இந்தியா பிரதான செய்திகள்

2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பவேயில்லை :

2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது  புதைந்து கிடப்பதே.   எனது  ஒரேயொரு கவலையாகும் இன்று நடந்திருப்பவை  சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும்  என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ . ஆனந்தசங்கரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு

முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும்போது நான் இந்த அறிக்கையை விடுவதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். 60 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் இருக்கும் மிக மூத்த அரசியல்வாதி என்பதால் சில விடயங்கள் பற்றியும் சில நபர்கள் பற்றியும் எனது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கடமை எனக்குண்டு.
ஆபிரகாம்லிங்கன் அவர்கள் ஜனநாயகத்தை, மக்களுக்காக மக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் என பரிந்துரைத்துள்ளார். ஜனநாயக ஆட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுபான்மையினரின் சம்மதத்துடன் நடப்பதே ஜனநாயக ஆட்சியாகும். காலம் காலமாக இலங்கையில் ஜனநாயக ஆட்சி நூற்றுக்கு நூறு வீதம் நடந்ததென நான் கூற வரவில்லை. இடைக்கடை சிறியதாகவும், சிலவேளைகளில் கூடுதலாகவும் ஜனநாயகம் தடம்புரண்டதுண்டு.
ஆனால் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ம் திகதி நடந்த பாராளுமன்ற  தேர்தலில்தான் ஜனநாயகம் முற்றுமுழுதாக தடம் புரண்டதாகும். இது எம்மக்கள் அநேகருக்கு தெரிந்த விடயமாகும். சிலர் தெரிந்தும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அனைவரும் கிளர்ச்சி செய்திருக்க வேண்டும். ஆனால் உள்ளுர் வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களின் மறு வாக்கெடுப்புக்கு விடுமாறு விடப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஜனநாயகம் நம்நாட்டில் இது போன்று முன்பு எப்பொழுதும் சீரழிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் அன்றைய அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கடப்பாடு இருந்தது. குறிப்பிட்ட ஒரு சிலரின் தலையீட்டால் நடைபெறவில்லை.
.
தென் இலங்கை கட்சிகள் எதுவும் 2004ம் ஆண்டுத் தேர்தலில் வடக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வன்முறைக் கொள்கையுடன் இயங்கிய ஒரு குழு, தமிழத் தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர, வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களையும் எதுவித பிரச்சாரத்திற்கும் ஈடுபடவிடாது தடுத்தனர். பணம் கொடுத்து பத்திரிக்கை விளம்பரங்கள் போடுவதற்கு கூட  அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில் காலையில் தோல்வி அடைந்தவர் மாலையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆள்மாறாட்ட வாக்களிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஒரு வேட்பாளர் 120,000 க்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே போல் பலர் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாக்குகளைப் பெற்றனர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் திருவாளர்கள் இரா. சம்பந்தன் அவர்களும் மாவை சேனாதிராசா அவர்களும் ஏற்க வேண்டும். அத் தேர்தலில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகம் இன்றும் புதைக்கப்பட்டே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கௌரவமாக செய்திருக்க வேண்டியது மிக்க கண்ணியமான முறையில் பதவிகளைத் துறந்திருக்க வேண்டும். ஆனால்; அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் 1983ம் ஆண்டு பாராளுமன்ற காலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடித்ததை ஆட் சேபித்து பதவிகளை துறந்த சம்பவம் பற்றி
குறிப்பிடப்படுவது பொருத்தமாக இருக்கும்.
2010ம் ஆண்டு தேர்தலில் கலந்து கொண்ட அதே குழு 10 தொடக்கம் 15 சதவீத வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இத்தேர்தலிலும் ஜனநாயகம் தன் முன்னய இடத்திற்கு திரும்பவில்லை. இக்கால கட்டத்தில்தான் சிலரின் எண்ணத்தில் ‘ நல்லாட்சி அரசு’ என்ற எண்ணம் உதித்தது. இதனால் மேலும் பிரபல்யம் அடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே, தேசிய இயக்குநர் சபையிலும் இடம் கிடைத்தது. அச்சபைக்கு அமைச்சருக்குரிய அதிகாரத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை கொண்டதாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சபையின் அங்கத்துவத்தின் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் கூடுதலான ஆசனங்கள் கிடைத்தன. அக் குழுவில் கௌரவ இரா. சம்பந்தன் அவர்களுக்கும் ஓர் இடம் கிடைத்தமையானது, 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கப்படாமல், சன்மானம் வழங்கப்பட்டது போல் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்கு மேலும் ஓர் அலங்காரமாகும்.
மேலும் பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி எழுதக் கூடியதாக இருந்தும் இங்கே கூறப்பட்டவை மட்டும் அவர்கள் மக்கள் நலன் தவிர்த்து, தமது தமிழரசுக் கட்சியை வளர்ப்பதிலேயே ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க நான் முயலவில்லை. எனக்கு மிகப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு பரிகாரமும் தேட முயற்சிக்கவில்லை. எனது ஒரே கவலை யாதெனில் 2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்து கிடப்பதே.
இன்று நடந்திருப்பவை திருவாளர்கள் சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை, சம்மந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். அதன் முதல் கட்டமாக தமிழ் மக்கள் நன்கறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று பிரமுகர்களும், பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பிரச்சினையை அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடியவர்களின் கைகளில், தீர்விற்காக விட்டுவிட வேண்டும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.