Home இலங்கை காசையும் இழந்து கண்ணையும் இழந்து உள்ளோம். – பாதிக்கப்பட்டவர்கள். சட்டநடவடிக்கை எடுக்க வலுவான சட்டஏற்பாடுகள் இல்லை. – வடமாகாண சுகாதார அமைச்சர்.

காசையும் இழந்து கண்ணையும் இழந்து உள்ளோம். – பாதிக்கப்பட்டவர்கள். சட்டநடவடிக்கை எடுக்க வலுவான சட்டஏற்பாடுகள் இல்லை. – வடமாகாண சுகாதார அமைச்சர்.

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பி கொள்வதற்காக மனிதாபிமானத்திற்கு எதிராக கூட செயற்படுகின்றார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்.நொதேர்ன் தனியார் வைத்திய சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை செய்து கொண்ட 10 கிருமி தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டனர்.
அது தொடர்பில் விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டத்தை அடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 குறித்த வைத்திய சாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கு சுகாதார அமைச்சினால் சீல் வைக்கப்பட்டது.அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதார அமைச்சினால் உருவாக்கபட்ட மூவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர் குழு குறித்த வைத்திய சாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களையும் குறித்த தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த விசாரணைகள் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கண் பார்வை முற்றாக இழப்பு. 
யாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கண் சத்திர சிகிச்சை பெற்றுக்கொண்ட பத்து பேருக்கு சிகிச்சையின் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டதில் தற்போது அவர்கள் கண் பார்வையை முற்றாக இழந்துள்ளனர்.
கற்கோளங்கள் அகற்றப்பட்டு விட்டன.  
அதில் நால்வருக்கு நோய் தாக்கம் அதிகமாக காணப்பட்டமையால் , அவர்களின் கற்கோளங்கள் வெளியில் எடுத்து அகற்றப்பட்டு உள்ளன. இந்த நிகழ்வின் பின்னர் வைத்திய சாலைக்கு நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். அத்துடன் அது குறித்து சரியான காரணங்களை கண்டு அறிய வேண்டும். வேறு நோயாளர்கள் தொடர்ந்து இது போல பாதிப்படைய கூடாது. என்பதால் அது தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகத்திற்கு சில ஆலோசனைகளை கூறி அதனை கடைப்பிடிக்க கூறியிருந்தோம்.
மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. 
நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகைதந்து குறித்த தனியார் மருத்துவ மனையின் சத்திரசிகிச்சை கூடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான மாதிரிகளை எடுத்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களையும் அழைத்து அவர்களிடமும் விசாரணைகளை நடத்தி தேவையான தரவுகள் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வைத்திய சாலை நிர்வாகம் அசண்டையீனம் 
அதேவேளை பாதிக்கப்பட்டவர்களை நானும் சந்தித்து கலந்துரையாடினேன். அதன் போது அவர்கள் சம்பவம் நடைபெற்ற பின்னர் வைத்திய சாலை நிர்வாகம் அது தொடர்பில் பெரியளவில் அக்கறை காட்டவில்லை தம்மை சரியான முறையில் அணுகவில்லை என என்னிடம் முறையிட்டார்கள். அத்துடன் தமக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்ட பின்னரும் அது தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் என்னிடம் முறையிட்டு உள்ளார்கள்.
ஆகவே இது தொடர்பில் சுகாதார திணைக்களம்  என்ன நடவடிக்கை எடுத்து என்பது தொடர்பில் அவர்களுக்கு நான் விளக்கம் கொடுத்து இருந்தேன். ஆரம்பத்தில் எமது ஆலோசனைகளை கேட்டு நடந்து இருந்தாலும், குறித்த காலத்திற்கு பிறகு கண் சத்திர சிகிச்சை தவிர ஏனைய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளனர்.
 வலுவான சட்டம் இல்லை. 
 
இங்கே நாம் தனியார் மருத்துவ மனைகளை கட்டுப்படுத்துவதோ , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலான வழிவகைகளை ஆராய்ந்து பார்த்த போது மத்திய அரசாங்கம் கூட தனியார் மருத்துவ மனைக்கு எதிராக நீதிமன்றங்களை நாட சரியான சட்டவலுக்கள் இல்லை அதனால் நீதிமன்றை நாட எனக்கு முடியவில்லை.
ஆனாலும் வைத்தியசாலை வடமாகணத்தில் அமைந்துள்ளது. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் வடமாகாண மக்கள் ஆகவே அது தொடர்பில் எமக்கு கரிசனை உண்டு.
சட்டவரைவுகள் உருவாக்கப்படவில்லை. 
எமது நாட்டை பொறுத்த வரை மதுபான சாலை புகையிலை விற்பனைகளை கட்டுப்படுத்துவதற்கு கூட வலுவான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் இங்கே மனிதர்களுக்கு வழங்கபப்டும் சிகிச்சைகளை வழங்கும் தனியார் மருத்துவ மனைகளை கட்டுப்படுத்த வலுவான சட்ட வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை. என்பது கவலைக்கு உரிய விடயமாகும்.
இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நடைபெற கூடாது நோயாளிகளில் அதிக அக்கறை தனியார் மருத்துவ மனைகள் கொண்டு இருக்க வேண்டும். அதற்கு உரிய கடப்பாடுகள் எல்லோர் மத்தியிலும் இருக்க வேண்டும்.
மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். 
ஆகவே மக்களும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். வைத்திய சாலைகளின் முதல் நோக்கம் மனிதநேய சேவை வழங்கும் இடமாகவே அதனை நாம் பார்க்கின்றோம். ஆகவே வருமானம் இரண்டாம் தரமானது. முதலில் சேவையை வழங்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகள் சில தனியே வருமானத்தை மாத்திரம் தேடுவதில் கவனம் செலுத்துகின்றார்கள். அங்கே பணி புரிகின்றன சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோள்ளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பி கொள்வதற்காக மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள்.
தவறு எங்கு உண்டு என்பதனை அறிய முடியவில்லை. 
அந்த விசேட குழு தன்னுடைய விசாரணைகளை முடித்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் அந்த விசாரணைகளின் அடிப்படையில் அறிக்கைகளை கையளிப்பார்கள். நேற்றைய தினம் எடுக்கபப்ட்ட மாதிரிகள் 50 நாட்களுக்கு பின்னர் எடுத்து உள்ளனர். அதனால் அது எந்த மாதிரி வர போகின்றது என்பது தெரியவில்லை. யாரின் பக்கம் தவறு உண்டு என்பதனையும் தற்போது அறிய முடியாது உள்ளது.
நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் தண்டி இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவம் தனியார் மருத்துவ மனையிலையோ , அரச மருத்துவ மனையிலையோ நடைபெற கூடாது. நோயாளிகளின் சிகிச்சை தொடர்பில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
மக்கள் கூட தங்கள் சிகிச்சைக்காக செல்லும் போது சில விடயங்களை உறுதிபடுத்தி , ஆலோசனைகளை பெற்று செல்ல வேண்டும் என கேட்டு கொள்கின்றேன். என மேலும் தெரிவித்தார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான  செல்லத்துரை செந்தில்நாதன். என்பவர் தெரிவிக்கையில் ,
14 நாட்களுக்கு தொற்று வெளியில் தெரியவில்லை. 
பத்து பேர் சத்திர சிகிச்சை செய்து கொண்டோம் அதில் ஒன்பது பேருக்கு உடனையே தொற்று ஏற்பட்டு விட்டது எனக்கு 14 நாட்களுக்கு தொற்று வெளியில் தெரிய வில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குள் தொற்று ஏற்பட்டு விட்டது என தெரிந்தும் தனியார் மருத்துவ மனை நிர்வாகம் எனக்கும் தொற்று ஏற்பட கூடிய சாத்தியம் இருக்கும் என்பதனை கவனத்தில் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இப்படியான அலட்சியத்தால் தான் எனக்கு இப்போது பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது இனிவரும் காலத்தில் இப்படியான அலட்சியங்கள் நடைபெற கூடாது.
கண் பார்வை போக போகின்றது என தெரிந்ததும் என் மனம் பட்டபாடு 
கண் பார்வை போக போகுது என தெரிந்த போது மனம் பட்ட பாடு மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. இப்படியான துர்ப்பாக்கிய விடயங்கள் மேலும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றேன். என மேலும் தெரிவித்தார்.
அது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத,  பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தெரிவிக்கையில்
விசாரணைக்கு 51 நாட்கள் தேவைப்பட்டனவா ?
விசாரணைகள் நடந்துள்ளன. இந்த விசாரணை நடைபெற 51 நாட்கள் தேவைபட்டு உள்ளது. இருந்த போதிலும் இப்போது ஆவது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளனவே அதுவே எமக்கு சந்தோசம். இந்த விசாரணைகள் ஊடாக எமக்கு நீதி கிடைக்க வேண்டும்.
காசையும் இழந்து கண்ணையும் இழந்து நிற்கின்றோம். 
இனிவரும் காலத்தில் இப்படியானதொரு விடயம் நடக்க கூடாது. அதனை தான் எல்லோரும் வலியுறுத்துகின்றோம். பெருமளவில் செலவு செய்தே இந்த சத்திர சிகிச்சையை செய்தோம். இப்போது நாம் காசையும் இழந்து கண்ணையும் இழந்து நிற்கின்றோம்.
எமக்கு சரியான நீதியை பெற்று தர வேண்டும். இது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
விசாரணைகள் 51 நாட்களுக்கு பின்னர் நடந்து உள்ளன. ஆனால் இன்று வரை என்ன நடந்தது என யாரும் எமக்கு கூறவில்லை. குறித்த தனியார் மருத்துவ மனையில் தான் விசாரணைகள் நடைபெற்றன.
வைத்திய சாலை நிர்வாகம் தவறுக்கு வருந்தவே இல்லை. 
விசாரனைக்காக எம்மை வைத்திய சாலைக்கு அழைத்து இருந்தனர். நாம் அங்கே போன போது , எம்மை கண்டு தவறு நடந்து விட்டது என கூறி எம்மிடம் வைத்திய சாலை நிர்வாகம் , வைத்தியர்கள் நலம் விசாரிப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எம்மை அவர்கள் கண்டு கொள்ளாத நிலையே காணப்பட்டது. எம்மை அவமரியாதை படுத்தும் விதமாகவே அந்த தனியார் மருத்துவ மனை நிர்வாகம் நடந்து கொண்டது. அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டது எமக்கு மிகுந்த மனக்கவலையை தந்திருந்தது.
கண் பறிபோனவர்களுக்கு என்ன செய்ய போகின்றீர்கள் ? 
விசாரணை குழுவிடம் மூன்று கோரிக்கைகளை வைத்து இருந்தோம். 51 நாட்கள் கடந்த நிலையிலும் என்ன நடந்தது என எவருக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது என்பதனை வெளிப்படையாக தெரிய படுத்த வேண்டும் , கண் பறிபோனவர்களுக்கு என்ன செய்ய போகின்றீர்கள் ? , மற்றும் இனிவரும் காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More