Home இந்தியா நாகேஷ் எனும் மகாகலைஞன்!

நாகேஷ் எனும் மகாகலைஞன்!

by admin

வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்… நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து ‘ஐகான்’… அடையாளம்… நாகேஷ் எனும் மகாகலைஞன்!

இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் ‘பேசாம சர்க்கஸ் கம்பெனில சேர்ந்துடு. அதுக்குத்தான் லாயக்கு இந்த ரப்பர் உடம்பு’ என்று பேசிய கேலியையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை அவர். பின்னாளில், அந்த மைனஸ் பாயிண்ட் உடம்பையே, ப்ளஸ் பாயிண்டாக்கிக் கொண்ட அவரின் மேனரிஸங்கள்… பாடி லாங்வேஜ்கள்… மிகப் பெரிய கைத்தட்டலையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தன.

‘சினிமால நடிக்கறதுக்கு ஒரு முகவெட்டு இருக்கணும்’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். நாகேஷுக்கு முகம் முழுக்கவே அம்மைத் தழும்புகள். ஆரம்பத்தில்… நடிக்க சான்ஸ் கேட்ட கம்பெனிகளெல்லாம், முகத்தைப் பார்த்தே கிண்டலடித்தன. ‘வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா’ என்றெல்லாம் கேட்டு நக்கலடித்தார்கள். இதற்காகவெல்லாம் துவண்டு போகவில்லை நாகேஷ். செருப்பும் உடலும் தேயத் தேய… சினிமா கம்பெனிகளைத் தொடர்ந்து படையெடுத்தார். ஜெயித்தார்.

சினிமாவில் ஒரு ஹிட் கொடுத்தால் போதும், அவர்களின் பின்னாலேயே சினிமா உலகம் ஓடும் என்பார்கள். ஒருகட்டத்தில், சினிமாவில் ஜெயித்த நாகேஷின் பின்னால், எல்லாக் கம்பெனிகளும் ஓடின. இதில், அவரை கிண்டலடித்து அனுப்பிய கம்பெனிகள்தான் முதலில் வந்தன.

கவிஞர் வாலியும் நாகேஷும் அறை நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்து, பாட்டெழுத அவரும் நடிக்க இவருமாக அலைந்தார்கள். இருவரில் ஒருவரிடம் காசு இருந்தால் போதும் என்று வாழ்ந்தார்கள். பின்னாளில், இருவருமே அவரவர் துறையில் கோலோச்சினாலும் வறுமையைத் தொடரவில்லை. ஆனால் நட்பை தொடர்ந்தார்கள்.

அதேபோல், ‘வாடாபோடா’ பேசிக்கொள்கிற நட்பு, பலம் வாய்ந்தது என்பார்கள். இயக்குநர் பாலசந்தருக்கும் நாகேஷுக்குமான நட்பு ‘வாடாபோடா’ ரகம்தான். சொல்லப்போனால், பாலசந்தரை, ‘பாலு’ என்று கூப்பிடும் ஒரே சினிமாக்கார நண்பர் நாகேஷ்! அதேபோல் நாகேஷ் – ஸ்ரீதர் நட்பும் அப்படித்தான்! இன்னொரு விஷயம்… ஸ்ரீதரும் பாலசந்தரும் நடிகர், நண்பர் என்பதையெல்லாம் தாண்டி, நாகேஷ் எனும் கலைஞனின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவரை ரசித்து ரசித்து கேரக்டர்கள் கொடுத்து, கதைக்கு உரமூட்டினார்கள். நாகேஷ்… அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உயிரூட்டினார்.

அதேபோல், நெகடிவ் ரோல்களில் நடித்தவர்கள், ஒருகட்டத்தில் காமெடி ரோலும் பண்ணுவார்கள். ஆனால் காமெடி ரோல் பண்ணுகிறவர், அதுவும் டாப் ஒன்னில் இருக்கிறவர், நெகடிவ் கேரக்டர் செய்தால் எடுபடுமா. எல்லோருக்கும் பிடிக்குமா. எடுபட்டது. பிடித்தது. அந்த வைத்தியைப் பார்த்து, அவரின் செயல்களைப் பார்த்து கோபப்படாதவர்களே இல்லை. மோகனாம்பாளுக்கும் சண்முகசுந்தரத்திற்கும் கொடுத்த குடைச்சல்களை, வைத்தி நாகேஷைத் தவிர யார் பண்ணினாலும் அது வில்லத்தனமாகியிருக்கும். நெகடிவ் கேரக்டராக மட்டுமே இருந்திருக்காது.

சிவாஜி அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்டிவிடமாட்டார். அதேசமயம் அவரின் பாராட்டை பார்வையாலேயே வெளிப்படுத்திவிடுவார் என்பார்கள். ‘திருவிளையாடல்’ படத்தில், அந்தப் புலவரும் தருமியும் பேசி நடித்த காட்சி. படமாக்கி முடித்ததும், ‘டேய் நாகேஷ்’ என்று அழைத்தபடி ஓடி வந்த சிவாஜிகணேசன், அப்படியே தூக்கிவிட்டாராம். ‘இந்த சீன்ல நீதாண்டா ஹீரோ. பிரமாதப்படுத்திட்டே…’ என்று புகழ்ந்தார் என்று இயக்குநர் ஏ.பி. நாகராஜன் நாகேஷை சிலாகிக்கும் போது, சிவாஜியின் பாராட்டையும் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீதர், பாலசந்தருக்கு இணையான அன்பையும் காதலையும் நாகேஷின் மீது வைத்திருப்பவர் கமல்ஹாசன். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நாகேஷ் எனும் கலைஞனைப் புகழ்ந்து வியப்பார்; வியந்து புகழ்வார். அதனால்தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொஞ்சம் விலகியிருந்த நாகேஷை, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக்கியிருந்தார் கமல். அதுவும் எப்படி, நான்கு பேரில் நாகேஷ்தான் மெயின் வில்லன்.

இயல்பாகவே நகைச்சுவை இருந்தால்தான், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதிக்கமுடியும். ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பு. இடைவேளையின் போது, உணவருந்திக் கொண்டிருந்தார்கள். தட்டில் உள்ள சிக்கனை, போல்க் எனப்படும் குச்சியைக் கொண்டு குத்திக் குத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கமல். நாகேஷ் சாப்பிட்டே முடித்துவிட்டார். கையலம்பிவிட்டு கமலிடம் வந்த நாகேஷ்… ‘என்ன இவ்ளோ குத்தியும் கோழி சாகலையா இன்னும்’ என்று சொல்ல, மொத்த யூனிட்டும் வெடித்துச் சிரித்தது.

‘நீர்க்குமிழி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’, ‘சாது மிரண்டால்’, ‘அன்பே வா’, ‘வேட்டைக்காரன்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘அவ்வை சண்முகி’, ‘நம்மவர்’… என இன்னும் இன்னும் மாஸ்டர் பீஸ் படங்களையெல்லாம் சொல்லலாம். ஆனால் தேவையில்லை… ஏனென்றால்… நாகேஷே ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ தான்!

நகைச்சுவை எனும் பதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து சப்ளை செய்த அந்த நாகேஷ்… எப்போதுமே ஒல்லிதான்… அதேசமயம் அவரின் நடிப்பு எப்போதுமே பிரமாண்டம்தான்! இன்று ஜனவரி 31-ம் தேதி நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவு நாள்.

நன்றி தி இந்து

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More