Home இலங்கை அடுத்த கட்டம் என்ன? பி.மாணிக்கவாசகம்

அடுத்த கட்டம் என்ன? பி.மாணிக்கவாசகம்

by admin

அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருந்த ஜனாதிபதியின் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பதில் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 வருடங்களுக்கு பதவியில் நீடித்திருக்க முடியுமா, என்பதற்கு சட்ட ரீதியான விளக்கம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.
ஜனாதிபதியின் சட்டரீதியான பொருள்கோடல் கேள்வியைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் தற்போது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி 5 வருடங்கள் மாத்திரமே பதவியில் இருக்க முடியும் என்ற வியாக்கியானத்தை அளித்திருக்கின்றது. அதாவது அவர் 2020 ஆம் ஆண்டு வரையிலுமே பதவியில் இருக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.
நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஒரு முடிவுகட்டுவேன் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கால வாக்குறுதியாக இருந்தது. இந்த வாக்குறுதிக்கு ஆணை வழங்கும் வiயிலேயே, மக்கள் அவரை ஜனாதிபதியாக தேர்தலில் தெரிவு செய்திருந்தார்கள்.
ஜனாதிபதியின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்வது என்ற திட்டமே முதன்மை பெற்றிருந்தது.  அது மட்டுமல்லாமல், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழிக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம், 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையிலான அரசியலமைப்பில் புரட்சிகரமான பல மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 6 வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக நிiவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 18 அரசியல் திருத்தச் சட்டத்தின் பல அம்சங்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்  மூலம் இல்லாமல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து, பதவியில் இருந்த ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன புரட்சிகரமாகச் செயற்பட்டிருந்தார். அவ்வாறு செயற்பட்டிருந்தவரா, தான் 6 வருடங்கள் பதிவியில் இருக்க முடியுமா அதற்கு வழியிருக்கின்றதா என்ற தோரணையில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்து நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு அதிகார வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதி முக்கிய கொள்கையைக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் 6 வருடங்கள் பதவியில் இருக்க முடியுமா என்று நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டார் என்பதற்கு சரியான அரசியல் ரீதியான விளக்கம் இன்னும் வெளியாகியாதாகத் தெரியவில்லை.
ஆனால் இதற்குப் பல்வேறு காரணங்கள் பலராலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. முக்கியமாக 2020 ஆம் ஆண்:டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தான் பதவியில் இருக்கும் போதே நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்திடம் தனது பதவிக்காலம் 6 வருடங்களா அல்லது 5 வருடங்களா என்ற கேள்வியைக் கேட்டிருந்தார் என்று ஒரு காரணம் கூறப்பட்டிருந்தது.
சிக்கலான நிலைமை
ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள நிறைவேற்று அதிகார வலிமையை மேலும் அதிகரித்து தனது குடும்ப ஆட்சி முறைகொண்ட ஓர் அரசியல் பாரம்பரியத்தை உருவாக்குவதற்காகச் செயற்பட்ட முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்யிட்டு வெற்றியீட்டின.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்காக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் இரண்டு கட்சிகளும் ஆட்சியில் தொடர்ந்து இணைந்திருக்கின்றன. நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து அரசோச்ச வேண்டிய தேவையை இரண்டு கட்சிகளினதும் தலைவர்களும் உணர்ந்திருக்கின்றனர்.
எனினும், ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியை நடத்த வேண்டும் என்று அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் முனைப்புடன் செயற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரிடமும் தனித்து ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அரசியல் முனைப்பு காணப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்துடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை இரண்டு கட்சிகளும் பல்வேறு தடைகள் முட்டுக்கட்டைகள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் முழுமையாகக் கொண்டு நடத்துவற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் வரையிலும், இந்த முயற்சி வெற்றியளித்தாலும்கூட, அடுத்த பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. அதற்கான தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே பிணைமுறி விசாரணை அறிக்கை வெளிவந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு சிக்கலான நிலைமைக்குள் தள்ளியிருக்கின்றது. பிணை முறி விவகாரத்தில் மத்திய வங்கியின் செயற்பாடுகள் ஊழல்கள் நிறைந்ததான தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கியவரும், அவரால் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமாகிய அர்ஜுன மகேந்திரன் இந்த விவகாரத்தில் பெருந் தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெனியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்துடன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவும் இந்த விவகாரத்தில் பொய்ச்சாட்சியம் அளித்ததாகவும், நிதிமோசடிக்குத் துணைபோனதாகவும் பிணைமுறி விவகார விசாரணையில் தெரியவந்துள்ளதை அந்த அறிக்கையின் மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார்;. முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சியின் உப தலைவராக இருந்த அவரே, ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகரத் தலைவராகவும் மற்றும் வடகொழும்பு பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
ரவி கருணநாயக்க பிணை முறி விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தார் என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள களங்கமாகவும் அதன் செல்வாக்கைப் பாதிப்பதாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பொதுத் தேர்தலின் முக்கியத்துவம்
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுனராக, தனக்கு வேண்டியவரும் நெருங்கியவருமாகிய அர்ஜுன மகேந்திரனை நியமித்தபோது, சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒருவரை எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது அவர் நல்லவர் அவரை நம்பலாம். நம்புங்கள். அவருக்கு நான் உத்தரவாதம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆனால் பிணைமுறி விவகார விசாரணை அறிக்கையில் அர்ஜுன மகேந்திரன் நிதிமோசடியில் ஈடுபட்டிருந்தார் என்று வெளிப்படுத்தப்பட்டிருப்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிணை முறி விவகார விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான நெருக்கத்தில் இடைவெளி தோன்றியது. இதனையடுத்து, ஜனாதிபதியின் செயற்பாடுகள் பிரதமருக்குத் தெரியாத வகையில் இரகசியமாகக் கையாளப்பட்டமை குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கவலையும் கரிசனையும் கொண்டிருந்தனர். ஜனாதிபதியிடம் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதையடுத்து, அது பிரதமருக்குக்கூட வெளிப்படுத்தப்படவில்லை. இது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு சிக்கலான விடயமாக மாறியிருந்தது.
இத்தகைய ஒரு நிலையிலேயே, 6 வருடங்களுக்கு பதவியில் இருக்க முடியுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடாகக் கருதிய ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடி நிலைமைகளை ஆராய்ந்திருக்கின்றனர்.
ஊழல்களை இல்லாமல் செய்வதும், ஊழல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்திற்கான முக்கிய  நோக்கங்களில் ஒன்று. பிணை முறி விவகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த முக்கியஸ்தர்கள் தொடர்புபட்டுள்ள பின்னணியில் அந்தக் கட்சியுடனான அரசியல் செயற்பாடுகளைக் கைவிட்டு, அடுத்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய அத்திவாரமாகவே தனது பதவிக்காலத்தில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருட பதவி குறித்த சந்தேகத்திற்கு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்ததாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது.
கட்சி அரசியல் நலன் சார்ந்து, தனது பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்ததாகக் கருதப்பட்டாலும்கூட, மறுபக்க அரசியல் தரப்பில் அவருடைய செயற்பாடு போற்றத்தக்கதாகக் கருதப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 3 வருடங்கள் கழிந்துவிட்டன. மிஞ்சியிருக்கின்ற காலம் எவ்வளவு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கேற்ற வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வெளிப்படையாக அவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியதாகவே அந்தத் தரப்பினரால் நோக்கப்படுகின்றது.
பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் தனக்கு ஏற்படுகின்ற சந்தேகம் குறித்து தெளிவு பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுவது ஒன்றும் புதிதல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருந்தார் என்பதை அந்தத் தரப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள் . அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தின் உதவியை நாடியதென்பது இயல்பானதொரு நடவடிக்கை என்றே அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
வியாக்கியானம் என்ன?
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன மறுநாள் 9 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனடிப்படையில் 6 வருடங்கள் பதவி வகிக்க முடியுமானால் அவர் 2021 ஜனவரி மாதம் வரையில் அதிகாரத்தில் இருக்க முடியும். ஆனால் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலையடுத்து, அடுத்த பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவியில் இருக்க முடியுமானால், 2021 ஆம் ஆண்டு வரையில் அதிகாரத்தில் அவர் இருக்கும்போது அடுத்த பொதுத்தேர்தலை 2020 ஆம் ஆண்டு நடத்த முடியும். அவ்வாறு பதவியில் இருக்கும்போது நடத்தப்படும் தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த நாட்டின் அரசியல் ரீதியான ஐதீகம்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய 6 வருடங்கள் அவர் பதவியில் இருக்க முடியும் என தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி,  6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருடைய பதவிக்காலத்தில் மாற்றம் செய்வது என்பது அவரைத் தெரிவு செய்த மக்களுடைய இறைமையை மீறுகின்ற ஒரு செயலாகும் என அவர் வாதிட்டிருந்தார்.
ஆனால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்றே வரையறுத்திருக்கின்றது. அது குறித்து சட்ட வாதம் செய்த சட்டமா அதிபர் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் சுயபரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற விதப்புரைகளோ அல்லது சட்டவிதிகளோ அதில் உள்ளடக்கப்படவில்லை. சுயபரிசோதனைச் செயற்பாடுகளை உள்ளடக்கி அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்படுவதில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.
இருப்பினும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்றே உச்ச நீதிமன்றம் நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் இவா வணசுந்தர, புவனிக்கா அலுவிஹார, சிசிர டி அப்று, கே.சித்திரசிறி ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர் குழுhமை உள்ளடக்கிய அமர்வின் பின்னர் தெரிவித்திருக்கின்றது.
ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தை 5 வருடங்களாகக் குறைப்பதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் செய்யப்படுகின்ற திருத்தம் தொடர்பில் எழும் சந்தேங்களை நிவர்த்திப்பதற்காக பின்வருமாறு பிரகடனப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் 2015 ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு முந்திய தினத்தன்று, பதவி வகிப்பவர்கள், இந்த திருத்தச் சட்டத்தில் செய்யப்படுகின்ற சட்டவிதிகளுக்கு அமைய இந்தத் திகதிக்குப் பின்னரும் தொடர்ந்து பதவி வகிப்பார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த விடயம் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் போன்ற அரசியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை ஜனாதிபதிக்கு வெளிப்படுத்தி, அவர் ஐந்து வருடங்கள் மாத்திரமே பதவியில் இருக்க முடியும் என்பதை கூறியிருக்கின்றது.
ஆயினும் ஜனாதிபதியின் 5 வருட பதவிக்காலம் என்பது இரண்டு முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்னவாக இருக்கும், என்பது குறித்து பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More