இந்தியா பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை – புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அங்கீகாரம்:-

முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, அல்லது மின் அஞ்சல், குறுந்தகவல், வட்ஸ்அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது எனவும் அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதாக்கு மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

இது குறித்த முன்வரைபை ஏற்கனவே தயாரித்த மத்திய அரசு இந்த சட்ட மசோதாவின் பிரதிகளை அனைத்து மாநில அரசுகளின் பார்வைக்கும் அனுப்பி வைத்ததுடன் இதுதொடர்பாக, உடனடியாக கருத்து தெரிவிக்குமாறும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்னர் இன்று குளிர்கால கூட்டத்தொடரின்போது இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை நடைமுறையில் உள்ளது.  இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் மேல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பழங்காலத்தில் இருந்து இன்னொரு நடைமுறையும் வழக்கில் இருந்து வருகிறது. அதாவது, இஸ்லாமிய தம்பதியர் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பின்னர், மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் ‘ஷரீஅத்’ சட்டத்தின்படி அதற்கென தனி வழிமுறை இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, விவாகரத்தான பெண் தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால், நேரடியாக அவருடன் சேர்ந்து வாழ முடியாது.

அதற்கு முன்னதாக, இன்னொரு நபரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்துக்கு பின்னர் 40 நாட்கள் ‘இத்தாத்’ என்னும் விதவைக்கோலம் பூண்டு, அதன் பின்னரே தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் முன்னாள் கணவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.

‘நிக்காஹ் ஹலாலா’ என்றழைக்கப்படும் இந்த நடைமுறையை இந்தியாவில் உள்ள தற்கால இஸ்லாமிய பெண்களில் பலர் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், இதர சில அமைப்புகளும் அவற்றுக்கு எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.

இதேவேளை, இந்த முத்தலாக் மற்றும் முன்னாள் கணவரை இரண்டாம் முறையாக மீண்டும் திருமணம் செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பலதார மணம் ஆகியவை தொடர்பாக இஸ்லாமிய சட்ட வாரியமும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டினை கடந்த மாதம் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தன.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட், எஸ்.எகே. கவுல் ஆகியோரை கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வின்முன் விரைந்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்க முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் முறை மிகவும் மோசமானது என்று குறிப்பிட்டிருந்தது.

அப்போது, முத்தலாக் முறையை எதிர்த்து இவ்வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஃபர்ஹா ஃபைஸ், ‘நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களைப்போல் சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்றுமுறை நீதிமன்றங்களை நடத்தி வருவதாகவும், அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்களை அணுக இயலாதவாறு இவர்கள் தடைக்கல்லாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது முறையீட்டை கருத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், முத்தலாக், ‘நிக்காஹ் ஹலாலா’ மற்றும் பலதார திருமணங்கள் இவை மூன்று விவகாரங்களையும் இணைத்தே விசாரிக்க இந்த நீதிமன்றம் நினைக்கிறது. ஆனால், போதிய கால அவகாசம் இல்லாததால், தற்போதைக்கு முத்தலாக் விவகாரம் தொடர்பாக மட்டும் விரைந்து விசாரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ‘நிக்காஹ் ஹலாலா’ மற்றும் பலதார திருமணங்கள் தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும். அதற்கு முன்னதாக முத்தலாக் விவகாரத்தில் ஆறுநாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய விரும்புவதாகவும் நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முத்தலாக் முறையை ஆதரிப்பவர்களின் வாதத்தை பதிவு செய்ய மூன்று நாட்களும், எதிர்ப்பவர்களின் பிரதிவாதத்தை பதிவு செய்ய மூன்று நாட்களும் ஒதுக்கப்பட்டது.

சல்மான் குர்ஷித் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி இந்த விசாரணையை மீண்டும் தொடங்கியது.

இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் முத்தலாக் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.

முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படியான மாற்று வழி என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய அமைச்சர் குழு ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்திருந்தது. அந்த சட்ட வரைiபிற்கே மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply