இந்தியா பிரதான செய்திகள்

விஷால் – ராதிகா – ராதா ரவி – சேரன் – ஆர்.கே.நகர் –- இந்திய ஜனநாயகம்…..


நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. தனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது என விஷால் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் நடிகர் விஷால் திடீரென தேர்தலில் போட்டியிட்டார். நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை மோட்டார் சைக்கிளில் சக நடிகர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்தார் விஷால்.

இந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. ஆரம்பத்திலேயே மருது கணேஷ், தினகரன், மதுசூதனன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் விஷாலின் மனுவை ஏற்றுக்கொள்வதில் திமுக, அதிமுக முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி இரண்டரை மணி நேரமாக நிறுத்தி வைத்திருந்தார். வேட்பு மனுவை தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன் மொழிய வேண்டும். அதில் இரண்டு நபர்கள் பெயர், விபரங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக தெரிவித்து திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அலுவலகத்துக்கு சென்ற விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் காவல் அதிகாரிகள் அவரை தேர்தல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர். அங்கு விஷால் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்தார். ஓடியோ ஒன்றையும் அளித்த அவர் தனது ஆதரவாளர்கள் 10 பேர் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதேவைளை ஆரம்பத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதனை அடுத்து விஷாலின் மீது சரமாரியான எதிர் விமர்சனங்களும், தூற்றுதல்களும் அவசர அவசரமாக வெளிவந்தன. விசால் தெலுங்கனா? கன்னடரா? மராட்டியரா? என்பது பிரச்சனை அல்ல.. இந்தியக் குடிமகன் ஒருவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.. அந்த வகையில் விசாலோ அல்லது வேறு எவரோ வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.. போட்டியிடுபவரை வேண்டுமானால் மக்கள் நிராகரிக்கமுடியும். தவிரவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராயாமல் ஊடகங்களைில் கருத்துக்களை அள்ளி வீசுவதும் பின்னர் மூக்குடைபடுவதும் இந்திய அரசியலில் சகஜமாகி விட்டது.

இங்கே முதலில் பொங்கி எழுந்தார் நடிகை ராதிகா..

மக்களுக்காக பேசுகிறேன், ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னவரின் மனு போலி கையெழுத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரின் உண்மையான நிறத்தை தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாக நடிகை ராதிகா கருத்து பதிவிட்டுள்ளார்.

பச்சோந்தி யார்? அதில் மக்களுக்காக உழைக்கிறேன், ஊழலுக்கு எதிராக சண்டையிடுகிறேன் என்பவரின் லட்சணம் இது தான். மக்கள் உண்மையான பச்சோந்தி யார் என்பதை தெரிந்து கொள்ளத் துவங்கியுள்ளனர் என்று ஒரு ருவீட்டில் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் ஒரு ருவீற்றில்..

ஊழலை எதிர்க்கிறேன் என்றார் மற்றொரு டுவீட்டில் ஸ்டார்ட், கேமரா ஆக்ஷன் இந்த வார்த்தையை கேட்பதற்கு முன்னரே சிலர் நன்றாக நடிக்கத் தொடங்கினர். மக்களுக்காக பேசுகிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி கடைசியில் போலி கையெழுத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளார். எல்லோரும் சிலரின் உண்மையான நிறம் என்ன என்பதை தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று மற்றொரு டுவீட்டில் ராதிகா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க விவகாரத்தில் கணவர் சரத்குமார், அண்ணன் பொதுச்செயலாளருக்கு எதிராககளமிறங்கினார் நடிகர் விஷால். நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஊழல் செய்ததாக விஷால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த முரண்பாடு ராதிகாவின் அவசர ருவீற்றுக்கு காரணமாகியது.

அண்ணன் ராதாரவியும் முந்திக்கொண்டு விஷாலை திட்டினார்…

தேர்தல் மனு நிராகரிப்பு முதல் கட்டம் தான். இனி அடுத்தடுத்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என தொடர்ந்து நிராகரிக்கப்படுவார். விரைவில் திரையுலகை விட்டே விரட்டப்படுவார். வேட்புமனு படிவத்தையே சரியாக நிரப்ப முடியாதவர் எப்படி தமிழக மக்களை ஆளலாம் என்று நினைக்கலாம் இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. போலி கையெழுத்து போட்டு தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது விஷாலுக்கு ? இதில் மட்டும் அல்ல ஏற்கனவே நடிகர் சங்கத்திலும் தனக்கு ஆதரவாக ஒரு சிலரை வைத்துக்கொண்டு இப்படித்தான் ஃபிராடு செய்தார். அவரது ஃபிராடு குறித்து கேள்விப்பட்ட இவரது ஆதரவாளர்கள் பலர் இப்போது இவரை விட்டு விலகி இருக்கிறார்கள். விரைவில் இதற்கு எல்லாம் விஷாலுக்கு பாடம் புகட்டப்படும். எனக் கூறினார்…

தயாரிப்பாளர் சங்கத்தில் முரண்டு கொண்ட சேரனும் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றதுடன் முந்திக்கொண்டு விஷாலை பேசி முக்கை உடைத்துக்கொண்டார்…
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அனுபவமின்மையும் அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக உள்ளது என்றும் சேரன் கூறினார்.

எனினும் தனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது என தெரிவித்து அனைவரையும் ஆடவைத்துவிட்டார்… விஷால்..

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers