தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு திடீர் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்காசி அருகே சிந்தாமனி, வடகரை, மேலகரம், பெரிய கோவில் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டுள்ளன. இவை நில அதிர்வு என உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதேபோல் கேரளாவின் புனலூர், ஆரியங்காவு, தென்மலை பகுதிகளிலும் இத்தகைய நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.
இந்த நிலநடுக்கமானது மிக மிக மிதமானது. ரிக்டரில் மிக மிக குறைவாக 2 அலகுகளாக பதிவாகி இருக்க வாய்ப்பிருக்கிறது என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களிலும் மேக்கரை, அடவிநயினார் அணைப் பகுதிகளில் இதே போல் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Add Comment