நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர், நேற்று, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை இன்று உடைத்த விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளார். விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவை கூட்டவில்லை, நிதி மோசடி, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பில் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் முதலிய 50 திரைத்துறை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தையும் பூட்டிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் விஷால் மற்றும் அவருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் இன்றைய தினம் தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டிருந்தனர். இதன்போது விஷால் மற்றும் அவரது ஆதரவு தயாரிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற வேளைளயில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

Add Comment