இந்தியா பிரதான செய்திகள்

நடிகர் கமலஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பா.ஜ.க கண்டனம்


இந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்கள் இனியும் சொல்லிக்கொள்ள முடியாது என்று பிரபல நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழக பிரமுகர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

சமீப நாட்களாக தமிழக அரசியல் குறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அத்துடன் விரைவில் தனது அரசியல் பயணம் பற்றி அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே இந்து தீவிரவாதம் குறித்து கமல் கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்கள் இனியும் சொல்லிக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் இந்து வலதுசாரி அமைப்புகள் எதிர் தரப்பினருடன் விவாதங்களில் ஈடுபடுவர் ஆனால் இப்போது வன்முறையில் ஈடுபடுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலையில் இருந்த கமல், தற்போது தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் செயலர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன் தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கு கமலின் பயம் போகாது என்றது சரியே என்றும் கூறியதுடன் இந்துக்கள் மீதான தாக்குதல் வெட்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கமல் இவ்வளவு நாளாக கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது குழம்பி விட்டார் என்றும் அவர் மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல நடந்துகொள்கிறார் என்றும் கூறியுள்ளார் பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர்.

கமல் சராசரி அரசியல்வாதி போன்று நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது என்றும் அவரை வெளியில் இருந்து பார்க்கும்போது அறிவாளியாகத்தான் தெரிந்தாலும் அடிக்கடி பேசும்போதே அவரின் உண்மை முகம் வெளிப்படுகிறதோ என்று எண்ணுவதாகவும் எஸ்.வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு தமிழகம் தாழ்ந்துவிடவில்லை. அவருக்குக் கேரளம்தான் பிடிக்குமெனில் கேரளாவில் போய் வாழட்டும் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு எஸ்.வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை   இந்த கருத்துக்கு எதிராக  நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி இந்தியாவின் வாரணாசி நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.