இந்தியா இலங்கை

மனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் – கற்பனை அல்ல:-

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கற்பனை  அல்ல என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.

ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால், அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் குறித்த வழக்கு, உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இம்மாத இறுதியில் மத்திய அரசு தனது பிரமாண மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது:-

ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் டிஸ்கவரி கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விஞ்ஞான ஒளிபரப்புச் சேவையில்  இன்று காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். 16 மணி நேரத்தில், 11 லட்சம் பேர் அந்த முன்னோட்ட காட்சியை பார்த்தனர்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு, அந்த முன்னோட்டத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers