இலங்கை பிரதான செய்திகள்

சமுர்த்தி ஊழல் – பணத்தை மீளச் செலுத்திய உத்தியோகத்தர்கள் :

 

குளோபல் தமிழ் செய்தியாளர்
   

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் ஊடாக சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டு சமுர்த்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சமுர்த்தி வங்கிக்கும் வீட்டுக்கும் தினமும் அலையும் ஏழை மக்கள் இதனாலேயே பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடிகள் கண்டறியப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  முல்லை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் சிலர் மக்களின் பெயரை பயன்படுத்தி அவர்களின் சேமிப்பில் உள்ள நிதியை கடன் பெற்று தமது தேவைகளுக்கு பயன்படுத்தியமை கண்டறியப்பட்டது.

இந்தநிலையில்  ஊழலில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒருவர் தாம் களவாடிய இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் வெளிக் கொணரப்பட்ட பின்னர், இவரை தற்காலிகமாக கடமை இடைநிறுத்தம் சொய்யபடுவதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு ஒரு சமூர்த்தி உத்தியோகத்தர், ஒருலட்சத்து முப்பத்து எட்டாயிரம் ரூபாவை மீள செலுத்தியுள்ளார். குறித்த ஊழியரை இடமற்றம் செய்ய முற்பட்ட அரச அதிகாரிகள் தரப்புக்கு முன்னாள் அமைச்சர் ஒருவரினால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் அரசாங்க அதிகாரி மீது நேரடியாக அழுத்தத்தை பிரயோகித்தார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் இவ்வாறு சட்டவிரோதமாக ஊழல் செய்வதும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டும் செயற்பாடுகள் வேலியே பயிரை மேயும் செயற்பாடுகளுக்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ் விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புக்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதும் உரிய தீர்வு கிட்டவில்லை என்றும்  இது தொடர்பில்  குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்ட செய்தியினை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்  சமுர்த்திப் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.