இலங்கை பிரதான செய்திகள்

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள்; ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும் :


சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் வருகின்றபோது தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் சிலை வைத்து, ஊடுருவல்கள் நடைபெறுகின்ற இந்த சூழ்நிலையில் இரு சமூகங்களும் ஒருமித்து பயணிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இறக்காமம் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாணிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பல்லினத் தன்மையை பேணுவதில் மாணிக்கமடு கிராமம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், ஒரு சமூகம் இது எங்கள் நாடு என்றும், நாங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள் என்றும் நினைக்கின்றனர். இதனாலேயே பிரச்சினைகள் உருவாகுகின்றன.  மாணிக்கமடுவிலுள்ள தமிழர்களை யாரும் வந்தேறு குடிகளாக பார்க்கமுடியாது. நீங்கள் இங்குள்ள பூர்வீக குடிகள்.

மாயக்கல்லி மலையில் அத்துமீறி, சிலை வைக்கப்பட்டது இன்று தேசியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்றதை கேள்விப்பட்டதும் உடனே மாணிக்கமடு கோயில் முன்றலுக்கு வந்த நான், உங்களை அழைத்து இது தொடர்பாக பேசினேன். இரு சமூகமும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தினேன்.

தமிழர்களின் போராட்டங்களில் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டும். முஸ்லிம்களின் போராட்டங்களில் தமிழர்கள் பங்குகொள்ள வேண்டும். சிறுபான்மைக்கு பிரச்சினை வருகின்றபோது இரு சமூகங்களும் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும். நான் சம்பந்தன் ஐயாவையும் அழைத்துக்கொண்டு, மாயக்கல்லி மலை சிலை விவகாரத்திலுள்ள ஆபத்துகள் குறித்து ஜனாதிபதியிடம் பேசியுள்ளோம். சமயத்தின் பெயரால் மக்களை இலகுவாக உணர்ச்சிவசப்படுத்தலாம் என்பதால், இதனை நாங்கள் பக்குவமாக கையாளவேண்டும்.

இங்கு நடக்கின்ற ஊடுருவல்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களை கட்டுப்படுத்துவதற்காகத்தான் நாங்கள் இங்கு யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். யானைச் சின்னத்தில் சபைகளை வென்றுகொடுத்தால், எங்களது பிரச்சினைகளை தீர்த்து தரவேண்டிய தார்மீக பொறுப்பு ஐ.தே.க. தலைமைக்கு இருக்கின்றது.

ஒரே மொழி பேசுகின்ற நாங்கள் எங்களது ஒற்றுமையை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுச் சின்னத்தில் வந்திருக்கும் எங்களுக்கு உங்களது வாக்குளை தாரளமாக வழங்குங்கள். இறக்காமம் பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றினால், குடுவிலுக்கும் மாணிக்கமடுவுக்கும் ஒரு பட்டியல் ஆசனத்தை பங்கிட்டுக் கொடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.