Home இலங்கை சுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு

சுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள்  புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடல் பயிற்சி (ஜிம்) நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.

சுன்னாகம் காவல் நிலையம் தற்போது உள்ள தனியார் காணியை விடுவித்து சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் காவல் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்தக் காணியில் தற்போது உடற்பயிற்சி (ஜிம்) நிலையம் இயங்கி வருகிறது. அந்த இடத்தில் காவல் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் காவல் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்த வளாகத்துக்குள் இன்று மாலை புகுந்த முகத்தில் துணி கட்டிய 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. அத்துடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்துள்ளது.

அதனால் அங்கு தீப்பிடித்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தை அடுத்து சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் தீயணைப்புப் படை வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த உடற்பயிற்சி கூடம் தற்போது சுன்னாக காவல் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் உள்ளது. யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் 15 கிலோ மீற்றர் தூரம் கடந்து வந்து தீயினை அணைக்கும் வரை சுன்னாக காவல்துறையினர்; சம்பவ இடத்திற்கு வருகை தராமல் இருந்தமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தற்போது காவல்துறையினர்; மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More