இலங்கை உலகம் பிரதான செய்திகள்

காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ?

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு  காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி சைலவன் கடுமையாக எச்சரித்துள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 25 இலட்ச ரூபாய் காசோலை வழங்கி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நேற்று முன்தினம் புதன் கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்ற போது , முறைப்பாட்டாளர் , காசோலை உரிமையாளரான சந்தேக நபரிடம் பெறவில்லை எனவும் , வேறு ஒருவரிடமே பெற்றதாக மன்றில் தெரிவித்தார். அதனை அடுத்து ,  முறைப்பாட்டாளர் குறிப்பிட்ட மற்றைய நபரிடமும் வாக்கு மூலம் பெற்று அவரையும் சந்தேக நபராக மன்றில் முற்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.
நீதவான் கட்டளையிட்ட நபருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்து நேற்றைய தினம் வியாழக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.  அந்நேரம் முறைப்பாட்டாளர் நேற்றைய தினம்   முற்படுத்தப்பட்ட நபரிடம் தான் காசோலையை பெறவில்லை எனவும் , வேறு ஒருவரிடமே காசோலையை பெற்று பணத்தினை வழங்கினேன் என கூறினார்.
அதனையடுத்து சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவினரை கடுமையாக பதில் நீதவான் எச்சரித்தார். பக்க சார்பின்றி நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அதற்கான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்தார்.
 
கொமிசன் வைக்கும் இடைத்தரகர்கள். 
அதேவேளை குறித்த வழக்கில் கொமிசனுக்கு காசோலை மாறி கொடுக்கும் நபர் ஒருவர் காவல்துறையினருடன் நெருங்கி செயற்பட்டு விசாரணைகளின் போக்கில் தலையிட்டு வருவதாக தெரிய வருகின்றது. யாழ்.நகரில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையில் வட்டிக்கான பண கொடுக்கல் வாங்கலின் போது சிலர் இடைத்தரகர்களாக செயற்படுகின்றனர். அவ்வாறு செயற்படும் நபர் ஒருவரே இந்த வழக்கின் விசாரணையின் போக்கில் செல்வாக்கு செலுத்துவதாக தெரிய வருகின்றது.
குறித்த வழக்கானது , காசோலை உரிமையாளர் தனது உறவினரான வர்த்தகர் ஒருவருக்கு நம்பிக்கை அடிப்படையில் காசோலையை வழங்கியுள்ளார்.  குறித்த வர்த்தகர் அந்த காசோலையை கொடுக்கல் வாங்கலுக்காக சக வர்த்தகர் ஒருவருக்கு அதனை கொடுத்துள்ளார்.  காசோலையை பெற்றுக்கொண்ட வர்த்தகர் கடந்த 09ஆம் மாதம் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த காசோலை எங்கே ? எவருடைய கையில் உள்ளது எனும் விடயம் காசோலையின் உரிமையாளருக்கோ அல்லது உரிமையாளர் கொடுத்த உறவினரான வர்த்தகருக்கோ தெரியவில்லை. அதனால் காசோலை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் , வங்கியில் சென்று காசோலையை நிறுத்தவும் செய்துள்ளனர்.
 காவல்துறையில் முறைப்பாடு. 
அந்நிலையில் குறித்த காசோலை வேறு ஒரு நபரிடம் கொடுக்கப்பட்டு , அவரிடம் இருந்து பணம் பெறப்பட்டு உள்ளது. அந்த காசோலைக்கு பணம் கொடுத்த நபரே கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினர் காசோலையின் உரிமையாளரை கைது செய்தனர். அந்த காசோலையின் பின்னால் , இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர் கையொப்பம் இட்டுள்ளார்.
கையொப்பம் இட்ட நபரிடமே தான் பணத்தினை கொடுத்து காசோலையை பெற்றுக்கொண்டேன் என முறைப்பாட்டாளர் கூறிய போதிலும் அவரிடம் காவல்துறையினர் எந்த விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாது காசோலை உரிமையாளரை கைது செய்து   தடுத்து காவலில் வைத்து இருந்தார்கள்.
இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர்  காவல்நிலையத்தில் அதிக செல்வாக்கு உள்ளவர் போன்று நடந்து கொண்டார். அவரே காவல்துறையினர் முன்னிலையில் காசோலை உரிமையாளர் தான் அதில் எழுதப்பட்டு உள்ள 25 இலட்ச ரூபாய் பணத்தினையும் வழங்க வேண்டும் என மிரட்டி உள்ளார்.
அதன் போது உரிமையாளர் சார்பில் நின்றவர்கள் தாம் நீதிமன்றை நாடி இந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகின்றோம் என்று கூறிய போதிலும் , நீதிமன்றுக்கு செல்வது வீண் கால தாமதம் , பணம் செலவழியும் மற்றும் நீதிமன்றினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட வேண்டி வரும் என மிரட்டும் தொனியில் காவல்துறையினர் முன்னிலையில் ,  காவலில் உள்ள நபரிடம் கூறியுள்ளார்.
அதேவேளை காசோலை உரிமையாளர் சார்பில் நின்றவர்களிடமும் மிரட்டும் தொனியில்  காவல் நிலையத்தில் வைத்து பொலிசார் முன்னிலையில் தற்போது மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை தந்தால் உடனே  காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க தன்னால் முடியும் எனவும் கூறியுள்ளார்.
அவரின் மிரட்டலுக்கு காசோலை வழங்கியவர்கள் மறுத்து , தாம் நீதிமன்றின் ஊடாக பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக கூறிய பின்னர் இரவு 11 .30 மணி வரை காவல் நிலையத்தில் தங்கி இருந்து காசோலை உரிமையாளருடன் பேச்சு நடத்தி உள்ளார். அவர் கேட்ட பணத்தினை வழங்க மறுத்துள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தைகள் மிரட்டல்கள் , அனைத்தும் யாழ்.காவல் நிலையத்தில் நடைபெற்ற போதிலும் அவை தொடர்பில் காவல்துறையினர் பாராமுகமாக நடந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் மறுநாள் காலையில் காசோலை உரிமையாளரை  காவல்துறையினர்  நீதிமன்றில் முற்படுத்தது காவல் நிலையத்தில் தடுத்து வைத்து இருந்த போது அங்கு சென்று இடைத்தரகர் என நம்பப்படும் நபர் காசோலை உரிமையாளிரிடம் இன்னமும் முறைப்பாடு எழுதப்படவில்லை , மூன்று லட்சம் ரூபாய் பணத்திணை தந்தால் நீதிமன்றுக்கு செல்லாமல் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம் என பேச்சு நடத்தி உள்ளார்.
அத்துடன் இன்றைக்கு பிணை கிடைக்காது. நீதிமன்றம் சென்றால் விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என மிரட்டும் தொனியிலும் கூறியுள்ளார். அவை எதற்கும் காசோலை உரிமையாளர் அடிபணியாத நிலையில் , முதல் நாள் மாலை 03 மணிக்கு கைது செய்த காசோலை உரிமையாளரிடம் மறுநாள் மதியம் 11 மணிக்கு பின்னரே வாக்கு மூலம் பெற்றனர். அதுவரையில் இடைத்தரகர் என சந்தேகிக்கப்படும் நபர் பேச்சு நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
பின்னர் காசோலை உரிமையாளரை மதியம் 2 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.
அந்நேரம் காசோலை உரிமையாளர் குறித்த காசோலையை கொடுத்த உறவினரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தினுள் நின்ற போது , நீ ஏன் இங்கே வந்தநீ ? உன்னை யார் வர சொன்னது என கேட்டு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் , வேறு ஒரு காவல்துறை உத்தியோகஸ்தரை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து அவரை கைது செய்யுமாறு கூறி அவரை கைது செய்து காவல்த நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
வழக்கினை அவதானித்த இடைத்தரகர். 
குறித்த வழக்கு விசாரணைக்கு நீதவான் எடுத்த போது , முறைப்பாட்டாளர்  தனக்கு எதிரே உள்ள சந்தேக நபரான காசோலை உரிமையாளரை யார் என்று தெரியாது எனவும் , இடைத்தகரர் என சந்தேகிக்கப்படும் நபர் வழக்கு விசாரணையின் போக்கினை  நீதிமன்றினுள் அமர்ந்து இருந்து அவதானித்துக்கொண்டு இருந்த வேளை முறைப்பாட்டாளர் பெயரை கூறி அடையாளம் காட்டி இவரிடம் இருந்தே காசோலையை பெற்றுக்கொண்டு பணத்தினை பெற்றுகொண்டேன் என அடையாளம் காட்டினார்.
அதை அடுத்து இடைத்தரகர் என நம்பப்படும் குறித்த நபரிடம் வாக்கு மூலம் பெற்று நாளை (நேற்றைய தினம் வியாழக்கிழமை) மன்றில் முற்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டு இருந்தார்.
அத்துடன் காசோலை உரிமையாளரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை காவல்துறையினர்  நீதவானின் கட்டளையை மதிக்காது , காசோலை உரிமையாளரின் உறவினரை கைது செய்து அவரிடம் வாக்கு மூலம் பெற்று நேற்றைய தினம் வியாழக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் காவல்துறையினர் முற்படுத்தினார்கள். அதனை அடுத்தே காவல்துறையினரை பதில் நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் இடைத்தரகர்கள். 
அதேவேளை வட்டிக்கு பணம் கொடுக்கும் சிலரிடம் சில இடைத்தரகர்கள் பணத்தினை பெற்று தமக்கும் கொமிசன் வைத்து அதிக வட்டிக்கு பணத்தினை வேறு நபர்களுக்கு கொடுக்கின்றார்கள். அவ்வாறு கொடுத்து அதிக வட்டியுடன் பணத்தினை வசூலிக்கின்றார்கள்.
அவ்வாறு பணத்தினை பெற்றுக்கொண்டவர்கள் பணத்திணை மீள வழங்க முடியாத நிலை ஏற்படும் போது , அவர்களை மிரட்டி பொலிஸ் செல்வாக்கு மற்றும் இதர செல்வாக்குகளை பயன்படுத்தி பணத்தினை வசூலிக்கின்றனர்.
இடைத்தரகர்களின் மிரட்டலால் தற்கொலை செய்கின்றனர். 
இவ்வாறான இடைத்தரகர்களுக்கு பயந்தே பணம் பெற்றவர்கள் தலைமறைவு ஆகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்வாறான இடைத்தரகர்கள் பொலிசாருடன் நெருங்கி இருப்பதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே அரியாலை பகுதியில் தாய் ஒருவர் மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவரும் இவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு 58 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.