Home இலங்கை வழக்கொழிந்துபோகும் ஈழத்துப் பொப்பிசை!

வழக்கொழிந்துபோகும் ஈழத்துப் பொப்பிசை!

by admin
 

இலங்கை தமிழில் பொப் இசை மூலம் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக மக்களை கவர்ந்த சிலோன் மனோகர் மரணத்துடன் சிலோன்  பொப் தமிழிசை வழக்கொழிந்து போகும் நிலைக்கு தற்போது வந்துள்ளதாக தி இந்துப் பத்திரிகை குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் தி இந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு.

சின்னமாமியே, உன் சின்னமகளெங்கே, பள்ளிக்குப் போனாளோ, படிக்கப்போனாளோ” என்ற பிரபல பாப் பாடலையும், ” சுராங்கனி, சுராங்கனி, சுராங்கனிக்கா, மாலுக் கண்ணா வா, மாலு, மாலு, மாலு, சுராங்கனிக்கா மாலு, சுராங்கனிக்கா, மாலுக்கண்ணா வா” என்ற பாப் இசை (பொப்) இசைப் பாடலையும் ஈழத்து நடிகரான மனோகரன் பாடியுள்ளார்.

மனோகரன், இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். அத்துடன், ‘சின்ன மாமியே ’ மற்றும் ‘சுராங்கனி சுராங்கனி’ என்ற தமிழ் சிங்களம் கலந்த பாப் பாடலையும் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார்.

அவர் 5 மொழிகளில் சுமார் 260 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் 1972 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியான நாடக தயாரிப்பாளராக அவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோய் தேவானந்த் என்பவரின் தயாரிப்பில் உருவான பாச நிலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஏ.ஈ.மனோகரன் முதன் முதலாக நடித்தார்.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் வந்த காலகட்டங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி  பாப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன்.

1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டு வரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசை பாடல்களின் தாக்கம் இருந்த காரணத்தினால் 1960 களில் பாப் இசைக்கு அவ்வளவாக வரவேற்பில்லை.

அதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களால் அனைத்தும் பின்னுக்கு சென்றது. 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டபோது தமிழ்  பாப் இசை மட்டும் இன்றி சிங்கள பாப் இசையும் வீறுகொண்டெழுந்தது பிரசித்தி பெற்றது. அந்த காலக்கட்டத்தில் அனைவராலும் வரவேற்கப்பட்ட “சின்னமாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல், “சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல், “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல், “குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றன.

அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி தமிழகத்திலும் அனைவராலும் ரசிக்கக்கப்பட்டது. நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பாப் இசைச் துறைக்கு வர பாப் இசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் இலங்கையைத் தாண்டி வெளிவரத்தொடங்கின.

இக் காலம் ஈழத்து பாப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கை  பாப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியியல் பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன .

இதற்கு நித்தி கனகரத்தினத்தின் ‘கள்ளுக்கடை பக்கம் போகாதே’ என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளு குடிக்க தோப்புக்கே செல்பவர்களாக இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது. இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இலங்கை  பாப் இசைப்பாடல்கள் தமிழ் திரைப்படங்களிலும் இடம் பெறலாகிற்று. 1977-ம் ஆண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சுராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பாப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இன்றும் கூட சுராங்கனி போன்ற பாப் பாடல்கள் ரீமிக்ஸ் இசை வடிவில் சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்க முடியும். எனினும், 1983-க்கு பின்னர் இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டு போர் தமிழ் பாப் இசைக்கலைஞர்களையும் பாதித்தது. இலங்கையிலிருந்து பாப் கலைஞர்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தது போன்ற காரணங்களால் இன்று இலங்கை பாப் இசைப்பாடல்கள் வழக்கொழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி – தி இந்து.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More