Home இலங்கை என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017

என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சென்ற மூன்று வாரங்களாக சில பல காரணங்களுக்காக வாரத்துக்கான கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டு பதிலிறுக்கப்படவில்லை.
இவ்வாரத்துக்கான கேள்வி இதோ

கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?

பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.  நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.

சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10ஃ02ஃ2015ல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையுங் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால்ப் பறிபோனதென்று.

நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும். மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில்த் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உய்த்துணர்ந்தேன்.

கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. ‘நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது’ என்பார்கள் அல்லது ‘நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்’ என்பார்கள். அவ்வாறு கூறி உறுப்பினர்களைச் சதி வேலைகளில் ஈடுபடுத்தியமையும் உண்டு. தலைமையுடன் முரண்பட்டால் கட்சி ஒழுக்கத்தை மீறியமைக்குக் காரணம் கேட்பார்கள். இந்தப் பின்னணியில்த் தான் உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டும்.

நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன்.

தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ள10ராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை’ என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது. ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவ்வௌற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்.
அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது.

உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும்.

சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால்த்தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை. நாங்கள் இது வரையில் இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.

அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள். பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது ஆர அமர சிந்திக்கத் தொடங்குகின்றோம்.

சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். கௌரவ சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் கௌரவ சம்பந்தனும் கௌரவ சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும். எம்மவருட் சிலர் ‘அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கட் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.

இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்குப் இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை ஒரு இருபது வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.

இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில்த்தான் வைத்துப் பேசுவார்கள். ‘இருந்தார்கள் இப்பொழுதில்லை. ஒரு சிலரே ஆங்காங்கே உள்ளனர்’ என்பார்கள். இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?

வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் ‘வன்முறை வரும்’ என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல். போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் ஸ்ரீலங்காவின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுகாறும் பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை. இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வருவார்களாக! என்னைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க தம்மை நேர் வழிக்கு மாற்றிக் கொள்வார்களாக! நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More