Home இலங்கை மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்

மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்

by admin


கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்கவனமும் நாடாளுமன்றத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த பின்னணிக்குள் மாவீரர் வாரம் தொடங்கும் வரையிலும் ஊடகங்களின் கவனமும் மாவீரர் நாளை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் மாவீpரர் வாரம் தொடங்கிய உடனேயே தமிழ் பகுதிகளில் ஏற்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின.

மகிந்த அணியினால் முடக்கப்பட்ட நாடாளுமன்றம் 27ம் திகதி மறுபடியும் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியில் தமிழ்ப் பிரதிநிதிகள் துயிலுமில்லங்களுக்குப் போவார்களா? அல்லது நாடாளுமன்றத்திற்குப் போவார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. மாவீரர் நாளன்று யாழ்ப்பாணத்தில் படையினர் மற்றும் பொலிஸாரின் நடமாட்டம் ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்பட்டது. எனினும் துயிலுமில்லங்களிலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கட்சிகளும் பொது அமைப்புக்களும் துயிலும் இல்லங்களைப் பொறுப்பெடுத்தன. குறிப்பாக கிழக்கில் கடந்த ஆண்டுகளை விடவும் அதிகரித்த அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது தொடர்பில் முழுத் தமிழ்ப் பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் பொது ஏற்பாட்டுக் குழு ஒன்று இன்று வரையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக துயிலும் இல்லங்களை வௌ;வேறு தரப்புக்கள் தமக்கிடையே பங்கிடும் ஒரு நிலமை காணப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அது காரணமாகவே இம்முறை மாவீரர் நாள் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தடையும் திடீரென்று அதிகரித்த படைப் பிரசன்னமும் மக்களைப் பயமுறுத்தவில்லை. மாறாக அதிகரித்த தொகையினர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது?

ஒரு முன்னாள் ஜே.வி.பி முக்கியஸ்தர் சொன்னார் ‘பிரேமதாசவின் காலத்தில் ஜே.வி.பி ஒடுக்கப்பட்ட பின் உடனடுத்து வந்த ஆண்டுகளில் அதன் தியாகிகள் தினம் இரகசியமாகவே அனுஷ்டிக்கப்பட்டது. குறைந்தளவு எண்ணிக்கையினர் மறைவாகக் கூடி இறந்தவர்களை நினைவு கூர்ந்தார்கள். அந்நாட்களில் நினைவு கூர்தலுக்கு ஓர் ஆன்மா இருந்தது. ஓர் உணர்வெழுச்சி இருந்தது. பிரேமதாஸாவிற்கு பின் நிலமைகள் படிப்படியாக தளர்வுக்கு வந்தன. எனினும் உத்தியோக பூர்வமாக தடை அகற்றப்படவில்லை. எனவே அந்நாட்களில் நினைவு கூர்தலானது அதிகம் உணர்வெழுச்சியோடு அனுஷ்டிக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் குறைவான தொகையினர் அதில் பங்கு பற்றியிருந்தாலும் அதற்கொரு ஆன்மா இருந்தது.

திருமதி சந்திரிக்காவின் வருகைக்கு பின் தடை அகற்றப்பட்டது. ஜே.வி.பியினர் தியாகிகளை தடையின்றி பகிரங்கமாகக் கொண்டாடும் நிலை தோன்றியது. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜே.வி.பி அதையொரு பெருந்திரள் மக்கள் நிகழ்வாக ஒழுங்கு படுத்தியது. பெருந்தொகையினர் அதில் பங்கேற்றார்கள். தொடர்சியாக சில ஆண்டுகள் நினைவு கூர்தல் பெருமெடுப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதில் கலந்து கொள்வோரின் தொகை குறையத் தொடங்கியது. அந்நிகழ்விற்கென்றிருந்த புனிதமும் குறையத் தொடங்கியது. இப்பொழுது அது நாட்காட்டியில் வரும் வழமையான ஒரு நாளாக மாறிவிட்டது. அது அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு சடங்காக மாறிவிட்டது’ என்று. மேற்படி ஜே.வி.பி உறுப்பினர் இப்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். அவர் என்னிடம் மாவீரர் நாள் தொடர்பில் பின்வருமாறு கேட்டார் ‘மாவீரர் நாளின் மீது இருக்கும் சட்டத்தடைகள் நீக்கப்பட்டால் நிலமை என்னவாகும்?’ என்று.

எந்தவொரு நினைவு நாளும் சடங்காக மாறுவதும் மாறாமல் விடுவதும் அதை ஒழுங்குபடுத்தும் அமைப்பின் அரசியலில் தான் தங்கியிருக்கிறது. ஜே.வி.பியின் அரசியல் எப்பொழுதோ அதன் ஆன்மாவை இழந்து விட்டது. எனவே அதன் தியாகிகள் தினம் சடங்காக மாறியமை தற்செயலானது அல்ல. அதற்கொரு தர்க்கபூர்வ வளர்ச்சியுண்டு. ஆனால் மாவீரர் நாளைப் பொறுத்தவரை புலிகள் இயக்கம் தாயகத்தில் அரங்கில் இல்லை என்றாலும் அது முன்னெடுத்த அரசியலுக்கான தேவை தொடர்ந்தும் இருக்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான நீதியும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போரில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற விளைவுதான். இன ஒடுக்குமுறை என்ற மூலகாரணம் அப்படியே உள்ளது. அது யுத்தத்தை வேறு வழியில் தொடர்கிறது. அதைத்தான் கட்டமைப்பு சார் இனப்படுகொலை என்றார்கள். இப்படியொரு நிலமை தொடரும் வரை சனங்கள் விடுதலைப்புலிகளின் இன்மையை நினைவு கூர்ந்து கொண்டேயிருப்பார்கள். எனவே இது விடயத்தில் ஜே.வி.பி யையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட முடியாது’ என்று அவரிடம் சொன்னேன்.

எனினும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பது என்பது குறிப்பாக 2009 க்கு பின் அதைச் செய்வது என்பது இப்போது இருப்பதை விடவும் பரந்தகன்ற தளத்தில் பல்பரிமாணங்களை கொண்டதொரு அரசியல் நிகழ்வாக திட்டமிடப்பட வேண்டிய தேவையுண்டு.

அதாவது மாவீரர் நாளை அனுஷ்டித்தல் என்பது முதலாவது அர்த்தத்தில் மாவீரர்களுடைய அரசியல் இலக்குகளை வென்றெடுப்பதாகும். அது வெறுமனே துக்கத்தை அனுஷ்டிக்கும் ஒரு கூட்டு நிகழ்வு மட்டுமல்ல.  இரண்டாவது, விடுதலைப் புலிகள் இயக்கம்; செயற்படாத தாயகத்தில் மாவீரர்களை நினைவு கூர்வது என்பது அம்மாவீரர் குடும்பங்களைப் பராமரிப்பதும் தான். பல மாவீரர்களின் குடும்பங்கள் வறுமையில் உழல்கின்றன. அவர்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை. அவர்களுக்கு உதவி செய்வதற்கென்று ஒரு பொது நிதியமும் இல்லை. வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான டினேஸ்வரன் சில ஏற்பாடுகள் செய்தார். ஆனால் அவை போதுமானவை அல்ல. தொடர்ச்சியானவை அல்ல. மாவீரர் குடும்பங்களை கௌரவிப்பது என்பது மே தினம் போல ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு தொடர் வேலைத்திட்;டம் இது தொடர்பில் பொருத்தமான தரிசனம் எதுவும் தமிழ் தலைவர்களிடமோ அல்லது செயற்பாட்டாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

மூன்றாவது, மாவீரர்களை நினைவு கூரல் என்பது எந்த இயக்கத்தில்; சேர்ந்து அவர்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ அந்த இயக்கம் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் எஞ்சியிருக்கும் போராளிகளைப் பாராமரிப்பதும் தான். இலங்கைத் தீவில் அதிகம் ஆபத்தை எதிர் கொள்ளும் தரப்பாக முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களே காணப்படுகிறார்கள். புனர்வாழ்வு பெற்ற பின்னரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள். அரச புலனாய்வுத்துறையும் அவர்களை சந்தேகிக்கிறது. எந்த மக்களுக்காக போராடுகிறார்களோ அந்த மக்களும் அவர்களைச் சந்தேகிக்கிறார்கள். இயக்கம் பலமாக இருந்த காலத்தில் நிகழ்ந்த திருமணங்கள் பல இப்பொழுது முறிந்துவிட்டன. ஒரு புறம் பாதுகாப்பு இல்லை. இன்னொரு புறம் தொழில் இல்லை. உதவி இல்லை. கடந்த சுமார் பத்தாண்டுகளில் தொடர்ச்சியாக பலர் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை யார் வழங்குகிறார்கள்?

அவர்களிற் சிலர் அமைப்புகளைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர்களிற் சிலர் கட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கட்சிகள் தொடர்பாகவும் அமைப்புக்கள் தொடர்பாகவும் சந்தேகிப்பவர்களும் ஊகிப்பவர்களுமே அதிகம். அவர்களை அரச புலனாய்வுத்துறை இயக்குகிறது என்று பரவலாகவும் ஆழமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சமூகத்தில் ஒரு பகுதியினர் அவர்களை நெருங்கிச் செல்லப் பயப்படுகிறார்கள். இவ்வாறானதொரு பின்னணிக்குள் தனித்து விடப்பட்டவர்களாக சந்தேகிக்கப்படுகிறவர்களாக கதியற்றவர்களாகக் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் புலி இயக்கதவருக்கு உதவி செய்வதற்கென்று சட்ட ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் தேவை. இறந்த புலிகளை வைத்து அரசியல் செய்யும் பலரும் உயிரோடு இருக்கும் புலிகளுக்கு உதவத் தயாரில்லை. எனவே காயமடைந்து அவயவங்களை இழந்து குடும்பத்தைப் பிரிந்து புத்தி பேதலித்து தனித்து விடப்பட்டிருக்கும் முன்னாள் இயக்கத்தவருக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்கவல்ல சட்ட உதவி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ உதவி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது மூன்றாவது

நாலாவது இறந்தவர்களை நினைவு கூர்தல் என்பது அவர்களுடைய பெயரால் ஐக்கியப்படுவதுந்தான். அவர்களுடைய அரசியல் இலக்கை வென்றெடுப்பதென்றால் தமிழ் மக்கள் முதலில் ஒரு பெருந்திரளாக வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறவும் இனப்படுகொலைக்கு எதிரான சுயகவசங்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஒற்றுமையே முதலாவது முக்கிய நிபந்தனையாகும். இங்கிருந்து ஒற்றுமையை கட்டியெழுப்ப தொடங்காவி;ட்டால் எதிர்காலத்தில் ஒவ்வொரு துயிலும் இல்லத்தையும் ஏதாவது ஒரு கட்சியோ அல்லது அமைப்போ அதனதன் விருப்பத்திற்கு ஏற்ப தத்தெடுக்கும் ஒரு நிலை தோன்றக்கூடும். இது எங்கே கொண்டு போய் விடும்?

மேலும்,2009 இற்குப் பின் தாயகத்தையும் டயஸ்போராவையும் பிணைக்கும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒன்றாக மாவீர் நாளும் காணப்படுகிறது. நாடு கடந்து வாழும் ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசமாக சிந்திப்பதற்குரிய உணர்ச்சிகரமான நிகழ்வே நினைவு கூர்தலாகும். ஒரு தேசமாக சிந்திப்பதற்குரிய பிரயோகக் களங்களில் நினைவு கூர்தல் மிகவும் முக்கியமானது. அது தாயகத்தையும் டயஸ்போறாவையும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கிறது. அதே சமயம் டயஸ் போறாவை ஒரு தேசமாக உணர வைக்கிறது. ஆனால், தமிழ் டயஸ்போறாவில் தாயகம் பற்றிய பிரிவேக்கத்தோடு காணப்படும் முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி இறந்து விடும் பொழுது இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் மத்தியில் நினைவு கூர்தல் எவ்வாறு அனுஷ்டிக்கப்படும்?

எனவே மேற்சொன்ன விடயங்களைக் கவனத்தில் எடுத்து நினைவு கூர்தலை பரந்தகன்ற தளத்தில் முன்னெடுக்கும்; போதே அதை அதன் மெய்யான பொருளில் அதாவது, நினைவு கூர்தல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் முடிவுறாத ஒரு போராட்டத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதி என்ற முழுப்பொருளில் அனுஸ்டிக்கலாம். எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More