இலங்கை பிரதான செய்திகள்

ரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது – ஒரே பார்வையில் MY3 + MRன் முடிவுகள்…

முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, ரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது மட்டுமல்ல தேசிய ரீதியில் பெறுமதியற்றதென அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று (7.11.18) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நேற்று முன்தினம் (6.11.18) அரச நிறுவனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதெனவும், இதில் சபாநாயகரே புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், புதிய அரசாங்கத்தின் கடமைகளை அரச பணியாளர்களான நீங்கள் முன்னெடுத்தால், அதன் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் , புதிய அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கமைய முன்னெடுக்க வேண்டாமெனவும், தெரிவித்து சகல அரச பணியாளர்ளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளமைத் தொடர்பில் அரச பணியாளர்களை தெளிவுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

14ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அமைச்சுப் பதவிகளும் நிறைவு செய்யப்படும்….

நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் வழங்கப்படாமலிருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுமென, அமைச்சரவையின் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இன்று சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் நிலைக்கு உத்தயோகப்பூர்வமாகவோ, உத்தியோகப்பூர்வமற்ற நிலையிலோ புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. இந்த நிலையின் கீழ் 13 பிரதான அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் நியமிக்க முடியாமல் உள்ளது. எனத் தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்…

கட்சி சார்பின்றி, அரசமைப்புக்கும் சட்டத்துக்கு மதிப்பளித்து நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்தில் சபாநாயகர் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கைத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அரசமைப்புக்கு அமையவே தன்னுடை கடமைகளை முன்னெடுக்கின்றார். அதனை யாராவது சவாலுக்கு உட்படுத்துவார்களாயின் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளதைப் போல உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யலாம் ரணிலை நீக்கியமைத் தொடர்பில் சபாநாயகருக்கு தனிப்பட்ட ரீதியில் கவலையிருக்குமாயின், ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் இல்லையென்றும் அவர் கருத்தினால் உயர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்.

ஏனெனில் உயர் நீதிமன்றுக்கு மாத்திரமே அரசமைப்பு தொடர்பில் வரைவிலக்கணத்தைத் தரமுடியும். ஏன் இவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லையனெ கேட்கிறேன் என்றார்.
சபாநாயகரின் அறிக்கை தவறு நாம் அதனை நிராகரிக்கின்றோம் சபாநாயகருக்கு அவ்வாறு செய்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. 3ஆவது தடவையாகவும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். எனவே அவர் எத்தனை அறிக்கைகள் வெளியிட்டாலும் அது செல்லுப்படியாகாது. 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, அங்குள்ள உயரதிகாரிகள் கூறுகின்றனர் வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டே ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்று.அதனால் சபாநாயகர் எது வேண்டுமானாலும் கூறட்டும் ஆனால் நாட்டின் சட்டதிட்டங்களை அரச அதிகாரிகள் மீறமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்..

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, கம்பெரலிய கடன் திட்டம் என்பவற்றிலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கம்பெரலிய போன்ற கடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதா? இந்த அரசாங்கமும் இதனை முன்னெடுக்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, சில வேலைத்திட்டங்களில் குறைபாடுகள் காணப்பட்டன.அந்த குறைபாடுகள் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பட்டாதாரிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து ஜனாதிபதி தெளிவான நிலையான உறுதிப்பாட்டில் உள்ளார். அதாவது குறித்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விடயத்தில் எந்தவொரு அரசியல் பக்கச்சார்பும் இருக்க கூடாதென, ஒன்றுக்கு பத்து தடவைகள் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இதில் அரசியலை இணைத்துக்கொள்வது பட்டதாரிகளை அகௌரவப்படுத்தும் நடவடிக்கை என்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, இதுவரை வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் அரசியல் பக்கசார்பின்றி வழங்கப்பட்டுள்ளனவா என ஆராய வேண்டியுள்ளது. எனவே இந்த நடவடிக்கை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும். கம்பெரலிய வேலைத்திட்டம் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படாத இடங்களுக்கு இந்த திட்டத்துக்கான நிதியை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த திட்டத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.