இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) 6-ம் கட்ட விசாரணை இடம்பெறுகிறது.
தேர்தல் ஆணையகத்தால் முடக்கிவைக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தேர்தல் ஆணையகத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையகத்தில் தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 5 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 1-ந் தகதி நடந்த 5-ம் கட்ட விசாரணையின் போது, இரு அணியினரின் சட்டத்தரணிகளும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கடுமையாக போராடினர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புகளை வாசித்த சசிகலா தரப்பினர், அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க முடியாது என்று வாதிட்டனர். அத்துடன் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், சசிகலா அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக ஒருங்கிணைந்த அணியினர் குற்றம்சாட்டினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணைக்குப்பின் அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு 6-ந் திகதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கில் 6-ம் கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) தேர்தல் கமிஷனில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
Add Comment