இலங்கை கட்டுரைகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

”இதுதான் இஞ்சத்தை நிலைமை”  ”இஞ்சத்தை அரசியலும் இப்பிடித்தான்”

சனி முழுக்கு 18 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

கொஞ்சம் பிந்திப்போனன். ஆனால் கனதியான விசியங்கள் நடந்திருக்கு.ஒரு கிழமைக்கு முன்னம் துவங்கிவிட்டாங்கள்.சும்மா இடைக்கிடை சட்டைக்காரர் வெருட்டப் பாத்தவை. ஆனால் சனம் மசியேல்லை. பிறகுதான் போய்க் கேஸைப் போட்டவை. போட்டவை நினைச்சது என்னெண்டால் சால்வைக் காரர் வந்திட்டாரெண்டதாலை அவை தங்கடை சுயத்தைக் காட்டுவினம் எண்டு. ஆனால் அவையே சில்லெடுக்கேலாமை நிக்கிறபடியாலை ஒண்டும் நடவாதெண்டது சனத்துக்கு வடிவாத் தெரியும்.

சோடினை அந்த மாதிரி. எல்லா இடங்களும் அவை இருக்கேக்கை நடந்த மாதிரிச் சோடினை என்ன! வளைவு என்ன! பாட்டென்ன! அப்பு கதிரைமலையானே! மனம் நிறைஞ்சு போச்சய்யா. விளக்கீட்டோடை கனகம்மா அடுக்குப் பண்ணத் துவங்கிவிட்டாள் மாவீரர் தினத்தைக் கொண்டாட.. தன்ரை பிள்ளைக்கு என்னென்ன விருப்பமோ அத்தனையையும் செய்து அவனுக்குப் படைச்சு….. எட ! அவள் பண்ணிவிட்ட பாடு. அவள் தன்ரை பெடியை நினைச்சுச் சதா கண்கலங்கினபடிதானே!

என்னெண்டாலும் பிள்ளைப் பாசம் ஆரை விட்டுது? தசரதன் கூடத் தன்ரை பெடியிலை வைச்ச பாசத்திலைதானே செத்தவர்.எத்தினை தாய்மார் கதறிக் கதறி அழுதவை.உதுக்கெல்லாம் பலன் வராமலே போகப்போகுது? எண்டு என்னைத் தட்டிக் கேட்டார் கோப்பாய் நினைவேந்திலிலை நிண்ட ஒராள். அவரைப் பாக்க மற்றக் கோஷ்டி மாதிரியாயும் கிடந்திது. பாக்க ஆழம் பாக்கிற ஆள் மாதிரியும்  தெரிஞ்சிது.  “என்னத்துக்கு வீண் வில்லங்கம்?” எண்டு நினைச்சுக்கொண்டு  நைசா விலகீற்றன்.கட்சிக்காறரெல்லாம் வந்து போனவை. விளையாட்டொண்டையும் காட்டாமல் பேசாமல் போட்டினம்.

உண்மையாகச் சனம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அரசியலை விளங்கத் துவங்கியிருக்கினம்.எங்கடை இருப்பு முக்கியம் எண்ட விசியத்தை சனம் எப்ப சரியா மூளைக்கெடுக்கினமோ ! அண்டைக்குத்தான் ஒரு மாற்றம் வரும்.இப்பவரைக்கும் சனம் அரசியல்வாதியளிட்டை ஏமாறிறவையாளாத்தான் இருக்கினம் எல்லே. அவையள் ஒவ்வொரு தடவையும் சிங்களத் தலைமையளோடையும் சிங்கள அரசியல்வாதியளோடையும் பேசப் போறன் எண்டு போறது. பேசிறது.  அவங்கள் வாக்கு ருசியா அதை இதைக் குடுத்து கதைச்சுப்போட்டுக் கடைசியிலை ஏமாத்திப் போடுவங்கள். அவை தாங்கள் ஏமாந்து போகேக்கை இஞ்சை வந்து சனத்தை ஏமாத்திறதைத் தவிர வேறை வழி ஒண்டும் அவைக்குத் தென்படாது. இதைத்தான் அண்டைக்குச் செல்வநாயகம் தொட்டு இப்ப சம்பந்தர்வரை செய்து கொண்டு வருகினம். சிங்களச் சனம் பெரும்பான்மை எண்ட விசியம் இண்டைக்கு, நேற்றைக்கே தெரியும்? அப்ப அதுக் கேற்ற மாதிரியெல்லே வியூகத்தைப் போட்டுச் செயற்பட்டிருக்க வேணும். இது அப்பிடி இல்லாமல் கட்சீக்கை எல்லாரும் கூடுறது. கூடிக் கதைக்கிறது. ஆனால் ஒராள் அல்லது இரண்டு பேர் எடுக்கிற தீர்மானத்துக்குத் தலை ஆட்டிப்போட்டு எழும்பி வாறது. இது தானே நடக்கிது. இண்டைக்கும் எங்கடை ஆக்களின்ரை நிலைமை இதுதான்.அதுக்குத் தாளம் போடுறதுக்கெண்டு உள் நாட்டிலையும் வெளி நாட்டிலையும் ஆக்கள் இருக்கினம். அவையின்ரை ஆட்டம் பெரிசாக் கிடக்கு.ஏன் இப்பிடிக் குத்தி முறியினமோ தெரியாது

சரி உங்களுக்கு மொழிப் பற்று இருக்கு. இனப் பற்று இருக்கு. போரைக் காட்டி ஊரை விட்டிட்டு ஒடின்னீங்கள். பல பேர் போரைக் காணாமல் போனனீங்கள். கொஞ்சப்பேர் போராலை அடிபட்டுக் கிடிபட்டுப் போனனீங்கள்.ஒத்துக் கொள்ளுறியளோ? முழுமையா யுத்தத்திலை பங்கு கொண்டவையும்,அதைப் பாத்தவையும் , அனுபவிச்சவையும் இஞ்சைதான் இருக்கினம். அப்ப தீர்வு அவைக்குத்தான் தேவையே ஒழிய ஓடினவைக்கல்ல.

ஆனால் ஒண்டு சொல்லுறன்  அண்டைக்கும் இண்டைக்கும் இவ்வளவு சதிராட்டத்துக்குப் பின்னாலையும் எங்கடை சனம் மூச்சுவிடுகிது எண்டால் அதிலை ஒரு பங்கு வெளிநாட்டிலை இருக்கிற சொந்தங்களாலைதான் எண்டதை நாங்கள் எங்கையும் ஒழிக்கேலாது. ஆனால் அவை அதாலை இஞ்சை இருக்கிறவை என்னத்தைச் செய்ய வேணும்? என்னத்தைச் சொல்ல வேணும்? எண்ட முடிவுகளை அங்கை குளிருக்குள்ளை  கம்பளியாலை போத்துக் கொண்டிருந்து எடுக்கப்படாது. இஞ்சை நாலு முழத் துண்டோடை சுத்தித் திரியிற எங்களுக்கு என்ன தேவை? எண்டு தீர்மானிக்கிறதை எடுக்க வேண்டியது நாங்கள். அப்ப அங்கை கன்னை பிரிஞ்சு இருந்து கொண்டு காசைச் சேத்துக் காசாலை இஞ்சை தனிப்பட்ட ஆக்கள் துவக்கம், குடும்பம் எண்டு வந்து ஊர் எண்டு வந்து பிறகு ஒட்டு மொத்தச் சமூகத்தையும் குழப்பிற வேலையை ஒரு சாரார் உங்களை அறியாமலே செய்து கொண்டு இருக்கிறியள். இது எவ்வளவு ஒரு பொறுப்பில்லாத வேலை எண்டு உங்களுக்குத் தெரியுமோ எண்டு கேக்கிறன்?

போன கிழமை பாத்தன் எங்கடை சோமு அண்ணையின்ரை பெடிச்சி சுவிஸிலை இருந்து ஒரு கலியாண வீடு எண்டு வந்து நிண்டவள். கலியாணவீட்டு அமளி இரண்டு நாளைிலை முடிஞ்சு போச்சு. பிறகு அவள் தன்ரை பிள்ளையளுக்கு இடம் காட்ட வெண்டு வெளிக்கிட்டு  இஞ்சை இருக்கிற தன்ரை சகோதரங்களின்ரை பெடி பெட்டையளையும் கூட்டிக் கொண்டு  ஒரு கிழமை ஊரைச் சுத்தினவள். அதுக்கை கறுமம் என்னெண்டால் அவளோடை போன இஞ்சத்தைப் பெடி பெட்டையள் ஒண்டும் அந்தக் கிழமை நடந்த சோதினைக்குப் போகேல்லை. எப்பிடி இருக்கு விளையாட்டு? அதுகும் வகுப்பேற்றச் சோதினை. சுவிஸிலை இருந்து வந்த அவள் தன்ரை வேலை முடியக் கொஞ்சக் காசை எல்லாருக்கும் கிள்ளித் தெளிச்சாள், குண்டியைத் தட்டிக் கொண்டு போட்டாள். இப்ப இஞ்சை இருக்கிறவை பெடி பெட்டையள் ஏன் சோதினை எடுக்கப் பள்ளிக்குடத்துக்கு வரேல்லை எண்டு சொல்ல அதிபற்றை அறை வாசலிலை நிக்கினம். இதுதான் இஞ்சத்தை நிலைமை. இஞ்சத்தை அரசியலும் இப்பிடித்தான் ?!!???

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.