இந்தியா இலக்கியம் பிரதான செய்திகள்

சாகித்ய அக்கடமி விருது மறுப்பு:-

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும். அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.

இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:
’’ எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’

‘’ அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.
….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம். ‘’

இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபிற்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப், அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.

அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாதமும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை எல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக் கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும். இன்குலாப்பிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும். இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.

இறுதியாக இன்குலாபின் வரிகளில்…

‘’விருதுகள் கௌரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’..

இவண்,
இன்குலாப் குடும்பத்தினர்.,
கமருன்னிஸா
சா.செல்வம்
சா.இன்குலாப்
சா.அமினா பர்வீன்

(நன்றி – சபேசன் – FB)

மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சாகித்ய அகாடெமி எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். மேலும் நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். தெளிந்த அரசியல் பார்வையும் அடர்த்திய இலக்கிய ஆளுமையும் இவரது கவிதைகளின் பலம்.

விருதுக்கு தேர்வாகியுள்ள ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலை சென்ற ஆண்டு அகரம் பதிப்பம் வெளியிட்டுள்ளது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஔவை, மணிமேகலை உள்ளிட்ட 6 நாடகங்களும் எழுதி மேடையேற்றியுள்ளார். அவையும் நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும் 1 சிறுகதைத் தொகுப்பும் 2 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers