இலங்கை பிரதான செய்திகள்

” நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு” “ஒருநாள் அமைச்சராயினும் சேவை செய்வேன்”

“நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

திரைப்படம் ஒன்றில் ஒரு நாள் முதலமைச்சர் காட்சியை பார்த்திருப்பீர்கள். அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் ஒரு வினாடி எனக்கு கிடைத்தாலும் அதனை எனது மக்களுடைய நலன்களுக்காகவும்,  அவர்களுடைய நன்மைகளுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்துவேன். மாறாக எனது சுயநலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன். இந்த அரசாங்கம் தொடரும், எமது சேவை நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதியின் ஆசை விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை அல்லது அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பது. ஆனால் கடந்த ஆட்சியில் அவருடைய ஆசை நிறைவேற்றப்ப டவில்லை. ஆனால் தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியில் அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் வடமாகாணத்தின் அபிவிருத்தி என்ற அமைச்சு துறையையும் எமக்கு வழங்கியுள்ளார். அந்த அமைச்சு துறையின் எல்லை என்பது வானமாக இருக்கும்.

நாம் மக்களுடைய நலன்களையும், இருப்புக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி செல்வதற்கான திட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தங்களுடைய பூரணமான ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்கள்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியதில்லை அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டதாக. அவ்வாறான கருத்தை இனிமேலும் கூட கூறமாட்டேன். எமது மக்களுக்கு எது தேவையாக உள்ளதோ? அதனை நிச்சயமாக செய்வேன்.

கடந்த காலத்திலும், இப்போதும் எனக்கு அரசியல் பலம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் விரலுக்கு ஏற்ப வீக்கம் என்பதுபோல் முடிந்தவற்றை செய்தேன். ஆனால் அதனை மக்கள் இன்று உணர தொடங்கியுள்ளதாக நான் அறிகிறேன்.

வருங்காலத்தில் மக்கள் என்னை பலப்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். அதனால் கூடியளவான விடயங்களை செய்யலாம். ஒரு மனிதனுக்கு உணவும் தேவை, சுவாசிக்க காற்றும் தேவை. உணவு தேவை என்பதற்காக சுவாசிக்கும் காற்றையோ, காற்று தேவை என்பதற்காக உணவையோ கைவிட முடியாது. அதேபோல் அரசியல் உரிமைகள் தேவை அதேபோல் அபிவிருத்தியும் தேவை. சூழலுக்கேற்ப நாங்கள் அதனை முன்னெடுத்து செல்வோம்.

இன்று வழங்கப்படும் நஸ்டஈட்டை பொறுத்தளவில் அதனை விரைவுபடுத்தி கொண்டுவருகிறோம். இதேபோல் நஸ்டஈடு தொடர்பான தேவைகள் அதிகம் உள்ளது. விண்ணப்பங்கள் அதிகம் உள்ளது. அவற்றையும் விரைவுபடுத்தி செய்வோம்.

மேலும் இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை எனவும், இலங்கையில் மற்றய இடங்களில் கொடுக்கப்பட்ட தொகைக்கும் இந்த தொகைக்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அது இன்று எனது காதுகளுக்கும் வந்தது. அதனை அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து அதிகரித்துக் கொள்ளலாம். இதேபோல் முன்னாள் போராளிகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வீத வட்டியில் கடன் திட்டம் உள்ளது. அதேபோல் வீடு திருத்தம் செய்வதற்கும் அதேமாதிரியாக கடன் திட்டம் உள்ளது. அந்த கடன் திட்டங்களையும் விரிவு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers