Home இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்..

by admin

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதிபோன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இது எப்படி இலஞ்சமாக இருக்க முடியும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(27) கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பல்வேறு காரணிகளால் நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம், பல சர்வதேச தீர்மானங்களும், அழுத்தங்களும், கடும் போர்காலங்களின் நிலைமைகள் , தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் , சர்வதேச சமூகத்தின் கூடுதலான அக்கறை போன்றன காரணமாக சாதாரண உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் பார்க்க முக்கியத்துவம் பெறுகிறது.

நீங்கள் அவதானிக்கலாம் நாட்டினுடைய தேசியத் தலைவர்கள் அனைவரும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவா்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவா்கள் வேறு பல அரசியல் தலைவா்கள் இந்த தேர்தலில் தீவிரமாக ஈடு;பட்டு வருவதுடன் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார்கள். நடைபெற்ற ஊழல் விவகாரங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒற்றையாட்சி தொடருமா அல்லது தமிழீழம் மலருமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்து வருகின்றார். இந்த தேர்தலில் தான் கணிசமான ஆசனங்களை பெற்றுவிட்டால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கானவேண்டிய விடயத்தை இல்லாமல் செய்துவிடலாம் என அவா் நினைக்கின்றார். இவ்வாறு பல்வேறு காரணங்களின் நிமித்தம் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் எமது இராஜதந்திர போராட்டம் தொடர்கிறது. பல கருமங்கள் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச ரீதியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எமது பணிகள் தொடர்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு செய்வதற்கு விருப்பம் இருந்தாலும், மந்த கதியில் செய்து வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் முன்னைய அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்கள்மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு யுத்தவெற்றியை பெற்றுத்தந்த இராணுவ வீரர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்யப் போகின்றது எனத் தெரிவித்து வருகின்றமையினால். ஆனாலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம் எனத் சம்மந்தன் தெரிவித்தார்.

மேலும் ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் தீர்வு எமது மக்களின் இறையாண்மை மதிக்கப்படவேண்டும், எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை மதிப்பதாக அமைய வேண்டும், எமது சமூக கலாச்சார விடயங்களில் நாங்கள் அதிகாரத்தை செலுத்துக் கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும். ராஜபக்ஸ காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இடம்பெறாத பலவிடயங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது.

எனவே மக்களே இதுவொரு சாதாரணமான தேர்தல் அல்ல இதுவொரு முக்கியமான தேர்தல். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து அமோக வெற்றியை கொடுத்தால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதையும் மக்கள் ஜனநாயக ரீதியாக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களி்ல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என்பதாகும.; இதற்கு நான் பதில் அளிக்க வேண்டும்.

நாங்கள் எதிர்க் கட்சியில்தான் இருக்கின்றோம், தொடர்ந்தும் எதிர்க் கட்சியில்தான் இருப்போம், நாங்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் வரையில் நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கமாட்டோம.; அதுதான் தந்தை செல்வாவின் கொள்கை. 1965 க்கும் 70 க்கும் இடையில் அமரர் திருச்செல்வம் அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார.; அவர் சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக ஒரு நோக்கத்திற்காக அமைச்சராக இருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல , செனட் சபை உறுப்பினராக இருந்தவர். அதனை தவிர வேறு எந்த காலத்திலும்,தமிழரசு கட்சியை சார்ந்தவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியை சார்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் அமைச்சா்களாக இருக்கவில்லை.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களில் கூடுதலாக எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கின்றவன் நான். எங்களுடை பதவிகளை துறக்க கூட நாங்கள் பின் நிற்கவில்லை எமக்கு பதவி முக்கியமல்ல.

ஆனபடியால் நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை நாம் ஆதரிக்கின்றோம் என்பதனை நான் மறுக்கவில்லை, இந்த அரசாங்கம் விலகக்கூடாது. சில கருமங்களை நிறைவேற்ற வேண்டும், இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் எவ்விதமான பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், நடத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டத்திற்கு சாதகமாக வாக்களிக்கின்றோம் ஏன்?

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் முகமாக நாங்கள் ஆதரித்து வாக்களகின்றோம் . அந்த தேவை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் போது அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக நிறைவேற்றப்படவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருக்கிறது, மூன்றில் இரண்டு பெரும்பான்மைய அரசாங்கம் அடையலாம், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்பதை அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் தெரிவிப்பதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயறபடுகின்றோம். இந்த கருமங்களை பற்றி நாங்கள் பகிரங்கமாக பேசக் கூடாது ஆனால் சில விமர்சனங்கள் வருகின்ற போது பேசாமலும் இருக்க முடியாது.

சமீபத்தில் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் 15 பாராளுமன்ற உறுப்பினர் இலஞ்சம் வாங்கியிருக்கின்றார்கள் என ஒரு அறிக்கையை வெளிவிட்டிருகின்றார்.

எமது கட்சியின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவ்விதமாக ஒரு அறிக்கையை விடுவது ஒரு மிகவும் தரம் குறைந்த செயல் என்று நான் கருதுகிறேன். நாம் செயற்படுகின்ற போது கேவலமான முறையில் செயற்படக்கூடாது இந்த பாராளுமன்ற உறுப்பினர் கொஞ்சக் காலமாக எங்களுடைய கட்சியினுடை செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கின்றார்.

இடைக்கால அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சனியும் ஞாயிறும் அது தொடர்பில் ஆராய்ந்தோம். அதன் இறுதியில் ஒரு தீர்மானம் மேற்கொண்டோம். இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான கருமங்கள் உள்ளன பல கருமங்கள் முன்னோக்கி செல்ல வேண்டிய இருக்கிறது. எனவே இந்த விவாதத்தில் அவா் கலந்துகொள்ளாமையினால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு விவாதத்தில் உரையாற்ற அனுமதி வழங்குவது இல்லை என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள.; இதன் பின்னரே அவா் இவ்வாறு செயல்பட்டு வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஜதேகட்சி உறுப்பினர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றது போன்றே எங்களுடை பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்கி அந்த நிதியை பெற்றார்கள். இது எப்படி இலஞ்சமாக அமைய முடியும்? எனவே இவ்வாறான கருத்துக்கள் மூலம் ஒருவர் தனது தரத்தை குறைத்துக்கொள்ளலாமே தவிர மற்றவர்களின் தரத்தை குறைத்துக் கொள்ள முடியாது அதனை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

அரசாங்கத்தினால் பணம் ஒதுக்கப்படுகின்ற போது குறிப்பிட்ட வேலைகளுக்காக அதனை எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்துப்படுகின்றேபோது அதனை ஏன் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் பார்வையின் கீழ் நாங்கள் நிதானமாக பக்குவமாக செயற்படுவோம.; அவ்வாறு ஒரு தீர்வு நிறைவேற்றாமல் விட்டால் அது எமது பிழையாக அமையக் கூடாது அந்தப் பிழை வேறிடத்தில் இருக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் குறிப்பிட்டார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More