இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய் தீவு பகுதிக்குச் சென்றபோது இந்த முன்னாள் போராளி மாணவனை சந்திக்க முடிந்தது. சத்தமில்லாது, சாதனை பயின்ற இந்த சாதனையாளரின் முகத்தில் அப்பியிருந்த வேதனைதான் முகத்தில் அறைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், போரின் இறுதியில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் தனக்குக் கிடைத்த புத்தகங்களை வைத்துப் படித்து உயர்தரப் பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சையில் சித்தி எய்தியபோதும் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியை  பெறவில்லை.
இந்த நிலையில் தடுப்பிலிருந்து விடுதலை  செய்யப்பட்ட பின்னர், மீண்டும் கடும் முயற்சியில் பரீட்சையை எழுதினார். எப்படியாவது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற ஓர்மத்துடன் கல்வி கற்ற இவர் இரண்டாவது தடவையில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியை பெற்று, தெற்கில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றுலா முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறிக்கு தேர்வு செய்யப்பட்டார். உயர்தரத்தில் கலைத்துறையில் கல்வி பயின்ற இவர் ஒரு விஞ்ஞானமாணிப் பட்ட கற்கைக்கு தேர்வானார்.
மிகவும் வயது முதிர்ந்த தாய் தந்தையரின் இறுதிப் பிள்ளை இவர். அவர்கள் தமது அன்றாட காரியங்களை செய்துகொள்ளவே மிகவும் கஷ்டப்படுபவர்கள். அவர்களை தனிய விட்டுவிட்டு பல்கலைக்கழகம் செல்லும் கவலை ஒருபுறம். கறுக்காய் தீவில் வெட்ட வெளி வயலின் நடுவே ஒரு மண்மேட்டில் உள்ளது இவர்களது இக் குடிசை. இந்தக் குடிசையின் முகமே இவர்களின் கதையை சொல்லும்.
எந்தவிதமான வருமானமும் இல்லை. நண்பர்களின் உதவியுடன் பெரும் போராட்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்கிறார் இந்த முன்னாள் போராளி மாணவன். கடன் வாங்கிக் படிப்பது, பின்னர் விடுமுறையில் வந்து வேலை செய்து அதனை திருப்பிக் கொடுப்பதுமாகச் செல்கிறது இவரது நாட்கள்.  கண்களில் முகத்தில் வறுமையின் துயர். போரின் தடம். வாழ்வுப் போராட்டத்தின் தவிப்பு. ஒரு கூலித் தொழிலாளியைப்போன்ற சட்டையை அணிந்துகொண்டு வயல் வெட்டு வேலையில் ஈடுபடுகிறார்.
தன்னைவிடவும் தன்னைப்போன்ற முன்னாள் போராளி மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும், அவர்கள் கல்வியை நிறைவு செய்ய உடனேயே அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். கல்வியை முடிக்க வேண்டும், குடும்பத்தையும் சுமக்க வேண்டும் என்ற யோசனைகள் அந்த முகத்தை அலைக்கழிப்பது தெரிந்தது.
தனக்கு ஆசிரியர் தொழிலே விருப்பம் என்று கூறினார். ஒரு சமூதாயத்தை உருவாக்கும் வலிமைப்படுத்தும் ஆசிரியர் பணியை ஆற்ற வேண்டும் என்ற அவாவுடன்  கல்வியை முடித்துப் பணியபற்ற காத்திருக்கிறார். பொருளாதாரப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்ப் பலவற்றை முகம் கொண்டபடி காலத்தை எதிர்த்து போராடும் இந்தப் போராளி மாணவன் அழிக்கப்பட்ட எங்கள் தேசத்தின் நம்பிக்கை விதை. முன்னுதாரணமான போராளி.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

(இம் முன்னாள் போராளி பல்கலைக்கழக மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க இவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இவரை தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கு குளோபல் தமிழ் செய்திகள் தொடர்பினை ஏற்படுத்தி தரும்.)

2 Comments

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers