இந்தியா பிரதான செய்திகள்

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்பவருக்குமூன்றாண்டு சிறை


ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை அமுலில் உள்ளது.  இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில்  இந்த முத்தலாக் மற்றும் முன்னாள் கணவரை இரண்டாம் முறையாக மீண்டும் திருமணம் செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பலதார மணம் ஆகியவை தொடர்பாக இஸ்லாமிய சட்ட வாரியமும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டினை கடந்த மாதம் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருந்தன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய அமைச்சர்கள் குழு ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்துள்ளது.

முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது எனவும் அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு இந்த சட்ட மசோதாவின் பிரதிகளை அனைத்து மாநில அரசுகளின் பார்வைக்கும் இன்று அனுப்பி வைத்துள்ளது.

இந்த புதிய சட்ட மசோதா  மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளின்  பின்னர் எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.