இலங்கை பிரதான செய்திகள்

ஆவா குழு இக்ரம் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்


குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட மூவரையும் வரும் டிசெம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மூவர்  காவல்துறை  தடுப்பில் தீவிர விசாரணையில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து  காவல்துறையினரால்  தேடப்பட்டு வந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண தலைமைப் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக்  குழுவே சந்தேகநபர்கள் மூவரையும் கொழும்பில் கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்தது.  சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.  விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இதேவேளை, இக்ரம் உள்ளிட்ட மூவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்  காவல்துறையினர்  கூறினர்.

கொக்குவில், கோண்டாவில் மற்றும் நல்லூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இக்ரம் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் வழங்கிய தகவலின் அடிப்படையில் 6 வாள்கள், 2 கைக்கோடாரிகள் மற்றும் வெடிகுண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதாகவும்  காவல்துறையினர் ; கூறினர்.

‘வவுனியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் காவல் தடுப்பில் விசாரணையில் உள்ளனர். ஆவா குழுவின் மேலும் சிலரின் விவரங்கள் தெரியவேண்டி உள்ளன. அதனால் சந்தேகநபர்கள் மூவரும் நாளையே நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்’ என்றும் காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.
000

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் டிசெம்பர் 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

கடந்த மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.  இந்த இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக  காவல்துறையினரால்  மேற்கொள்ளப்பட்டு பின்னர் காவல்துறை மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று இடம்பெற்ற நிலையில்
சந்தேகநபர்கள்  சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப் பட்டனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டதனையடு;து சந்தேகநபர்கள் இருவரையும் டிசெம்பர் 14ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply