காவல்துறை திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ்தொடர்ந்தும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் இத் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஊடகத்துறை சார்ந்த அரச நிறுவனங்கள் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு உட்பட 21 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது. ஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment