இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

சுதந்திரம் என்ன சும்மா கிடைக்குமே? போராடித்தானே பெற வேணும்

சனி முழுக்கு 20 – – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

காலமையே குழப்பமாப் போச்சுது. சரி கனடாவிலை விடியக் காலமை எண்டால் எங்கடை ஊரிலையும் காலமையே? இரவு ஒரு பன்னிரண்டு மணி இருக்கும். ரெலிபோன் ஒருக்கா அடிச்சிது. நான் எடுக்கேல்லை. இரண்டாந்தரமும் அடிச்சிது. நான் எடுக்கேல்லை. அடிச்சவனும் விடுறதாக் காணேல்லை. வெளியாலை மழைச் சத்தமும் கேட்டிது. போத்துக் கொண்டு கிடந்த எனக்கு ரெலிபோன்ரை சத்தம் அரியண்டமாக் கிடந்திது.மனங்கேக்காமல் சரி என்ன ,ஏதோ? எண்டிட்டு எடுத்தால் மணியன் கனடாவிலை நிண்டு எடுத்து ‘பொன்னம் பலம் எப்பிடிச் சுகம்?’ எண்டு கேட்டான். ‘பரவாயில்லை’ எண்டன். ‘மைத்திரி என்னவாம்?’ எண்டு கேட்டான். எனக்குக் கோவம் வந்திட்டுது. ‘நாளைக்குச் சாப்பிட வரட்டாம்’ எண்டு சொன்னாப்போலை மணியத்துக்குத் தெரிய வந்திட்டுது தான் பிழையான நேரம் கூப்பிட்டிட்டன் எண்டு.சடார் எண்டு ரெலிபோனை வைச்சிட்டான்.

வழமையாத் தண்ணி போட்டால் உப்பிடி எடுத்து ஏதாவது பிசகாக் கதைப்பன். ஆள் இப்ப கிட்டியிலைதான் பொன்சரிலை போனவன். அங்கை வேலை ஒண்டும் இல்லை. குடியும்இ சாப்பாடும் எண்டுதான் சொன்னவன். என்னஇ! மணியனுக்கு இரண்டு பிள்ளையள். ஒரு பெடியும்இ ஒரு பெட்டையும். பெடி லண்டனிலை. பெட்டை கனடாவிலை. இப்ப பெடிச்சிதான் மணியனுக்குப் பொன்சர் செய்து கனடாவுக்கு எடுத்தவள். ‘அப்பா வாங்கோ. உங்கை நீங்கள் தனிய இருக்கிறியள்.அதை நினைக்க எங்களுக்கு மனக்கஷ்டமாக்கிடக்கு’ எண்டு கரைச்சல் படுத்தித்தான் மணியத்தை எடுத்தவள். அதுவும் பத்தாயிரம் டொலர் கணக்கிலை காட்டித்தானாம் பொன்சர் சரிவந்தது. அப்ப போக முதல் மணியன் நினைச்சுச் சந்தோஷப்பட்ட விசியம் என்னெண்டால் ‘ஆசையா  அன்பாக் கூப்பிடுறாள்.இவ்வளவு பாசம் வைச்சிருக்கிறவள் சொல்லுறதைத் தட்டப்பிடாது.போவம்’ எண்டிட்டுத்தான் போனவன்.

உண்மையைச் சொன்னப்போனால் மணியனுக்கு ஊரைவிட்டிட்டுக் கனடா போக எள்ளளவும் விருப்பமில்லை. இஞ்சை அவனுக்கிருக்கிற காணி பூமி என்ன? அயலட்டை என்ன? நல்ல ஊத்துக் கிணறுள்ள காணியிலை உலகத்திலை உள்ள எல்லா பயிர்பட்டையும் இருக்கு. சகல வசதியும் இருந்தாலும் ஒரு குறை மனுசி வேளைக்குப் போய் சேந்திட்டாள். அதுதான் ஒண்டே ஒழிய மணியனுக்கு வேறை ஒரு குறை ஒண்டும் இல்லை. ஒரு மாதிரி மகள் கூப்பிட்டிட்டாள் எண்டதுக்காக வீடு வளவு எல்லாத்தையம் மருமோன் பெடி ஒண்டின்ரை கையிலை குடுத்திட்டுப் போனவன். போகேக்கை மகளோடை சந்தோஷமா இருக்கலாம்  ,பேரன் பேத்தியோடை விளையாடிப் பொழுது போயிடும் எண்டு பலதையும் மனதிலை வைச்சுச் சந்தோஷத்தோடைதான் போனவன். ஆனால் போனப் பிறகுதான் அவனுக்குக் கொஞ்சம் , கொஞ்சமாச் சிலதுகள் விளங்கிச்சுது. மேள்காரி இருந்து கதைக்க நேரமில்லாமல் ஓட்டம். மருமோன் வரேக்கையே களைப்போடை வருவர். வந்தால் வீட்டு வேலை இருக்கும். பிள்ளையளின்ரை நீட்டு நடப்புப் பாப்பர்.

பிறகு ஒரு கொஞ்சம் எடுத்திட்டுச் சாப்பிட்டிட்டுப் படுக்கப் போயிடுவர். மணியத்துக்குப் பகல் முழுக்கப் பிள்ளையள் இரண்டையும் மேய்க்கிற வேலை. அதிலையே தன்ரை வாணால் போயிடுமெண்டு சொன்னவன். பெடிச்சி சொல்லுக் கேக்குமாம். பெடிதான் குழப்படி எண்டும் சொல்வழி கேக்காது எண்டும் சொன்னவன். அதுகளின்ரை தாய் தேப்பன் இரண்டு பேரும் வரும்வரை மணியனின்ரை களுத்திலை கயிறுதானாம். அதுகும் ஞாயிற்றக் கிழமை எண்டால் அவை தங்கடை சினேகிதற்றை வீடுகளுக்குக் கொண்டாட்டம், பேத்டே பாட்டி எண்டு போனால் மணினுக்குச் சிறைதான். ஆனால் ஒரு சுதந்திரம் ஐஸ்பெட்டியிலை வேணுமான அளவுக்கு மற்றது இருக்கும். ஆனால் அதை எவ்வளவு எண்டு அவன் குடிக்கிறது. அதுக்கும் வாய்க்கு ருசியாச் சாப்பிட வேணும். ஆரேன் சிநேகிதங்கள் அக்கம் பக்கமாயிருந்து பத்தையும் பலதையும் கதைச்சுச் சிரிக்க வேணும்.இது தனித்தவிலை எத்தினை நாளைக்கு வாசிக்கலாம்? மணினுக்கு இப்ப ஆப்பிழுத்த குரங்கு மாதிரியான சூழ்நிலை.

போன கிழமை எடுத்து’மச்சான் பொன்னம்பலம்! இஞ்சை இருக்கேலாமைக் கிடக்கு. இப்ப நான் என்ன செய்யிறது?’ எண்டு கேட்டான். அதுக்கு நான் ‘பத்தாயிரம் டொலர் கட்டிக் கூப்பிட்டதுக்கு ஒரு மதிப்பு வேணும். பல்லைக் கடிச்சுக் கொண்டு கொஞ்சக் காலம் இரு. வாற வருசம் கோயில் திருவிழாவைச் சாட்டி வரப் பார். திருப்பிப் போறதைப் பற்றிப் பிறகு யோசிப்பம்.’ எண்டு சொன்னன்.’அதுவரையும் தாக்குப் பிடிக்குமோ தெரியாது!’ எண்டான். ‘உதை ஒரு விரதமா நினைச்சுக் கொண்டு இரு. ஜெயிலுக்குப் போட்டு வந்தவையிட்டைக் கேட்டால் அப்பிடித்தானே சொல்லினம். அப்பிடி யோசிச்சுக் கொண்டிருக்க இரண்டு ,மூண்டு வருசம் போனது கூடத் தெரியேல்லையாம். ‘

பிறகு கன நாளா மணியன்ரை தொடர்பைக் காணேல்லை. மணியன் மாதிரிக் கனபேர் கனடா போய் தங்கடை பிள்ளையளிட்டைப் உப்பிடி மாட்டுப்பட்டுப் போயிருக்கினமாம். போனவைக்குத் திரும்பிவரப் பிள்ளையள் விடுகினமில்லையாம். அங்கை அவைக்குப் பிள்ளையளைப் பாக்கிறது பெரிய வேலையாம். அதோடை பெரிய செலவுமாம் ,அதாலைதான் அவை இஞ்சை நிண்டு காசைச் செலவழிச்சும் தாய் தேப்பனைக் கூப்பிடுறவையாம். போய் உதை அனுபவப்பட்டு வந்தவை சொன்னாப் பிறகும் , உதைத் தெரிஞ்சு கொண்டும் பிறகும் போயினந்தானே.

அதிலை ஒராள் உண்மையைச் சொன்னராம். எல்லாக் குடும்பங்களிலையும் தாய் தேப்பனைக் கூப்பிடுகினம். அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வெளிநாடு பாக்கிற சந்தர்ப்பமும் பிறகு கிடையாது. நாங்கள் எப்ப பிளேனிலை போறது? வெளி நாட்டைப் பாக்கிறது? உலகத்திலை பாக்கப் போனால் எல்லாத்திலையும் கஷ்டமிருக்குதுதான். சுகத்தை அனுபவிக்க வேணும் எண்டால் கஷ்டப்பட்டுத்தானே ஆகவேணும்.இந்தியாவுக்கு சுதந்திரம் என்ன சும்மாவே கிடைச்ச து? காந்தியைப்போலை எத்தினைபேர் போராடினவை தெரியுமே?’ எண்டு சொன்னவரைப் பிள்ளையள் கொண்டு போய் வயோதிப மடத்திலை போட்டிருக்கினமெண்டு பிறகு கேள்விப்பட்டம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap