இலங்கை பிரதான செய்திகள்

பின்னால் யாருமில்லை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ்ஜின் பின்னணியிலேயே வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம் .கே சிவாஜிலிங்கம் வெளியிட்ட கருத்தில் எவ்வித உண்மையுமில்லை. அவரோ அல்லது வேறு எவருமோ எம் பின்னாலில்லை என வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகைப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் கட்டியுள்ள சுயேட்சைக் குழுவின் தலைவரும் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவருமாகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வல்வெட்டித்துறை நகர சபையை கடந்த முறையில் ஆட்சி செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று சொல்லித் தெரிய வேண்டியில்லை. பதவிகளுக்காக அடிபட்டு, நகரசபையை முடக்கி இறுதியில் கலைக்க செய்திருந்தனர். கூட்டமைப்பின் தலைமைத்துவம் கூட குறித்த விடயத்தை தீர்த்து வைக்காதது கவலைக்குரிய விடயமும் நடந்தேறியது.

இத்தகையதொரு பின்னணியிலேயே பேரழிவுகளைத் தந்த யுத்தத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறைப் பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், வல்வெட்டித்துறையிலுள்ள மக்களின் ஆதரவுடன், கடந்த காலங்களில் பொது வாழ்வில் தம்மை அர்ப்பணித்து மக்களிடத்தே நன்மதிப்பை பெற்றவர்களே ஒன்றிணைத்தே சுயேட்சையாகப் போட்டியிடுகிறோம்.

இது தவிர, போர்க் காலச் சூழ்நிலையில், எந்தவொரு அரசியல் தலைவர்களும் இல்லாத நிலையில், உயிராபத்துகளுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு நாமே பல்வேறு உதவிகளைச் செய்தோம் என அனைத்து வல்வை மக்களுமே அறிவர்.

இந்நிலையில், வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த முறை நடந்த நிகழ்வுகளால் மிகவும் அதிருப்தியடைந்த மக்கள் எமக்கு ஆதரவை வழங்கி வரும் நிலையில், கடந்த தடவை நகர சபையை முடக்கி விட்டு இம்முறையும் மக்கள் தமக்கு ஆதரவளிப்பார்கள் என நினைப்பது பகற்கனவு மாத்திரமின்றி நப்பாசையாகும்.

ஆக, தமது தோல்விக்கு அஞ்சியே இவ்வாறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆக மொத்தத்தில் எமக்கு ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. ஊரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு களமிறங்கியதன் காரணமாக எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் ஆதரவுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற்று தடைகளைத் தகர்த்து வல்வெட்டித்துறையை முன்னேற்றுவோம்” என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers