இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தென்னைமரவாடி இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு – அகலா வடுக்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

நில ஆக்கிரமிப்பு மற்றும் இனத்துவ நெருக்குவாரங்களை எதிர்கொண்ட தென்னைமரவாடிக்கு 2014ஆம் ஆண்டு குளோபல் தமிழ் கட்டுரையாளர் பயணம் மேற்கொண்டு எழுதிய இப் பதிவை, இன்று தென்னைமரவாடி இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகள் மறுபிரசுரம் செய்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தென்னைமரவாடி கிராமம் எதிர்கொண்ட இன்னல்கள் இன்றும் தொடர்கின்றது என்பதே இக் கட்டுரை இன்றும் உயிர்த்திருப்பதன் முக்கியத்துவமாகும். ஆசிரியர்
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கிளாய் காணப்படுகிறது. கொக்கிளாய் நீரேரியும் பறையானாறும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றன. இவைகளின் கரையோரமாக தென்னைமரவாடிக்கிராமம் இருக்கின்றது. தென்னவன் என்ற தமிழ் அரசன் இந்தக் கிராமத்தை ஆண்டதினால் தென்னவன் மரபு வந்த அடி என்பதனால் தென்னைமரவாடி என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தக் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதுநீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு பூர்வீகக் கிராமம்.
முன்னொரு காலத்தில் மக்கள் மகிழ்வும் வளமும் கொண்டதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள். இக்கிராமத்தின் ஒரு பகுதி மணலாறுடன் தொடர்புபடுகின்றது. மணலாற்றுப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த சிங்களக்காடையர்கள் 1983 மார்கழி 3ஆம் திகதி அன்று இந்தக் கிராமத்தினுள் நுழைந்து இனக்கவலரவங்களை நிகழ்த்தினார்கள். 14பேர் அந்தக் கவலரத்தில் கொல்லப்பட்டார்கள். மூன்று பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள். பலர் கடத்திச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஈழப் பிரச்சினையில் முதலில் முதனில் இடம்பெயர்ந்த ஒரு கிராமம்தான் தென்னைமரவாடி.
இந்தக் கிராமத்தில் இனக்கலவரம் நடந்த அன்றையநாளில் நடந்ததை இன்னும் மறக்க முடியாது இருக்கிறார்கள் மக்கள். சந்திக்கும் ஒவ்வொருவரும் அதைக் குறித்துப் பேசுமளவில் அந்தக் கொடுமைகள் ஆழமாக நெஞ்சில் படிந்திருக்கின்றன. கிராமத்தின் மக்கள் தேடித் தேடி வெட்டிக்கொல்லப்படும்பொழுது 18 நாட்கள் காட்டுக்குள் பதுங்;கிகடந்து கொக்குத்தொடுவாயிற்குச் சென்று முல்லைத்தீவுக்குச் சென்றாக இந்தக் கொடிய நாட்களை மக்கள் நினைவுகூர்ந்தார்கள். அன்று இந்தக் கிராமத்தைவிட்டு துரத்தப்பட்ட மக்கள் 2010ஆண்டிலேயே மீள்குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் மக்களாகவே வந்து மீள்குடியேறியுள்ளனர்.
இனக்கலவரக் கொலைகளை இன்னமும் மறக்க முடியாத அளவிலேயே நிகழ்கால நிலமைகளும் காணப்படுகின்றன. இந்த மக்கள் கிராமத்தை விட்டு துரத்தப்பட்ட நாட்கள் முதல் அருகில் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராம மக்கள் இந்த மக்களின் வயல்நிலங்களில் வந்து பயிரச்செய்கையில் ஈடுபடுகிறார்கள்.தென்னைமரவாடிக் கிராமத்தின் ஒட்டுமொத்த நிலங்களையும் அபகரிப்பதற்காகவே இந்தக் கிராமத்தின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாதிருந்தார்கள். எனினும் தாமாகவே மக்கள் மெல்ல மெல்ல வந்து மீள்குடியேறினார்கள். இலங்கை அரசாங்கம் எல்லைகளில் உள்ள தமிழ் கிராமங்களை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வருகிறது. அதனால் அந்தக் கிராமங்களுக்கு எந்த விதமான அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல் அதiனையே ஒரு நடவடிக்கையாகவும் ஒடுக்குமுறையாகவும் செய்கிறது.
இந்தக் கிராமத்தையும் இன்னொரு மெனிக்பாம் என்றே சொல்வேன். பார்க்கும் இடமெல்லாம் தொண்டு நிறுவனம் அமைத்துக் கொடுத்த தற்காலிக குடிசைகள்தான் தெரிகின்றன. பெரும்பாலான குடிசைகள் இப்பொழுதே பிய்ந்திருக்கின்றன. காற்றும் மழையும் இழுத்துச்செல்லும் இந்தக் கூடாரங்களில்தான் தென்னைமரவாடிக் கிராம மக்கள் கடந்த 2010 முதல் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களின் வீடுகளை அழித்தொழித்த அரசாங்கம் இந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களையும் சுருட்டிக்கொண்டுள்ளது. ஒரு நிரந்தரமான வீடு அல்லது ஒரு பலமான வீட்டைக்கூட இந்தக் கிராமத்தில் காணமுடியவில்லை. போராலும் இனக்கலவரத்தாலும் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் கூடாரங்களில் தவிக்க அருகில் உள்ள 13ஆம் கொலனியில் குடியேற்றப்பட்ட போரால் எந்தப் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்காத பெரும்பான்மையின மக்களுக்கு இந்திய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் மக்கள் இல்லாமல் காடு மண்டிய இந்தக் கிராமத்தின் இரவுப் பொழுதுகளை இப்பொழுது யானைகளே ஆழ்கின்றன. இரவாகியதும் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு யானைகள் நுழைந்து மக்களிடம் உள்ள தற்காலிக வீடுகளையும் உடைத்துப்போடுகின்றன. இந்த யானைகளை நினைத்தே உறையும் இரவுகளுடன் இந்த மக்கள் வசிக்கின்றார்கள். அண்மையில் ஒரு சிறுவனுக்கு நடு இரவில் சுகவீனம் ஏற்பட்டது. அவனை வைத்தியசாலைககு கொண்டு செல்ல முடியாத நிலையில் யானைகள் சூழ்ந்துவிட்டன. அதிகாலையில் 13 வயதான அச்சிறுவன் இறந்துபோனான். மின்சாரமும் நல்ல பாதைகளும் வாகன வசதிகளும் இருந்திருந்தால் அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். எப்பொழுதும்ஆபத்தான நிலையிலேயே இந்தக் கிராமமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மணலாறில் உள்ள ஜனகபுர, சிங்கபுர, 13ம் கொலனி முதலிய சிங்களக் கிராமங்களுககு வரும் மின்சார இணைப்புக்கள் இந்தக் கிராமத்தையும் ஊடறுத்துச் செல்கின்றது. ஆனால் இந்தக் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்தக் கிராமம் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்படுகிறது.இந்தப் புறக்கணிப்பிற்குப் பின்னால்பெரும் அரசியல் உளவியல் உள்ளது. அதில் ஒன்று இந்த மக்களின் காணிகளைப் பறிக்க முற்படும் திட்டம். வயல் இல்லாமல் வாழ்வில்லை என்று சொல்ல வேண்டும். இந்தக் கிராம மக்களின் வயல்கள் இப்பொழுது இவர்களிடம் இல்லை. இந்த மக்கள் அந்த வயல் நிலங்களுக்காகவே இப்பொழுது வாழும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னைமரவாடி, கொhல்லைவெளி, துவாரமுறிப்பு என்று மூன்று குளங்கள் அடங்கப் பெற்ற கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு இன்று இந்த மக்களுக்கு அவர்களின் பூர்வீக வயல் நிலம் மறுக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பூர்வீகமாக வயல் விதைத்து வந்த இந்தக் காணிகளை 1983இற்குப் பின்னர் விதைத்து வந்தவர்கள் தொடர்ந்தும் விதைத்து வருகின்றனர். 2010ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறிய பின்னர் கடந்த மூன்று வருடங்களாக தமது வயல் நிலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகின்றார்கள். அடுத்த வருடம் அடுத்த வருடம் என்று சொல்லி ஒவ்வொரு ஆண்டும் சிங்ளவர்கள் வயல்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
பனிக்கவயல் சந்தியில் ஒரு தெரு மணலாறு வழியாக முல்லைத்தீவுப்பக்கம் செல்கிறது. இன்னொரு புல்மோட்டைப்பக்கம் செல்கிறது. பனிக்கவயல் சந்தியிலிருந்து தெனனைமரவாடிச்சந்தி வரை உள்ள வயற்காணிகளை இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் இல்லாமல் காடாக இருந்த இடங்கள் இப்பொழுது குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக வயல் நிலத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தென்னைமரவாடி மக்கள் விதைப்பதற்காக உழுதுவிட்டு வந்தால் மறுநாள் காலையில் சிங்களவர்கள் விதைத்துவிடுகின்றார்கள் அல்லது தென்னைமரவாடி மக்கள் உழுது விதைத்த நிலத்தை மீண்டும் உழுது சிங்களவர்கள் விதைத்து வருகின்றார்கள்.
இந்த நிகழ்வுகள் 30 வருடங்களாக அகதிகளாக நொந்த நிலத்தை இழந்து எங்கெங்கோ எல்லாம் அலைந்த மக்களை கடுமையாக நோகடிக்கின்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி இந்த மக்களுக்கு அநீதி இழைக்கின்றார். அவருக்கு அஞ்சி பிரதேச சபைச் செயலாளரோ, கிராம சேவகரோ எதையும் செய்கின்றார்களில்லை. காணி விடயத்தில் தலையிட்டால் இடமாற்றம் வரும் என்று எச்சப்படுகின்றது. இந்த மக்களை இந்தப் பகுதியை விட்டு துரத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிந்த மக்கள் இதை எதிர்கொண்டேதமது போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இலங்கை அரசும் அதன் நிர்வாகமும் சிங்கள அரசாகவே செயற்படுகின்றது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அந்த ஒடுக்குமுறை இந்தக் கிராமத்திலும் உள்ளது. காணிக்குள் இறங்கவேண்டாம் என்று காவல் துறை கட்டளையிட்ட நிலையில் சிங்களவர்கள் இறங்கி வயல் விதைக்கின்றார்கள். தமிழர்கள் வயல்களுக்குள் இறங்கினால், ஆமி வரும் பொலிஸ் வரும் அமைச்சர் வருவார் என்று தென்னைமரவாடி மக்கள் சொல்கிறார்கள். காணிக்குள் இறங்கவேண்டாம் என அறிவுறுத்திய பின்னரும் ஒருநாள் சிங்களவர்கள் 5 உழவு இயந்திரங்களைக் கொண்டு வந்து உழுதுகொண்டிருந்தார்கள். 119 இலக்கத்திற்கு பத்து முறை அழைத்துச் சொல்லியபோதும் காவல்துறையினர் வரவில்லை என்கிறார்கள் மக்கள்.
இந்த நில அபகரிப்புக் தலைவானாகச் செயற்படுகின்றார் சுசந்த புஞ்சி நிலமே. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சரான இவர் சிங்களப் பேரினவாத நோக்கத்தில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அவற்றில் சிங்கள மக்களை குடியேற்றத் துடிப்பவர். தற்பொழுது ஜனகபுர, சிங்கபுர போன்ற கிராமங்களின் காவலனாக இவரே உள்ளார். தென்னைமரவாடிக் கிராம மக்களின் வயல் நிலங்களை மாத்திரமல்ல அவர்களின் வாழ் நிலங்களையும் பறிப்பதே இவரது நோக்கம். இவரே முரண்பாடுகளையும் அபகரிப்புக்களையும் தூண்டி விடுகின்றார். தமது வயல்நிலங்களை கோரும் நடவடிக்கைக்கு எதிராக புஞ்சி நிலமே இராணுவப் புலனாய்வாளர்களை இறக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்தப் பகுதிக்கு ஒருமுறை வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் புலிகள் இருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா? அவர்கள் இல்லாத காரணத்தால்தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள் என்று பேசியதாக மக்கள் சொன்னார்கள். மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய இந்தக் கிராமத்திற்கு திருமலையிலிருந்து மின்சாரம் எடுத்துதருவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன் என்று சம்பந்தர் கூறி அன்றிரவே சிங்களத்தில் முற்றுமுழுதாக எழுதப்பட்ட மின்சார பிரதான இணைப்பு கல்வெட்டு ஒன்று திறக்கப்பட்டது. ஆனால் மின்சாரம் வரவில்லை.
83இல் இடம்பெயரும்பொழுது இந்தக் கிராமத்தில் சமார் 450 குடும்பங்கள் வசித்திருக்கின்றன. தற்பொழுது வெறும் 150 குடும்பங்களே திரும்பியிருக்கின்றன. நிலத்தை இழந்து வடக்கு கிழக்கு மாத்திரமின்றி பலர் வெளிநாடும் சென்றுவிட்டனர். லண்டனில் ஏழு வருடங்கள் வசித்துவிட்டு இந்த கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறார் விநாயகம். அவரின் ஒரு மகள் கனடாவிலும் ஒரு மகன் லண்டனிலும் வசிக்கின்றனர். அம்மா பிறந்து வளர்ந்த இடம். அம்மாவுக்கு அவர்களின் மூதாதையர்கள் கொடுத்த நிலம். இதை எப்படி விட்டுவிட்டு வசிப்பேன் என்று குறிப்பிட்டார்.விநாயகம். தற்காலிகமான அவரது வீட்டின் நடுவில் அம்மாவின் படத்தை மாட்டியிருப்தை காட்டினார். வேறு எதுவும் வேண்டாம் எங்களுக்கு இந்த நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் இந்தக் கிராம மக்களின் குரலாக இருக்கிறது.
இந்த ஊரில் இடிந்து போன பின்னரும் இன்னமும் தொன்மையை உணர்த்தும் கட்டிடங்களுடன் இருக்கிறது கோயில் கட்டிடம். கொட்டடி கந்தசுவாமி கோயில் எனப்படும் இந்தக் கோயிலை திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மிகவும் தென்மை வாய்ந்த இக் கோயில் பல நூறு வருடங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் உள்ள சில கிணறுகள்கூட அவ்வாறு பழமைய மிகுந்த கட்டிட கலையால் அமையப்பெற்றிருக்கிறது. கிரமாத்தில் பழைய வீடுகளில் எஞ்சியிருந்து இரண்டு வீடுகளின் சுவர் மாத்திரமே. அதில் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் விரைவில் நாடு திரும்ப இருக்கிறார்கள். வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த அவர்கள் இந்தக் கிராமத்திற்கே திரும்புகிறார்கள்.
இன்று எங்களுக்காக கேக்கிறதுக்கு ஆட்கள் இல்லை என்பதுதான் இச்சனங்களின் நெஞ்சில் பெருந்துயரமாய் இருக்கின்றது. திருமலை நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது தென்னைமரவாடிக் கிராமம். முல்லை நகரத்திலிருந்து கொக்கிளாயின் எதிர் கரையில் இருந்தாலும் மணலாற்றின் வழியாக வரும் தரைவழிப்பாதை ஊடாகவே தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வர வேண்டும். நகரங்களுக்கும் பெரு வழிகளுக்கும் மிகத் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தின் கைவிடப்பட்ட ஒடுக்குமுறை மிகுந்த காட்சி என்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் துயரத்தின் குறுக்குவெடடு முகமாகவே தெரிகிறது.
தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம்.
இந்தக் கிராம மக்களின் வயல் நிலங்களை மீட்பது மிகவும் அவசியமானது. வயல் நிலங்கள் இல்லாவிட்டால் இந்த மக்களுக்கு தொழிலோ வருமானோ இருக்காது. அதனால் இந்த மக்கள் இந்த இடத்தைவிட்டு இடம்பெயர நேரிடும். இந்த மக்களின் வயல்நிலங்களை அபகரிப்பவர்களின் நோக்கமும் அதுவே. ஏனெனில் வடக்கு கிழக்கிற்கு இடையில் உள்ள கிராமங்களை அபகரித்து அங்கு சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் தாயகத்தை பிளவுபடுத்துவதே திட்டம். தமது வாழ் நிலத்திற்காவும் வயல் நிலத்திற்காகவும் போராடும் தென்னைமரவாடிக் கிராம மக்களுக்காக அவசியமாகவும் அவசரமாகவும செயலாற்ற வேண்டும். ஏனெனில் இந்த கிராமத்தில் கைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு என்கிற தாயகத்தின் இருதயத்தில் கை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.