இலங்கை பிரதான செய்திகள்

வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!

சனி முழுக்கு 22  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்..

ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? அதுக்கு அவனிட்டை வசதி, வாய்ப்பு  இருக்கோ? எண்டதைப் பற்றி ஒருக்கா, இரண்டு தரம் யோசிச்சுப் போட்டுத்தான் கேக்கலாமோ? எண்ட  முடிவை எடுக்க வேணும்.இதை ஏன் இப்ப சொல்லுறனெண்டால் கன நாளைக்குப் பிறகு சரசக்கா நேற்றைக்கு வந்தவ. சரசக்கான்ரை மேன் கொழும்பிலை வேலை. ஒரு சின்ன பிளாற் எடுத்து குடும்பத்தோடை தங்கி இருக்கிறான். கவுண்மென்ற் வேலை எண்டால் பாருங்கோவன். எல்லாம் மட்டுமட்டுத்தானே. வீட்டு வாடகை, தண்ணி, கறன்ற், பிள்ளையள் படிப்பு போக்குவரத்து எண்டு தலைக்கு மேலை செலவோடை அவன் சீவிக்கிறதைப் பாத்திட்டு சரசக்கா இடைசுகம் தன்ரை பென்சனையும் அவனுக்கு அனுப்பித்தான் ஒரு மாதிரித் தேர் ஒடுது. இதுக்கை போன மாதம் அவன்ரை சிநேகிதன் ஒருத்தன்,  லண்டனிலை இருக்கிறவன், இடை சுகம் கூப்பிட்டுக்  கதைச்சதுமில்லையாம். இப்ப வட்ஸ் அப், வைபர் எண்டு கோதாரியள் கனக்க வந்திருக்கெல்லே?  அதிலை குழுக் குழுவாகச் சேர்த்துக் கதைக்கிறவையாம். அந்தக் குழுவிலையும் கனக்க இருக்காம். படிச்சவை, ஊர், வேலை செய்த இடம், யூனிவசிட்டி எண்டு கனக்க,  கண்ணன் கோஷ்டி வைச்சு நடத்தின மாதிரி நடத்தினமாம். சரசக்காவின்ரை பெடியும் அதிலை ஒரு குழுவிலை அம்பிட்டிட்டான். அதிலை பாத்திட்டுத்தான் சரசக்கா வின்ரை மேனை அவன்ரை பள்ளிக்கூடச் சிநேகிதன் கூப்பிட்டவனாம். ரெலிபோன் எடுத்த வீச்சுக்கு “மச்சான் உன்னை நான் மிஸ் பண்ணுறன்டா. நீயும் நானும் ஒண்டாச் சேந்து துரை கடையிலை வடையும், நன்நாரிப் பிளேன்ரியும் குடிச்சதை மறக்கலாமோ? எத்தினை திருகுதாளத்தை அந்த நாளிலை செய்திருப்பம்…. அது இது எண்டு இவனைக் கதைக்க விடாமல் கதைச்சிட்டு நாள் நேரத்தைக் குடுத்துச் சொன்னானாம் “கட்டு நாயக்காவிலை வந்து என்னை கூட்டிக் கொண்டு போய் மற்ற நாள் யாழ்ப்பாணத்துக்கு ஏத்தி விடு.உன்ரை வீட்டிலைதான் மச்சான் தங்க வேணும். நானும், மனுசியும், பிள்ளையும் தான்” எண்டு கட கட வெண்டு சொல்லிப் போட்டு போனை வைச்சிட்டு சரசுவின்ரை பெடியின்ரை ரெலிபோனுக்குத் தான் வாற விபரங்களை செய்தியாப் போட்டுவிட்டவனாம்.

இப்ப சரசுவின்ரை பெடி இதைத் தன்ரை மனுசிக்கு எப்பிடிச் சொல்லுறது? அவள் கத்தத் துவங்கிவிடுவளே. ஏனெண்டால் வீடு சின்னன். படுக்கப் பெரிசா ஒரு வசதியும் கிடையாது.இனிப் பெடி பெட்டையளின்ரை படிப்பும் குழம்பிப்போம். எண்டு பலதையும் சொல்லித்தான் அவள் அபிஷேகம் செய்வள் எண்டு பெடிக்குப் பயம்.இருந்தாலும் அவளுக்குச் சொல்லாமல் ஒண்டும் செய்யேலாது. எப்பிடியும் ஒரு அறையை ஒதுக்கத்தான் வேணும் எண்டு மெல்ல ஒரு பிளான் போட்டு இரவு போய் நல்ல கோழிக் கொத்தொண்டை வேண்டிக் கொண்டு வந்து வைச்சிட்டுக் கதையைத் துவங்கினால், சனசுவின்ரை மேன் எதிர்பார்த்ததுக்கு எதிர் மாறாக் கிடந்திதாம் அவளின்ரை மறுமொழி.

“பாருங்கோவன் நீங்களும் இருக்கிறியள்தானே? ஒருக்காத்தன்னும் அந்தாளின்ரை நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட்டிருக்கலாம். அங்கை லண்டனிலை அவையள் தலைகால் தெறிக்க ஒடுத்திரியிறவைக்கு எங்களை மாதிரி நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட நேரம் இருக்காது. இருந்தும் பாத்தனியளே? வெளிக்கிட்டு வரேக்கை எங்களை யோசிச்சிருக்கிதுகள். ஓம் எண்டு சொல்லுங்கோ. இரண்டு நாள்தானே. ஒரு மாதிரி சரிகட்டலாம்” எண்டு சரசுவின்ரை மேன் பெண்சாதி சொன்னதும் அவன் கெலிச்சுப் போனானாம். எண்டாலும் அவனுக்குத் தெரியும் தன்ரை மனிசீன்ரை நோக்கம். கனகாலமா அவள் தன்ரை பெடியை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேணும் எண்டும் அதுக்கு ஆராவது உதவி செய்ய வருவினமோ எண்டும் எதிர்பாத்திருந்தவள். இப்பிடிக் கிடைச்ச சந்தர்பத்தை விடுவளோ! அதைவிட அவள் எதிர்பார்த்தது வெளி நாட்டிலை இருந்து வாறவை வெறுங்கையோடை வராயினம். வரேக்கை எதையாவது கொண்டுதான் வருவினம். போயேக்கையும் அங்கத்தைக் காசு சின்னனா எண்டாலும் சுருட்டிக் கையுக்கை வைப்பினம். இஞ்சை  உள்ளவைக்கு அது பெரிசுதானே? இனி இப்பிடிப்பட்ட உறவு இண்டையோடை நிக்கப் போகுதே? – எண்டு அவளின்ரை எண்ணம்.

அவள் தங்கடை இரண்டு அறையளிலை ஒண்டை அமளியாத் துப்பரவாக்கி. அதுக்கை பான் ஒழுங்கா வேலைசெய்யுதோ எண்டதைப் பாத்து. கட்டில், தலையணி, பெட் சீற், அலுமாரி எண்டு எல்லாத்தையும் ரெடி பண்ணி அதோடை வாறவைக்குச் சாப்பிட எண்டு பத்தும் பலதையும் வேண்டினதோடை காசாகவும் ஒரு ஐயாயிரத்தை எடுத்து வைச்சிட்டு தன்ரை புருசன்ரை சிநேகிதன் வாற அண்டு, பொங்கல் தீவாளிக்கு வேளைக்கு எழும்பி ஆயுத்தம் செய்யிற மாதிரி மணிக்கூட்டிலை எலார்ம் வைச்சு எழும்பி ஓரே தடல் புடலாக்கிடந்ததாம். ஆனால் அவனுக்குத் தான் தலையிடியாப் போச்சு. அந்த மாதம் கறண்ட்டுக்கும், தண்ணிக்கும், வீட்டு வாடகைக்கும் எண்டு சேத்து வைச்ச காசைத்தான் அவன்ரை மனுசி எடுத்து விளையாடினவள். கேட்டதுக்குச் சொன்னவளாம் அவை போயேக்கை தாறதிலை அதுகளையெல்லாம் கட்டலாம் தானே எண்டு. இப்பிடி ஒரு மாதிரி லண்டனிலை இருந்து வந்த சிநேகிதன்ரை குடும்பத்தை கட்டு நாயக்காவிலை போய் கூட்டிக்கொண்டு வந்து வடிவாக் கவனிச்சவளாம். அவையும் வந்த உடனை ஒரு பைக்கற் சொக்கிலேட்டும், அவனுக்கு முகம் சவரம் பண்ணுற பிளேட்டுப் பைக்கற்றும் குடுத்தவனாம். ஒரு போத்திலை எடுத்துக் காட்டிச் சொன்னானாம் “நீ மச்சான் குடிக்கிறேல்லை எண்டு கேள்விப்பட்டனான். அதாலைதான் உனக்கு வேண்டிக்கொண்டு வரேல்லை” எண்டு சமாளிச்சிட்டுப் போட்டானாம். நிண்ட இரண்டு நாளும் வடிவாத் திண்டு குடிச்சிட்டு வெளிக்கிட்டு யாழ்ப்பாணம் போயேக்கை பஸ்ஸுக்கு சீற் புக் பண்ணின காசை எவ்வளவு எண்டு கேட்டுக் குடுத்தவனேயல்லாமல் ஒரு வெள்ளிக்காசும் கூடக் குடுக்கேல்லை. அதுக்குள்ளை அவன் வந்து நிண்டதாலை சரசுவின்ரை மேனுக்கு ஆறு ஏழு செலவாப்போச்சாம். சரி வந்து திரும்பிப் போயேக்கை செய்வனாக்கும் எண்டு மனமாறி இருக்கு போயேக்கையும் சொல்லாமல் கொள்ளாமல் போற தினத்துக்கு முதல் நாள் வந்திறங்கி முன்னம்  வந்து நிக்கேக்கை செய்த மாதிரியான செயற்பாட்டோடை லண்டனுக்கு வெளிக்கிட்டுப் போயிட்டானாம். “கனகாலத்துக்குப் பின்னாலை வந்தது பெருஞ் செலவாப்போச்சுது” எண்டு சொல்லி அன்னம் பாறினவனாம்.

இப்ப சரசுவின்ரை பெடி தன்ரை மனுசியின்ரை காப்பொண்டை அடைவு வைச்சுத்தான் வீட்டுச் செலவைச் சமாளிச்சிருக்கிறானெண்டு சரசுவந்து மண்ணள்ளிப் போட்டுத் திட்டினவள். போனவன் போனதுக்கு ஒரு கோல் எடுத்துச் சொன்னவனாம் “தாங்ஸ் மச்சான். லண்டனுக்கு வந்தால் என்னட்டைக் கட்டாயம் வா” எண்டு. அவனுக்குத் தெரியும் சரசுவின்ரை பெடி கடைசிவரைக்கும் லண்டனுக்குப் வரமாட்டான் எண்டு. அந்தத் தைரியத்தலைதான் அவன் வா எண்டு சொல்லி இருக்கிறான்.

அப்ப பாருங்கோ.சும்மா சிவனே எண்டு தன்ரை கஷ்டம் தன்னோடை இருக்கட்டும் எண்டு இருந்தவனை லண்டனிலை இருக்கிற சிநேகிதன் வைபர் குழுவுக்குள்ளாலை தொடர்பு கொண்டு கதைக்கப்போய் நடந்த வில்லங்கத்தைப் பாத்தனியள்தானே?

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்..

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.