இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

“எழுதத் தெரிஞ்சால் போதாது. புத்தியாயும் எழுதவேணும். அதன்படி நடக்கவும் வேணும்”

சனி முழுக்கு 14 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

போன மாதம் வெளிநாட்டிலை இருந்து வந்த சிநேகிதன் ஒருத்தன் என்னைக் கேட்டான் “எங்கையேன் ஒரு பொதுக்காரியங்கள் செய்யிற இடத்தைக் காட்டு. நான் ஒரு டொனேஷன்  குடுக்க வேணும்” எண்டு. “சரி வா!” எண்டு ஒரு ஓட்டோ பிடிச்சு ஆளை ஏத்திக்கொண்டு போனன். போயேக்கை ஒரு கடையிலை நிப்பாட்டி பெரிய என்வலப்பொண்டை அவன் வாங்கினான். அதுக்கை ஐயாயிரத்தின்ரை தாள் மூண்டை வைச்சு ஒட்டினார். பிறகு அந்த நிறுவனத்தின்ரை பெயரை அதிலை எழுதி ஒட்டிப் போட்டு “பெரிய எமவுண்ட் ஒண்டைக் குடுக்கப்போறன்” எண்டு சொல்லிக்கொண்டு வந்தவரை அந்த நிறுவனத்துக்கு முன்னாலை கொண்டுபோய் விட்டன். ஓட்டோவாலை இறங்கின உடனை அங்கை நிண்டவை எங்களை வரவேற்றுக் கொண்டுபோய்த் தலைவரைச் சந்திக்க  விட்டினம்.அவர் கதைக்கேக்கை  தாங்கள் கட்டிடம் கட்ட நிதி சேகரிக்கிறம் எண்டதைச் சொன்னார். “இதை உங்கடை கட்டிட நிதிக்கெண்டு வைச்சுக் கொள்ளுங்கோ” எண்டு  நான் கூட்டிக் கொண்டு போனவர் தலைவரிட்டை என்வலப்பை நீட்டினார் . “இதிலை நீங்கள் தாற தொகை, உங்கடை, பெயர், விலாசம் எண்டு எல்லாத்தையும் விபரமா எழுதிவிடுங்கோ.” எண்டு அவரிட்டை கட்டிடத்துக்கான நன்கொடைப் புத்தகத்தை அந்த நிறுவன்தின்ரை தலைவர் குடுத்தார். அதை விரிச்சுப் பாத்தவருக்குத் தலையிலை ஆரோ சுத்தியலாலை அடிக்கிறமாதிரி இருந்திருக்க வேணும்.ஏனெண்டால் அதிலை நன்கொடை குடுத்த எல்லாரும் பெரிய ஒண்டு, ஓண்டரை எண்டுதான் எழுதியிருந்தவை. அதிலும் அதிலை கனபேர் உள்ளூர் காறர். இவர் தன்ரை பதினைஞ்சைப் “பெரிய தொகை” எண்டு சொல்லிக் கொண்டெல்லே வந்தவர்? அதுகும் வெளிநாட்டிலை இருந்து வந்தவர் அவர். ஆளுக்கு வெக்கம் வந்திட்டுது. உடனை அந்தத் தலைவரிட்டைச் சொன்னார் “நான் அடுத்தமுறை வரேக்கை ஒரு பெரிய தொகை தாறன். இப்ப இதை உங்கடை ஏதாவது சின்னச் செலவுக்கு வைச்சுக் கொள்ளுங்கோ” – எண்டு சொல்லிப்போட்டு எழும்பி வந்திட்டார். வாற வழியிலை ஆளுக்குச் சொன்னன் “குறை நினையாதை மச்சான். வெளியிலை இருந்து வாற பலர் நினைக்கிறது தங்களிட்டைத்தான் பெருந்தொகை பிழங்குதெண்டு. இஞ்சை அதைவிடப் பெரிய திமிங்கிலங்களும் இருக்கினம். ஆனால் தயவு செய்து கேளாதை எப்பிடி அவை உழைச்சவை எண்டு. ஏனெண்டால் அந்த விபரம் என்னட்டை இல்லை. எனக்குத் தெரியாது.” – எண்டன். ஆள் முச்சு விடேல்லை.

வாயை விடேக்கை யோசிச்சுக் கவனமா விடவேணும். விட்டாப்பிறகு பிடிக்கேலாது. இதுக்கெண்டு வள்ளுவர் ஒரு தனி அதிகாரமே எழுதியிருக்கிறார். முதலிலை ஒரு சொல்லைச் சொல்லமுன்னம் இரண்டு தரம் யோசிக்க வேணும். நான் சொல்லுறதாலை என்ன விளைவு வரும்? அது ஆற்றையேன் மனசை நோகப் பண்ணுமோ? அதாலை ஏதேன் வில்லங்கம் வருமோ? இதையேன் இப்ப சொல்லுறன் எண்டால், போன கிழமை ஒரு பிரகண்டம் நடந்துபோச்சுது. அதாலை ஒரு குழப்பம் வரப்பாத்திது. நல்ல காலம். சனம் குழம்பினாலும் எல்லாரும் படிச்சவையள் எண்ட படியாலை சமாளிச்சுப்போட்டினம்.

போன ஞாயிற்றுக்கிழமை நல்லூரிலை முதலமைச்சற்றை கூட்டம். கரவெட்டியிலை ஒரு புத்தக அறிமுகவிழா. “நல்லூருக்குப் போறம். வாவன் அண்ணை” எண்டு என்ரை சிநேகிதர் கேட்டவை. “இல்லை எனக்கு இலக்கியந்தான் முக்கியம்” எண்டு சொல்லிக்கொண்டு கரவெட்டிக்குப் போனன்.  அதுகும் அடை மழையிலை நனைஞ்சு கொண்டு. அங்கை நாலு புத்தகத்தை ஒருதர் எழுதி அச்சிட்டுக் கொண்டு வந்து எங்கையோ வெளியிட்ட பிறகு அண்டைக்குக் கரவெட்டியிலை அறிமுகவிழா நடத்தினவர். அவர் வெளிநாட்டிலை இருந்து வந்தவர் எண்டு சொல்லக் கேள்வி. சத்தியமா எனக்கு அழைப்புக் கிடைக்கேல்லை. அறிஞ்சுதான் போன்னான். விருந்தினர் கொரவிப்பு, மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை,வெளியீட்டுரை, நூல்களின் அறிமுகம்,நூல்களின் ஆய்வுரையை ஐஞ்சுபேர் செய்தவை. அறிமுக விழாவிலை வெளியீட்டுரைதான்  செய்தவை. அறிமுக உரையை ஒழிச்சுப்போட்டினம்.கடைசியா ஏற்புரையையும் நன்றி உரையையும் அந்தப் புத்தகத்தை எழுதினவர் செய்தார்.

அங்கைதான் நிகழ்சி சூடேறிச்சுது.அப்பதான் எனக்குத் தெரியும் அவற்றை அழைப் பிதழிலை “வருகை தருவோருக்குப் பிரதிகள் இலவசம்” எண்டு முகப்பிலை ஒரு குறிப்புப்போட்டிருந்தவர் எண்டு. அவர் தன்ரை உரையிலை சொன்னார் “இலவசம் எண்டபடியாலைதான் இவ்வளவு பேரும் வந்திருக்கினம்” எண்டு. போன வைக்குச் சீலை உரிஞ்சு நிலத்திலை விழுந்த மாதிரிப் போச்சுது. எனக்குப் பக்கத்திலை இருந்த என்ரை நெல்லியடிச் சிநேகிதம் அவை அங்கை குடுத்த அந்த நாலு புத்தகத்தை யும் கொண்டு போய் அந்த எழுத்தாளரிட்டையே திருப்பிக் குடுத் திட்டுப் “போட்டு வாறன்”  எண்டு சொல்லிப் போட்டு வந்திட்டான். சத்தியமாச் சொல்லுறன் புத்தகம் இலவசமெண்டதுக்காக நான் அங்கை போகேல்லை.பிறகு நானும் புத்தகத்தை அவற்றை கையிலை குடுக்கேல்லை. மேடையிலை இருந்த மேசையிலை வைச்சிட்டு வந்திட்டன்.ஆனால் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டவர். வாய் விட்டப் பிறகு தலைகீழா நிண்டென்ன? குத்துக்கரணம் அடிச்சென்ன? சொன்னது சொன்னதுதானே? திருப்பிப் பிடிச்சு விழுங்கேலுமோ? ஏன் புத்தகங்களைக் கொண்டு வரேல்லை எண்டால் அதை வாசிக்க வாசிக்க அவர் சீலை உரிஞ்ச ஞாபகந்தான்  வரும். என்ன?

ஆனால் அந்த மனுசன் ஒண்டைச் செய்திருக்கலாம். புத்தகம் இலவசம் எண்டு அழைப்பிதழிலை போடாமல். நிகழ்சியிலை வந்திருக்கிற சனத்தைப் பாத்து “என்ரை நிகழ்சிக்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறியள். சந்தோஷமாக் கிடக்கு. ஆனபடியாலை எல்லாருக்கும் புத்தகத்தை இலவசமாத் தரப்போறன்” எண்டு ஒரு சொல்லைச் சொல்லிப்போட்டுப் புத்தகங்களைக் குடுத்திருந்தால் அந்த ஆள் எங்கையோ போயிருப்பர் எல்லே?”. எழுதத் தெரிஞ்சால் போதாது. புத்தியாயும் எழுதவேணும். அதன்படி புத்தியாயும் நடக்கவும் தெரியவேணும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.