசே எப்படி வழக்கு தொடர முடியும். இதை அனுமதித்தால், நாளை மாநில அரசு இயற்றிய ஒரு சட்டத்தை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடரும் நிலை வராதா? எங்களை விட அனுபவம் பெற்ற நீங்களே பதில் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், விரும்பினால் முதல்வர் மம்தா, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரட்டும் என்று கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடர மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்த கபில் சிபல், இதுதொடர்பாக மனுவில் திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்வதாக கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, மத்திய தொலைத்தொடர்புத் துறை, மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆணை அனுப்பி 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers