Home இலக்கியம் 40 வது ஆண்டு நிறைவு நாடக விழா -நாளை பாரிஸில் பாலேந்திராவின் நாடகங்கள் -கலா

40 வது ஆண்டு நிறைவு நாடக விழா -நாளை பாரிஸில் பாலேந்திராவின் நாடகங்கள் -கலா

by admin

அண்மையில் 40 ஆண்டு நிறைவை நாடக  விழாவுடன்  லண்டனில் கொண்டாடிய , லண்டன் தமிழ் அவைக்காற்று கழகத்தின் நாடகவிழா,மீண்டும்  பாரிஸ் நகரில் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை( 08-12-2018) , இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆதரவில் நடைபெறுகிறது.இந்த நாடக விழாவில் திரு க பாலேந்திரா நெறிப்படுத்தும் நான்கு நாடகங்கள் மேடையேறுகின்றன.”சர்ச்சை”,”கண்ணாடி வார்ப்புக்கள்”, “சம்பந்தம்”, “நீண்ட ஒரு பயணத்திதில் ” ஆகிய நாடகங்கள் லண்டன் கலைஞர்களால் அன்றைய தினம் மேடையேற்றப்படவுள்ளன.

“கல்விக்கு கரங்கொடுக்க கலையால் ஒரு களப்பணி 2″ என்ற மகுடத்தில் நிகழும் இந்த நிகழ்வில் சேகரிக்கப்படும் நிதி இலங்கையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் கல்விகற்கப்போதிய வசதிகள் இல்லாத தமிழ்ப்பாடசாலைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திலிருத்தி , ” ஆயிரம் மாணவர்களை நோக்கி ” என்ற உதவி திட்டத்தில் நடத்தப்படும்  உதவி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். பிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர்களால், பழைய மாணவர் சங்கங்களின் ஆதரவுடன், காலத்தின் இன்றியமையாத தேவை கருதி «இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம்» 24.5.2015ல் பாரிஸில் அங்குரார்ப்பணம் செய்யபட்டு, இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் திரு பாஸ்கரன் லண்டன் நாடகவிழாவிற்கு வருகை தந்து நாடகங்களை பார்வையிட்டு , கலைஞர்களுக்கு வாழ்த்து பத்திரமும் வழங்கி கௌரவித்தார் .
கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு நாடக விழாவிற்கு புதிதாக தயாரிக்கப் பட்டு மேடையேற்றப்பட்ட போது  வரவேற்பை பெற்ற நாடகங்களே இவை. பாலேந்திரா நெறிப்படுத்திய நாடகங்களில் மிகவும் பிரபலமான உன்னத நாடகம் “கண்ணாடி வார்ப்புக்கள் ” . லண்டனில் பிறந்து சிறுவர்களாக நாடக இயக்கத்தில் இணைந்த இளையவர்கள்  மூவர் முக்கிய பாத்திரங்களில் அனுபவம் நிறைந்த திருமதி ஆனந்தராணியுடன் இந்த நாடகத்தில் ஈடு கொடுத்து நடிக்கிறார்கள். இந்த நாடகத்தில் 4 பாத்திரங்கள் மட்டுமே.இலங்கையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 40 வருடங்களுக்கு முன்னர் முதல் முறை மேடையேறி, பின்னர் வானொலியிலும், ரூபவாஹினி தொலைக் காட்சியிலும் இடம்பெற்று புகழ்பெற்ற இந்த நாடகம் 2013இல் யாழ்நகரில் அதே வீரசிங்கம் மண் டபத்தில்  இதே குழுவால் மேடையேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.லண்டன் இளையோர் இப்படியான நுண்ணிய பாத்திர படைப்பு அடங்கிய உலகப் புகழ்பெற்ற நாடகத்தில் நடிப்பது , புகலிடங்களில் தமிழ் வாழும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக பல கலா ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ரொம் என்ற  முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இளைஞர் 19 வயதே நிரம்பிய இளம் கலைஞர் ஜெனுசன்  லண்டனில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ..இவரோடு லோராவாக சரிதாவும் ஜிம்மாக சந்தோஷ் ஆகிய இளையோர் நடிக்கின்றனர்.
“நீண்ட ஒரு பயணத்தில் ” பாலேந்திராவின் பல நாடகங்களின் சிறுசிறு காட்சி தொகுப்பு ஆகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக இவரது நெறியாகையில் நிகழ்ந்த 70 நாடகங்களில் 10நாடகங்களை தெரிந்து அவற்றில் சில காட்சிகளை வரிசைப் படுத்தி , இவர்களது நாடக தெரிவு ,போக்கு , பாங்கு வெளிப்படும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப் பட்டுள்ளது..தாயகப்பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக வெளிக்கொணரும் நாடகங்கள் பல இத்தொகுப்பில் உள்ளன. தொகுப்பில் இடம்பெறும் நாடகங்கள்: யுகதர்மம்(1979) பாவி(1978) மழை (1976) படிக்க ஒரு பாடம் (2009) அவசரக்காரர்கள் (1997) எரிகின்ற எங்கள் தேசம் (1989) பெயர்வு (1998) காத்திருப்பு (2001) மரணத்துள் வாழ்வு (2009) சூறாவளி (2013) ..பாலேந்திராவின் காலத்துக்கு ஏற்ற நாடக தெரிவுகள் தான் நான்கு தசாப்தங்களுக்கு மேலாகவும் இவர்களை தொடர்ந்து இயங்க வைத்துள்ளது.
1970 களில் இருந்து அவ்வப்போது இன்று வரை இவர்கள் மேடையேற்றி வரும் சிறு நாடகங்கள் “சம்பந்தம் ” , “சர்ச்சை “என்பன.நகைச்சுவையுடன் சிந்தனைக்குரிய நாடகங்கள் இவை. இந்த நாடக விழாவில் பங்கு பற்ற சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் , லண்டன் இளையவர்களும், பாரிசுக்கு சென்று , நாடகவிழாவை அளிக்கவுள்ளனர்.பாலேந்திரா, ஆனந்தராணி, வாசுதேவன்,கணேசலிங்கம்,யசோமன் ஆகியவர்களோடு இளையவர்களான  சரிதா அண்ணாதுரை,மானசி பாலேந்திரா ,சந்தோஷ் ஆனந்தன், சிந்து ஆனந்தன்,லுக்சியா றொபின்சன் ,ஜேனுசன் றொபின்சன் லண்டனிலிருந்து பாரிஸ் நாடக விழாவில் பங்கு கொள்ள லண்டனிலிருந்து செல்லவிருக்கிறார்கள்.
பாரிஸ் நகருக்கு இவர்கள் மேற்க்கொள்ளும் ஐந்தாவது  நாடகப் பயணம் இது.  இவர்கள் 1995 இல் இரண்டு நாள் நாடகவிழாவையும் பாரிஸில் நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
“இளையவர்கள் எங்கள் எதிர்காலம் ” ” கல்விக்கு கரங்கொடுப்போம் .” இவை தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினதும் ,  , இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தினதும் மகுட வாக்கியங்கள் .இவர்களது பணி சிறக்கட்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More