Home இலங்கை ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக

by admin

பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), திறைசேரி அலுவலகங்களின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வுகள்
வடமாகாண முதமைச்சரின் அமைச்சு வளாகம் – கைதடி
22.01.2018ம் திகதி திங்கட்கிழமை காலை 09.45 மணியளவில்
முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா…………………….

இன்றைய விழாவில் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிகழ்வை சிறப்பித்து ஆசியுரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் சர்வமத குருமார்களே, வடமாகாணசபை அவைத்தலைவர் அவர்களே, வடமாகாணசபையின் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களே, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி. மோகனதாஸ் அவர்களே, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), திரு. சந்திரகுமாரன் அவர்களே, மற்றும் உயர் அதிகாரிகளே, உத்தியோகத்தர்களே!

இன்றைய தினம் வடமாகாணசபையின் வரலாற்றில் ஒரு முக்கியதினமாகக் கொள்ளப்படலாம். முதலமைச்சரின் அமைச்சுடன் இணைந்த அனைத்து அலகுகளும் ஒரே கூரையின் கீழ் தத்தமது அலுவலகங்களைக் கொண்டிருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள், விடயங்கள் ஆகியவற்றை உடனடியாகவே கலந்துபேசி தீர்வு காணக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இன்று கனிந்துள்ளது. கடந்த 04 வருடங்களாக ஒவ்வொரு அலுவலகம் ஒவ்வொரு இடத்தில் என பல்வேறு இடங்களில் இயங்கிவந்த காரணத்தினால் பல பல பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு எட்டமுடியாது கடிதப் போக்குவரத்தில் வீணே காலத்தைக் கடத்தி வந்தோம். அந்த நிலைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை நிர்வாக முறைமைகள் பலவருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அக் காலத்தில் வடமாகாணத்தில் காணப்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரிய நிர்வாக அலகுகள் திருகோணமலை நகரத்தில் தொடர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்துடன் வடமாகாணத்திற்கான மாகாணசபை உருவாக்கப்படாமையால் ஆளுநர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே எமது உத்தியோகத்தர்கள் வேலை செய்ய வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 2007ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபைகள் பிரிக்கப்பட்டு வடக்கு மாகாணசபை யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணசபை திருகோணமலையிலும் இயங்க வேண்டி இருந்த போதிலும் 2013ம் ஆண்டுவரை வடமாகாண ஆளுநர் ஆட்சியின் கீழேயே வடமாகாணசபை இயங்கி வந்தது. 2011ம் ஆண்டு வரை திருகோணமலையில் இயங்கி வந்தது.

2013ம் ஆண்டில் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி அதிகாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் எமது அரச உத்தியோகத்தர்கள் தமது பழக்கத்தின் நிமித்தம் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்க எத்தனித்தனர். இது வடமாகாணசபையின் முதலமைச்சர் என்ற வகையில் எனக்கும் மற்றும் அவைத்தலைவர், ஏனைய அமைச்சர்கள், அங்கத்தவர்கள் என அனைவருக்கும் எமது நிர்வாக சக்கரத்தை நகர்த்திச் செல்வதற்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. தினமும் வேலை முடிந்து வீடு திரும்ப முன்னர் நேரடியாக ஆளுநரின் அலுவலகத்திற்கும் முன்னைநாள் அமைச்சரின் அலுவலகத்திற்கும் விஜயம் செய்து அவர்களின் பணிப்புரைகளைப் பெற்றே வீடு செல்ல வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை அவர்களுக்கு அக்காலத்தில் இருந்தது என அறிகின்றேன்;;.

எனினும் தற்போது நிலைமைகள் எமது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சுதந்திரத்துடன் தமது பூரண ஆதரவை வழங்குவதன் மூலம் எமது அலுவலகக் கடமைகளை இலகுவாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது.

நீண்ட போருக்குப் பிந்திய இச் சூழலில் வடமாணத்தில் வாழும் பொது மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். வாழ்வாதாரம், வீடமைப்பு, வேலை வாய்ப்பு, சிறுதொழில் முயற்சி, குடியிருப்புக் காணியை மீளப் பெறல், உளவியல் தாக்கங்களில் இருந்து விடுபடல், உடல் ஊனமுற்றவர்களின் அவசியத் தேவைகள், காணாமல் போனவர்கள், கைது செய்து இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் வாடுகின்றவர்கள் என இம் மக்களின் பிரச்சனைகள் நீண்டு செல்கின்றன.

இவர்களின் வாழ்வாதார நிலைமைகளை சற்று மேல் உயர்த்தி விடுவதற்கும் பாதிப்புற்றவர்களைச் சமுதாய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதற்குமாக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதனை வலுவாக்க உங்கள் ஒவ்வொருவரினதும் பங்காற்றல் தேவைப்படுகிறது.

அரசியல் தொடர்பாகவோ அல்லது ஆளும் கட்சியின் குறை நிறைகள் தொடர்பாகவோ உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பது நீங்கள் அறிந்ததொன்று. ஆனால் உங்களை நாடி வருகின்ற ஏழை மக்களை அன்பாக வரவேற்று அவர்களின் தேவைகளை அமைதியாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு.

மக்களின் தேவைகளை உங்கள் அதிகார மட்டத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்க முடியுமாயின் அவற்றை தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நீங்கள் முன்வரவேண்டும். எமது தாமதங்கள், தள்ளிப்போடல்கள் எந்தளவு பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் பேரூந்தில் வரப்பல மைல்கள் தூரம் நடந்துவந்தே பேரூந்தில் ஏறுகின்றார்கள். காலை 4.00மணிக்கு அவர்கள் பயணம் தொடங்குகின்றது. உடுவிலில் இருந்து வருபவரும் உயிலங்குளத்தில் இருந்து வருபவரும் உங்களுக்கு ஒன்றுதான். ஆனால் எத்தனை மணி நேரமாகப் பயணம் செய்து உங்களை வந்தடைந்துள்ளார்கள் என்பதும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும். உடுவிலைத் திருப்பி அனுப்பினால் உளப்பாதிப்பு இருக்கும். உயிலங்குளத்தைத் திருப்பி அனுப்பினால் உடல், உள, நிதிப் பாதிப்புக்கள் எல்லாம் இருக்கும். ஆகவே தூரத்தில் இருந்து வருபவர்களின் துயரங்களைப் போக்க உரியதைச் செய்ய முன்வாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்;.

உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாக இருப்பின் அவர்களை முறையான உத்தியோகத்தர்களிடம் அல்லது உயர் அதிகாரிகளிடம் வழிப்படுத்துங்கள்.  ஒரு சிறிய விடயத்தை நிறைவேற்றுவதற்காக பல தடவைகள் அவர்களை அலைக்களிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் பல நூறு ரூபாய்கள் செலவழித்தே பல்வேறு இடங்களில் இருந்து இவ் அலுவலகத்திற்கு பேரூந்துகள் மூலமாகவோ அல்லது பிரத்தியேக வாகனங்கள் மூலமாகவோ வந்து சேர்கின்றார்கள். இவ்வாறு செலவிடப்படும் பணம் அவர்களின் ஒருநாள் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவும்.

சிறிய படிவங்களை நிரப்புவது மற்றும் கோரல் கடிதங்களை வரைவது தொடர்பில் அவர்களுக்கு உதவுங்கள். படிக்காமை அவர்கள் குற்றமல்ல. சூழல் அதற்கு இடமளிக்கவில்லை என்பதே உண்மை.

உங்கள் சிறு சிறு உதவிகள் அவர்களின் மனதில் உங்கள் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்தும் என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். உங்கள் மீதான மதிப்பு உயரும் போது எங்கள் மீதான மதிப்பும் உயரும். தினமும் உங்கள் கடமைகள் முடிவுற்று வீடு செல்லும் போது இன்று எத்தனை பொது மக்களுக்கு நான் உதவி புரிந்தேன் என்ற கேள்வியை ஒரு தடவை மீட்டுப் பாருங்கள். அது உங்கள் உள்ளத்திற்கும் மனதிற்கும் நிறைவைத் தருவன. எத்தனையோ சிறுசிறு விடயங்களை நாங்கள் செய்து கொடுக்கும் போது அவற்றின் பெறுமதி எமக்குத் தெரிவதில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைத்து அவர் வந்து சில தருணங்களில் உங்கள் காலடியில் விழுந்து கும்பிட்டு நன்றி தெரிவிக்கும் போதுதான் அவருக்கு எமது செயல் எத்தனை பெறுமதியானது என்பது புரியவரும்;. உங்களுக்கு ஒரு சிறு பணி. அவர்களுக்கு அது மனப்பிணி அகற்றும் பாரிய பணி.
திட்டமிட்டு தமிழ் மக்களின் இருப்புக்களை, நிலங்களை, தொழில்களைச் சூறையாட தென்னவர்கள் கங்கணம் கட்டி நிற்பதாக எமக்குப் புலப்படுகிறது. அவர்கள் தமக்கு உதவுவதற்காகப் பல திணைக்களங்களை எம் மத்தியில் உலவ விட்டு தமது காரியங்களை நிறைவேற்றி வருகின்றார்கள். எமது தாய் தந்தையர் அதன் பின் நாம் என காலாதி காலமாகக் கூடி மகிழ்ந்து குலவிய நில புலங்களை வன இலாகா, வனவிலங்குத் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி, கனிய வளம், பறவைகள் சரணாலயம், கடற்கரையோரப் பாதுகாப்பு என்று பல்வேறு திணைக்களங்கள் மூலம் தினமும் கையகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலைமைகளில் இருந்து நாம் எமது மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் இவ் வகையான தவறான நடவடிக்கைகளை துணிந்து எதிர்ப்பதற்கும் எடுத்துக் கூறுவதற்கும் நீங்கள் யாவரும் முன்வரவேண்டும். நீங்கள் அவற்றைப் பகிரங்கமாகக் கூறுவது உங்களின் கடமைகளை அல்லது எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக் கருதுவீர்களாயின் அவ் விடயங்களை எம்மிடம் எடுத்துக் கூறுங்கள். நாம் அவற்றை மத்திய அரசிற்கும் உலக நாடுகளுக்கும் மற்றும் உதவி புரியக் கூடிய நாடுகளுக்கும் எடுத்துக்கூறி விமோசனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்கத் தயாராகவுள்ளோம்.

எனவே அன்பார்ந்த உயர் அதிகாரிகளே, உத்தியோகத்தர்களே நாம் அனைவரும் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக! முதலமைச்சர், முதன்மைச் செயலாளர் செயலகங்கள் என்று பாராது வேற்றுமையில் ஒற்றுமை காணும் விதத்;தில் மக்கள் சேவைச் செயலகமாகக் கடமையாற்ற முன்வருவோமாக! வடமாகாணசபை இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரு முன்மாதிரியான சபையாக ஏற்கனவே சில விடயங்களில் தனது தனித்துவத்தைக் காட்டியுள்ளது. மேலும் நாம் எமது சேவையையும் செயற்றிறனையும் மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டு என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More