Home இலங்கை Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி:-

Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி:-

by editortamil

யாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது.

ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் , அவர்கள் பின்னால் பலர் உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்து அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்தனர்

அந்த நிலையில் தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில் திருச்சி பொலிசாரினால் உரிய ஆவணங்கள் இல்லாது திருச்சியில் நடமாடிய குற்ற சாட்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் கைதினை அடுத்து சன்னா தலைமறைவாகினார். அவருடன் இணைந்த ஏனைய ஆவா குழு உறுப்பினர்களையும் போலீசார் தேடுவதானால் அவர்களும் தலைமறைவாகினார்கள்.

அந்த நிலையில் ஆவா குழுவில் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டத்தில் இருந்தவர்கள் தாமே ஆவா குழு என யாழில் நடமாடி வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கினார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு இடையில் தலைமைத்துவ சண்டை ஏற்பட்டு ஆவா குழு இரண்டாக பிளவு பட்டது. நிஷா விக்டர் தலைமையில் ஒரு குழுவும் தனு தலைமையில் ஒரு குழுவும் என இரு குழுக்களாக ஆவா குழு பிளவு பட்டது. நிஷா விக்டர் தலைமையிலான குழு Lycan எனவும் தனு தலைமையிலான குழு Rox எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.

இரு குழுக்களும் தமது முகநூல்களில் எதிர் தரப்புக்கு எச்சரிக்கைகள் விடுவார்கள் , பின்னர் இரு குழுக்களும் பகிரங்கமாக மிரட்டல்கள் விடுத்தது முகநூளில் மோதிக் கொள்வார்கள். நேரிலும் தமக்குள்ள பல தடவைகள் மோதிக்கொண்டு உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி நிஷா விக்டர் தலைமையிலான குழுவினர் மானிப்பாயில் உள்ள தனுவின் இருப்பிடத்தை தேடி சென்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.

அன்றைய தினம் மதியம் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் வைத்து கோப்பாய் காவற்துறை  நிலையத்தை சேர்ந்த இருவர் மீது நிஷா விக்டர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தி வாளினால் வெட்டினார்கள்.

அதனை அடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் ஆகஸ்ட் மாதம் 07 ஆம்திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விக்டர் நிஷா என அழைக்கப்படும் எஸ். நிஷாந்தன் (வயது 22) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதேவேளை அன்றைய தினம் (07 ஆம் திகதி) மனோஜ் , வினோத் , சுரேந்திரன் , பிரசன்னா , மற்றும் போல் ஆகிய ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யபப்ட்டனர். இவர்களின் கைதுகளை தொடர்ந்து யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருந்த போதிலும் சிறையில் ஆவா குழு மற்றும் தனு ரொக்ஸ் குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை காணப்பட்டது. சிறைச்சாலையில் சிறை கூடங்களில் இருந்து கைதிகளை வெளியில் திறந்து விடும் வேளைகளில் சிறைக்குள் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படும்.

அதில் ஆவா குழுவை சேர்ந்த ஆவா வினோதன் , நிஷா விக்டர் அளவெட்டி கனி மற்றும் தனு ரொக்ஸ் குழுவை சேர்ந்த மானிப்பாய் தனு ஆகியோருக்கு இடையில் முறுகல் ஏற்படும். அதனை சிறைச்சாலை உத்தியோகச்தர்களே கட்டுப்படுத்துவார்கள். அந்நிலையில் ஆவா குழுவை சேர்ந்த ஆவா என அழைக்கப்படும் வினோதன் அனுராதபுர சிறைச்சாலைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டார்.

அவற்றை தொடர்ந்து சில காலம் வாள் வெட்டு சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் குழுவுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அதன் போது தனு ரொக்ஸ் குழுவை இலக்கு வைத்தே தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. யாழில்.தேவையற்ற விதத்தில் கும்பலாக வீதிகளில் கூடுவோர் , சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை விசாரணைகள் செய்யுமாறும் , இரவு நேரங்களில் சுற்றுக்காவல் பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு பிணை கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின் போது அரச சட்டவாதி பிணை வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

யாழில்.மீண்டும் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் சந்தேக நபருக்கு பிணை வழங்க கூடாது என மன்றில் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அதனால் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மறுத்தார்.

பின்னர் மறுநாள் 16ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், யாழ்.மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அவசர கூட்டம் ஒன்றினை கூட்டி, அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் , வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெனார்ன்டோ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ண, பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ். தலைமை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோருடன் கலந்துரையாடினார்.

அதில், யாழில். அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடுகின்ற செயற்பாடகவே காணப்படுகின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

எனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத, சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அவசர பணிப்புரையை பிறப்பித்தார்.

அந்நிலையில் கடந்த 16ஆம் திகதி வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 15 சந்தேக நபர்களுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது.

அதேவேளை கடந்த 16ஆம் திகதி யாழ்.நீதிவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ்.நிஷாந்தன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் உள்ள பிறிதொரு வழக்குக்காக விளக்கமறியலில் தடுத்து வைக்க்கப்பட்டார்.

குறித்த வழக்குக்காக கடந்த 17ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் அழைத்து செல்ல ப்பட்ட போது நீதிமன்றில் இருந்து தப்பி சென்றார்.

தப்பி சென்ற நபரை தேடி பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தமையால் குறித்த நபரை ஒரு சில மணித்தியாலத்திற்குள் மீண்டும் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.

பொறுப்பற்ற சில இளைஞர் குழுக்களே வாள் வெட்டில் ஈடுபடுகின்றனர். அவ்வாறானவர்களை இனம் கண்டுள்ளோம். அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளாதாக வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது, தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்த வாரம் முதல் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட வுள்ள நிலையில் வாள் வெட்டு சம்பவங்களை காரணம் காட்டி பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படைகளின் சுற்றுக்காவல்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் யாழில் ஒரு வித பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More