கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக சீமெந்து வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாகபட்டினம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டத்தின் நிலவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதேவேளை, நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மாவட்டத்தின் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். கஜா புயல் காரணமாக நாகபட்டினம் மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக இதன்போது அவர் குறிப்பிட்டார். அத்துடன் கஜா புயலுக்குஇலக்காகி 15 பேர் பலியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் சீமெந்து வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புயல் நிவாரணப் பணிகளுக்கு இந்திய மத்திய அரசிடம் இருந்து நிதி கோரியுள்ளதாக குறிப்பிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்
Spread the love
Add Comment