இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

குருதியில் குளித்த வாகரை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகளின் மீது, நவம்பர் 8,2006இல் இலங்கை இராணுவம் மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவித் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்தது.

இந்நிகழ்வின் விளைவாக 50க்கும் அதிகமான அகதித்தமிழர்கள் இறந்ததுடன் 100க்கும் அதிகமானோர் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வாகரைப் பகுதி, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு வடக்காக அமைந்துள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் இந்நகர் அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

வாகரையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் அடங்கலாக பலவித நிவாரண உதவிகள் வழங்கும் வழிகளை மூன்று கிழமையாக இலங்கை அரசு, தடுத்துவருவதாகவும் மேலும்,வாகரை குண்டுதாக்குதலில் காயமுற்றவர்களை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக கொண்டு செல்வதற்கு இராணுவ கெடுபிடியால் மூன்று மணித்தியாலம் வரை பிடித்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக அப்போதிருந்த எழிலன் கூறியிருந்தார்.

தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாகவும்,தவறுக்கு வருந்துவதாகவும் மேலும் எல்லாவற்றையும் விட நாட்டுப் பாதுகாப்பே முதன்மையானது எனவும் இலங்கை அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தாக்குதலுக்குள்ளான அகதி முகாமும் மக்களும் மனிதக் கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருந்தது.

இதனை தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றிலுமாக மறுத்தனர்.. இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தொடர்புடைய பாடசாலையிலும் அதனை அண்டியுள்ள பகுதியும் இராணுவத் தளமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவொரு அறிகுறிகளையும் தாம் காணவில்லை என தெரிவித்தது.

வாகரை நிகழ்வு இலங்கை வாழ் தமிழர் இடையில் அரசின் மீது பரந்த வெறுப்பையும் கோபத்தினையும் உருவாக்கி உள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இலங்கைகான UNICEF தலைமை அலுவலகதின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடாத்திய முன்னணி தமிழ் பாராளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மறுநாளே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடும்போது இந்நிகழ்வை காட்டமாக கண்டித்ததுடன் தாக்குதல் நடாத்தும்போது மக்கள் தொடர்பில் கரிசனமெடுக்குமாறும் அரசுக்கு அறிவுரை கூறியது.மேலும் அனைத்துலக மன்னிப்புச் சபையும் தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன் உரிய விசாரணைகளை நடத்தும்படி அரசினைக் கோரியது.

பதினொரு ஆண்டுகள் கடந்த போதும் வாகரை படுகொலைக்கு இலங்கை அரசு நீதியை வழங்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறும் நீதியை வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் தமிழர்களின் கண்களில் இருந்து குருதியில் குளித்த வாகரையின் காட்சிகள் நீங்கவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers