இந்தியா பிரதான செய்திகள்

நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை…

இந்தியாவின் பிரபல வர்த்தகர் விஜய் மல்லையா நேற்றைய வழக்கு விசாரணையின் பின்னும் பிணையில் தொடர்ந்து இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது விஜய் மல்லையா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். இந்த வழக்கில் நேற்றே தீர்ப்பளிக்கப்படலாம் எனவும், அந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையலாம் எனவும், விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற என்ற எதிர்பார்ப்பும், மேலோங்கி இருந்தது.

எனினும் விஜய் மல்லையா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தமது கட்சிக்காரருக்கு எதிராக இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்வியை முன்வைத்தனர். இந்தியாவை சேர்ந்த விசாரணை அதிகாரிகளால் இந்திய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் (சாட்சியியல் சட்டம்) தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கொண்டு இந்தியா – பிரிட்டன் இடையிலான நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதாடினர்.

சில சாட்சிகளின் வாக்குமூலங்களை வைத்து தப்பும் தவறுமாக அரசு அதிகாரிகளால் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களை முன்வைத்து நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது. மேலும், இந்தியாவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான விசாரணை நடத்திய அதிகாரிகளின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2-ம் திகதிவரை பிணை அளித்து உத்தரவிட்ட வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், திகதி குறிப்பிடாமல் வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.

இந்தியாவுக்கு விஜய் மல்லையா அனுப்பி வைக்கப்பட்டால் அவரை அடைத்து வைக்கும் மும்பை ஆர்த்துர் ரோடு மத்திய சிறைச்சாலையில் உள்ள இயற்கையான வெளிச்சம் மற்றும் மருத்துவ வசதி தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனேகமாக, ஏப்ரல் 2-ம் தேதிக்குள் இந்திய அரசு அளித்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யும் தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், தனக்கு திருப்தியாக இருந்தால் இதன் அடிப்படையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கலாம். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

எனினும், இந்த உத்தரவை எதிர்த்து 62 வயதுடைய விஜய் மல்லையா தரப்பு லண்டன் மேல் நீதிமன்றில் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கு முடிந்து. தீர்ப்பு கிடைத்து அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply