இலங்கை பிரதான செய்திகள்

கடற்படையின் நடவடிக்கையால் காரை – மடத்துவளவு மக்கள் பரிதவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படையின் நடவடிக்கையால் காரைநகர் மடத்து வளவு மாதிரிக் கிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்காமல்போகும் நிலை எற்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்கு கடற்படை எடுக்கும் முயற்சிகளை நிறுத்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காரைநகர் மடத்து வளவு பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் போருக்கு முன்னரான காலப்பகுதியில் 44 வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர்.  போரின் காரணமாக அவர்களுடைய வீடுகள் அழிவடைந்து காணப்படுவதுடன் தற்போது அப்பகுதியை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளனர். அங்கு வசித்து வந்த மக்கள் வேறு இடங்களில் ஆங்காங்கே குடிசைகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாதிரிக்கிராமத்தை அண்டிய 126 ஏக்கர் காணி தற்போது கடற்படையினர் வசம் உள்ளது. இதில் 76 ஏக்கர் நிலப்பகுதியை கடற்படை ஏற்கனவே சுவீகரித்துள்ளது. ஏனைய பகுதிகளை எந்த காரணமும் இன்றி தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர்.

அந்த பகுதியில் அண்ணளவாக 6 ஏக்கர் காணியே மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் இந்திய அரசின் நிதி உதவியுடன் தலா 5 லட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கும் திட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது. அதில் யாழ் மாவட்த்துக்குரிய 24 வீடுகளை மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பொதுமக்களும் தமது கிராமத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர். ஆனால் குறித்த பகுதியை இதுவரை கடற்படையினர் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்காமல் முள்வேலி அமைத்து கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளனர்.

எதிர்வரும் சில நாள்களுக்குள் இந்த வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்றால் குறித்த திட்டம் ஏனைய பகுதிக்கு கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளது என  அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers