உலகம் பிரதான செய்திகள்

FACE BOOKல் டிரம்பை எச்சரித்த பின் நியூயோர்க் தாக்குதலை நடத்தினார் அகாயத் உல்லா…

அமெரிக்காவின்  நியூயோர்க்கில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில்  வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி  டிரப்பை எச்சரிக்கும் ஒரு பதிவை முகநூலில்  பதிவிட்டுள்ளார்.

”உங்கள் நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் டிரம்ப்” என அந்த பதிவு கூறுகிறது. நேற்று  செவ்வாய்க்கிழமையன்று அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, அகாயத் உல்லாவின் பதிவு குறித்த தகவல் வெளிவந்தது.

ஐ.எஸ் குழுக்களால் ஈர்க்கப்பட்ட 27 வயதான வங்கதேச குடியேறியான அகாயத் உல்லா, வெடிகுண்டை உடலில் சுமந்து சென்று  வெடிக்கச் செய்தார்.

கடந்த  திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து தளத்தில், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை அகாயத் உல்லா தன் உடலில் சுற்றிச் சென்று  வெடிக்கச் செய்தார்.

இந்த தாக்குதலில் அவரும் மற்ற மூவரும் காயமடைந்தனர்.

தீவிரவாத செயலுக்கு ஆதரவளித்தது, தீவிரவாத அச்சுறுத்தல் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அகாயத் உல்லா எதிர்கொண்டுள்ளதாக நியூயார்க் காவற்துறையினர்  ருவீட் செய்துள்ளனர்.

”ஐ.எஸ் அமைப்புக்காக நான் இதைச் செய்தேன்” என கைதுக்கு பிறகு அகாயத் உல்லா கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த முறைப்பாட்டில்  கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தான் தூண்டப்பட்டதாக அகாயத் உல்லா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

இந்த வெடிக்கும் சாதனத்தை தயாரிக்க கிருஸ்மஸ் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை உல்லா பயன்படுத்தியதாக முறைப்பாடு கூறுகின்றது. வெல்க்ரோ பட்டையின் உதவியால் இந்த சாதனத்தை உடலில் இணைத்துள்ளார்.

சந்தேச நபர் உல்லாவின் வீட்டில் சோதனை செய்தபோது, ”உலோக குழாய்கள், வயர்கள் மற்றும் உலோக திருகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடி பொருட்களுடன் இவை ஒத்துபோகின்றன” என அரசு வழக்கறிஞர் ஜூம் கிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”ஒரு வருடத்திற்கு முன்பே எப்படி வெடிகுண்டு செய்வது என்ற ஆராய்ச்சியைத் தொடங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தாக்குலை நடத்த அவர் பல வாரங்களாகத் திட்டமிட்டுள்ளார்” எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

‘அதிகளவு மக்களைக் கொல்ல” இந்த இடத்தையும் நேரத்தையும் அவர் தேர்ந்தேடுத்துள்ளார் என ஜூம் கூறுகிறார்.

அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குள் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் பங்காளதேசம் சென்றதாகவும்  பங்காளதேச அரசு கூறியுள்ளது.

மூலம் – BBC

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.