மகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய எச் சந்தர்பத்திலும் கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அலுவலகத்தினால் ராஜபக்ஸவிற்கு பிரதமர் தலைவர் நியமனம் வழங்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கான முடிவை ஐக்கிய தேசிய கட்சி வரவேற்றுள்ளதாக தெரிவித்த அஜித் பீ.பெரேரா அன்றைய தினம் தமது பெரும்பான்மையை நிரூபிப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டுவதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விடுத்த அறிவிப்பை தொடர்ந்து அஜித் பீ.பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐ.தே.க கோரியிருந்த போதிலும், தற்போது திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தீர்மானம் வெளியாகியுள்ளதாகவும் இத்தீர்மானத்தை வரவேற்பேதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐ.தே.க.-வில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் பெரும்பான்மையை நிரூபிப்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment