Home இலங்கை ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தேசத்தின் சுய பாதுகாப்பாகும் – 70ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி…

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தேசத்தின் சுய பாதுகாப்பாகும் – 70ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி…

by admin

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தேசத்தின் சுயபாதுகாப்பாகும் என்றும் அது இந்த யுகத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும் என்றும் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ள சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில் ஊழல் பிரதான தடையாக உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று (04) இடம்பெற்ற 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நாட்டின் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில் ஊழலுக்கெதிரான விரிவானதோர் தேசிய இயக்கம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகள் நாட்டின் பொருளாதார சுதந்திரத்தின் மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களது கடமைகளை முன்னுதாரணமிக்க வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அபிவிருத்தி முன்னுரிமைகளை அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி மூலோபாயங்களில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக மோசமான எதிர்விளைவுகள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

நிதி ஒழுங்குகளுக்கான தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகளும் அனைத்து திணைக்களத் தலைவர்களையும் உள்ளடக்கிய அரசாங்க ஊழியர்களும் மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றும்போது நிதி ஒழுங்குகளை முழுமையாக பேணி செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தூய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு ஊழலுக்கெதிரான தேசிய இயக்கமொன்றின் தேவை குறித்து விளக்கிய ஜனாதிபதி அத்தகையதொரு கூட்டு இயக்கம் நாட்டின் கல்விமான்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 70 வருட காலப்பகுதியில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களை எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமை முக்கியமானதொரு சவாலாகும் என்றும் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அனைத்து அரசாங்கங்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சாதகமான பங்களிப்புகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த அனுபவங்களுடன் அதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்திருப்பதாகவும் அதனை மிகவும் வினைத்திறன் மிக்கவகையில் நடைமுறைப்படுத்தி இந்த சவாலை நாம் வெற்றிபெற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

எல் ரி ரி ஈ பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு பாரிய தியாகங்களை செய்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எல் ரி ரி ஈ பயங்கரவாதிகள் எமது நாட்டை துண்டாட முயற்சித்தவேளையில் எமது முப்படையினரும் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப்படையினரும் பாரிய தியாகங்களைச் செய்தனர் என்றும் தேசத்தின் எதிர்காலம், சுதந்திரம், ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காகவே அவர்கள் இந்த வலி நிறைந்த அனுபவங்களை தாங்கிக்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.

தேசத்தை கட்டியெழுப்புவதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பரங்கியர் ஆகிய அனைத்து இனங்களுக்கும் மத்தியிலான ஐக்கியத்தையும் அனைத்து மக்களும் சமமான பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உண்மையான நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் முழுமையான அர்ப்பணிப்பும்  ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

70வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை 04.02.2018 கொழும்பு, காலிமுகத்திடல்

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களே, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அதற்கு தலைமைத்துவம் வகிக்கும் பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட எமது அழைப்பினை ஏற்று அரச குடும்பத்தின் தலைமைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வாழ்த்துச் செய்தியுடன் வருகை தந்துள்ள கௌரவ பிரதிநிதி அவர்களே, எமது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள வெளிநாடுகளின் கௌரவ பிரதிநிதிகளே, கௌரவ பிரதமரே, கௌரவ நீதியரசர் அவர்களே, கௌரவ சட்டமா அதிபர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, மந்திரிமார்களே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டுத் தூதுவர்களே, ஏனைய விருந்தினர்களே, முப்படைகளின் தளபதிகளே, பொலிஸ்மா அதிபர் அவர்களே, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி உள்ளிட்ட சகல பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகள் மற்றும் அரச சேவையை சேர்ந்த அதிகாரிகளே, எனது அன்பிற்குரிய எமது பெற்றோர்களே, குழந்தைகளே, அன்பர்களே, நண்பர்களே,

காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்று 70 வருடங்கள் பூர்த்தியாகின்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர தினத்தையே இன்று நாம் மிகுந்த கௌரவத்துடனும் அபிமானத்துடனும்; நினைவு கூருகின்றோம். எமது நாட்டின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் கடந்த 70 ஆண்டுகளின் அனுபவங்கள் முக்கியமானதாக அமைகின்றன. குறிப்பாக எமக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் நாம் முகங்கொடுக்க நேர்ந்த பல சவால்களை எம்மால் வெற்றி கொள்வதற்கு, அன்று முதல் இன்று வரை நமது நாட்டின் அதிகாரத்திற்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் தலைமைத்துவங்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்பு துறையினரும் நாட்டின் பொதுமக்களும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிக நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கின்றார்கள் என்பதை நான் மிக உறுதியாக நம்புகின்றேன். அதேபோன்று நாம் எதிர்பாராத விதத்தில் எமது நாட்டை பிளவுபடுத்துவதற்கும் துண்டாடுவதற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட எல்.டீ.டீ.ஈ. இயக்கத்தின் கொடுமையான பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அந்த முயற்சியினை தோல்வியடையச் செய்வதற்கு எமக்கு 26 வருடங்கள் நீண்ட யுத்தத்தில் ஈடுபட நேர்ந்தது.  அது நமது நாட்டின் பொருளாதார பின்னடைவிற்கும் பல்வேறு துறைகளில் தேசத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட மிக முன்னேற்றகரமான உயரிய முயற்சிகள் பின்னோக்கித் தள்ளப்படுவதற்கும் பின்னடைவை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்தது.

ஆயினும் நம் நாட்டு வரலாற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நாம் அடைந்திருந்த உன்னத தன்மை, அபிமானம், மன்னர் காலம் முதல் அடைந்திருந்த நிலைமை பற்றிய மிக புகழ்மிக்க வரலாற்றுச் சான்றுகள், எமது அனுபவங்கள், அதன் மூலம் எமது தேசத்திற்கு கிடைக்கப்பெற்ற வலுவூட்டல் ஆகிய அனைத்தையும் படிப்பினையாகக் கொண்டு எமது எதிர்காலத்திற்கான வேலைத்திட்டங்களை பலப்படுத்திக்கொள்வதற்கு நம் நாட்டின் அறிஞர்கள், ஆற்றல் மிக்கவர்கள், பண்டிதர்கள், பல்துறைசார் நிபுணர்கள் ஆகியோருடன் இணைந்து நாட்டின் பொதுமக்கள் அவர்களால் நிறைவேற்ற வேண்டிய காலத்தின் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று நாம் முகங்கொடுத்திருக்கின்ற மிக முக்கியமான சவால்கள் என்ன? தேசத்தின் எதிர்காலத்திற்காக நாம் செய்யவேண்டிய பணிகள் என்ன? 70 ஆண்டுகால அனுபவங்களுடன் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமாயின் நாம் அந்த சவால்களை புரிந்துகொள்வது அவசியமாகும். தேசத்தினை மேம்படுத்துவதற்காக உயரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்தேவையினை நாம் முழுமனதுடன் ஏற்று அவ்வேலைத்திட்டத்தில் இருக்கின்ற உயிர்ப்புமிக்க தன்மையை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது.

இன்று நாம் அனைவரும் அறிந்திருப்பதற்கு அமைய, ஒரு நாடு என்;ற வகையில் பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். அதிலிருந்து மீள்வதற்கும் அதை வெற்றி கொள்வதற்கும் ஒரு அரசு என்ற வகையில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். நாம் முகங்கொடுத்துவரும் சவால்களுக்குள் வறுமை மிகப் பாரிய சவாலாக இருக்கின்றது; இதற்கு முன் இந்த நாட்டை ஆண்ட அனை;த்து அரசாங்கங்களும் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருப்பதுடன் அவற்றில் சாதகமான பலன் கிடைத்தும் இருக்கின்றன. அவ்வாறான கடந்தகால சாதகதன்மைமிக்க அனுபவங்களை பெற்றுக்கொள்வதுடன் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வறுமையிலிருந்து விடுபடுவதற்காக தற்போது நாம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள், செயற்திட்டங்கள் ஆகியவற்றை வெற்றிபெற செய்வதற்கான எமது பொறுப்புக்கூரலையும் அர்ப்பணிப்பையும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகரிக்க வேண்டியிருப்பதுடன், உயரிய நோக்குடன் அவற்றை செயற்படுத்தப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. அப்படிச் செய்வதன் மூலம் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான எமது முயற்சிகள் கைகூடி, அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றதென நான் நம்புகின்றேன்.

அபிவிருத்தியை நோக்கிய எமது பயணத்தில் எமது முக்கிய இலக்குகளை இனங்காணுதல் அவசியமாகின்றது. சில சமயங்களில் அபிவிருத்தியின் தேசிய முக்கியத்துவத்தினை கவனத்தில் கொள்ளாது அரசியல் மற்றும் தனிப்பட்ட குறிக்கோள்களை அடையும் நோக்கில் நமது நாட்டில் கடந்த சில தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சிலவேளைகளில் தேசிய பொருளாதாரத்தின் மீது பாதகமான தாக்கத்தினையும் விளைவுகளையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கின்றன என்பதையும் மனவருத்தத்துடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதனால் அரசியல் தலைமைத்துவம், அரச உத்தியோகத்தர்களின் தலைமைத்துவம், அரச நிர்வாகக் கட்டமைப்பு, நிதி நிர்வாகம் ஆகிய அனைத்து பிரிவுகளும் மிகத் தெளிவாக தேசிய அபிவிருத்;தியின் இலக்குகளை அறிந்து, தெரிந்து அதற்கமைய அர்ப்பணிப்புடன் செயற்படுதல் கட்டாயத் தேவையாக இருக்கின்றது. அதேபோன்று நமது நாடு அறிஞர்கள், கல்விமான்கள், ஆற்றல்மிக்கவர்கள், பல்துறைசார் நிபுணர்கள், பண்டிதர்கள் ஆகியோரை நமது நாட்டில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மென்மேலும் எடுத்தல் வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் பலம்மிக்கதாக அமைவதற்கு நாடு அறிவாளிகளின் நாடாக அமைதல் வேண்டும். அதனையே நாமும் சாதிக்க வேண்டும். அதற்கு எமது கல்வி சீர்திருத்தங்களை மேம்படுத்துவதுடன், கல்வி திட்டங்கள், நெறிப்படுத்தல்கள் ஆகியவற்றை இன்றைக்கு உகந்த விதத்திலும் எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கக்கூடிய விதத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்க வேண்டும். இதன்போது உயரிய தொழினுட்ப உலகின் புதிய பொருளாதார முன்மொழிவுகளுக்கு ஏற்ப நாம் நமது பொருளாதாரத்தில் புத்தாக்க பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் முயல்வது இன்றியமையாத தேவையாக அமைகின்றது. புத்தாக்கப்  பொருளாதாரத்தினதும் பசுமைப் பொருளாதாரத்தினதும் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் அறிந்து, அத்துறைகளில் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்கும் தொழிற்சார் கல்வியை ஏற்படுத்துவதற்கும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுப்பது கட்டாயத் தேவையாகும் என்பதே எனது கருத்தாகும்.

நாட்டின் அரச நிர்வாகத்தினை வினைத்திறனாக்குவதற்கு தற்போதுள்ள நிர்வாக ஒழுங்குவிதிகள், நிதி ஒழுங்கு விதிகள் என்பவற்றை துரிதமாக திருத்தம்செய்தல் அவசியமாகும். கடந்த சில தசாப்தங்களாக அத்தகைய பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் இன்னமும் 100 வருடங்களுக்கும் முற்பட்ட கட்டளைச் சட்டங்கள், அத்தியாயங்கள் அதேபோன்று ஒழுங்கு விதிகள் என்பன தற்போதும் காணப்படுவதை நாம் அறிவோம். அவற்றை நாம் எதிர்காலத்திற்கான தடையாக கருதுகின்றோம். வினைத்திறனான அபிவிருத்தியினை ஏற்படுத்தவும் துரித அபிவிருத்திக்கான ஒழுக்கத்துடன் கூடிய நிர்வாகத்தினை ஏற்படுத்தவும் அவ்வொழுங்கு விதிகளை துரிதமாக திருத்தம் செய்தல் வேண்டும்.

அதேபோன்று நாட்டின் மிக முக்கியமான நியாயாதிக்க நிறுவனங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம், ஜனாதிபதி பதவி போன்ற அனைத்து நிறுவனங்களையும் பதவிகளையும் ஜனநாயக ரீதியில் மறுசீரமைத்து, சிறந்த ஒரு அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல் அத்தியாவசியமாகும். விசேடமாக ஊழல் மிக்க அரசியலானது, தேசத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்திற்கும் மோசமான பாரிய பிரச்சினையாகவும் சவாலாகவும் அமைந்துள்ளமையினால் மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் ஜனாதிபதி பதவி முதல் உள்ளூராட்சி மன்றங்கள் வரையிலும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் வேண்டும். முறையான அபிவிருத்தி திட்டங்கள், ஒழுக்கம்மிக்க அரசியல் தலைமுறை என்பவற்றுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.

அபிவிருத்தி சவால்கள், தேசத்தின் எதிர்காலத்திற்கான சவால்கள் என்பவற்றை வெற்றிகொள்ள அரசியல்வாதிகளிடம் காணப்படும் நேர்மை மிக அத்தியாவசியமாகும். இந்த நேர்மையினூடாகவே மக்களின் நம்பிக்கையைப் பெற்று நாட்டை கட்டியெழுப்பவும் ஒட்டுமொத்த மக்களும் அரச நிர்வாகத்தினை நோக்கி ஒன்றிணையவும் முடியும். ஆகையினால் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டினை கட்டியெழுப்ப அரசியல்வாதிகளிடம் காணப்பட வேண்டிய அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை என்பன மிக முக்கியமான தேவைகளாகும் என நான் கருதுகிறேன்.

மனிதர்களைப் போன்றே மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட சகல விலங்குகளும் சுதந்திரமாக வாழும் உரிமையுடையவை. இயற்கையின் அனைத்து படைப்புக்களுக்கும் காணப்பட வேண்டிய சுதந்திரம் பொதுவானதே. இதில் மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பையே எமது குறிக்கோளாக கொள்ளுதல் வேண்டும். உண்மையான சுதந்திரம் என்பது மனிதர்களின் சுதந்திரம் மாத்திரமன்று என்பதையும் அதன் சிக்கலானதன்மை, பரம்பல், பொறுப்புக்கூறல் என்பன பற்றியும் பாடசாலை பருவம் முதலே தெளிவுபடுத்தல் அவசியமென நான் கருதுகின்றேன். ஆகையினால் இவ்வனைத்து விடயங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

சுதந்திரம் பற்றிய எமது புரிந்துணர்வு, அனுபவங்கள் என்பவற்றுடன் மகிழ்ச்சியோடு வாழ சுதந்திரமான சமுதாயத்தில் சௌபாக்கியம் மிக முக்கியமாகும். பொருளாதார சுபீட்சம் சௌபாக்கியம் என்பன மக்களின் பிரார்த்தனைகளாகும். ஆகையினால் சுதந்திரமானது, சகல துறைகளையும் பலப்படுத்தவும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தவும் சுதேச மக்களின் அடையாளங்கள், நாட்டுப்பற்று, கைத்தொழில்கள், விவசாயம் போன்ற எமது சகல விடயங்களுடனும் இணைந்து எமது கலாசாரம், பண்பாடு, தேசிய அடையாளம் என்பவற்றுடன் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக நாம் பொறுப்புடன் செயற்பட உதவுகின்றது.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி எமது வளர்ச்சிக்கு அவசியமான போதிலும் அதனை பெற்றுக்கொள்வதனால் ஒருபோதும் எமது சுதேச செயற்பாடுகளையும் வரலாற்றுரீதியான உரிமைகளையும் வீழ்ச்சியடைய விடாது செயற்படல் வேண்டும்.  ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமையான, பெருமைமிக்க வரலாற்றில் எமது கலாசார அடையாளங்கள், வரலாற்று சின்னங்கள், எமது மரவுரிமைகள் ஆகிய அனைத்தையும் பாதுகாத்து, போஷித்து எமது தாய்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதன்பொருட்டு அரச துறையிலும், தனியார் துறையிலும் உள்ள சகலரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வனைத்து விடயங்களிலும் நாம் அவதானம் செலுத்துதல் வேண்டும். நான் முன்னர் குறிப்பிட்டதைப் போலவே எமது சகல சவால்களையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு நாட்டின் தற்பாதுகாப்பே ஆகும் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். நாட்டின் அபிவிருத்;திக்காகவும் எதிர்காலத்திற்காகவும் ஊழல் எதிர்ப்பை பலப்படுத்துவதும் அதன் அடிப்படையில் செயற்படுவதுமே தேசத்தின் தற்பாதுகாப்பாகும் என நான் கருதுகிறேன். அதேபோல் எமது இந்த உன்னதமான தாய் நாட்டின் பொருளாதார சுதந்திரம் கட்டியெழுப்பப்படும் வேளையில் அப் பொருளாதார சுதந்திரத்திற்கு எதிராகவுள்ள ஊழல், இலஞ்சம், திருட்டு, வீண்விரயம் ஆகியவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். திருட்டு, ஊழல், இலஞ்சம் ஆகியன எமது தேசத்தின் எதிர்காலத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாகும். எல்லா அரசியல்வாதிகளும் இந்நாட்டிற்கான தமது கடமையை நிறைவேற்றுகையில் முன்னுதாரணமாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவே நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

எமது சோம்பேறித்தனம், உதாசீPனத்தனம், பிற்போக்குத்தனம் ஆகியவற்றைக் களைந்து செயற்பாட்டுத் திறனுடன் உறுதியாகவும் வீரம்மிகு போர் ஆற்றலுடனும் நாம் நமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டின் உன்னத தன்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் நம் அனைவரினதும் மிகுந்த அர்ப்பணிப்பு கட்டாயத் தேவையாக இருக்கின்ற தென்பதை நான் இங்கு மிகத் தெளிவாகக் காண்கின்றேன்.

கடந்த பல தசாப்தங்களாக நாம் பெற்ற அனுபவத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் குறிப்பாக இனவாதக் கருத்துக்கள் அற்ற தேசிய சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றைப் பலப்படுத்தி இனவாத மோதல்கள் இன்றி நாட்டின் அனைத்து மக்களினாலும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமையை உறுதிப்படுத்துவது மிகக் கட்டாயத் தேவையாகும். அவ்வுறுதிப்பாட்டினுள் அனைவரினதும் பங்களிப்பு செயற்பாட்டு ரீதியாகவே தேவைப்படுகின்றது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் மற்றும் மலேயர்கள் ஆகிய அனைத்து இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கம், ஒற்றுமை, மதரீதியிலான நல்லிணக்கம், மொழிகளுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகியன மூலம் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தி அனைவருக்கும் நம்பிக்கையுடனும் அச்சமும் பீதியும் அற்ற வகையிலும் வாழ்வதற்கான உரிமையினை எப்போதும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதனால் இந்த அனைத்து விடயங்களையும் சாதிப்பதற்கு எமது அர்ப்பணிப்பு மிகவும் அவசியமாகும் என்பதை இந்த 70வது வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர ஒன்றுகூடலில் ஒட்டுமொத்த நாட்டுமக்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைவரிடமும் அனைத்து துறைகளின் தலைமைத்துவங்களிடமும் பொறுப்புகூற வேண்டியவர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு இன்று குறிப்பாக தேசப்பற்று என்பது நிதி பற்றிய ஒழுக்கத்துடன் அனைத்து பணிகளையும் முன்னெடுப்பதே ஆகும் எனும் கருத்தையும் இங்கு முன்வைக்கின்றேன். தேசப்பற்று என்பதற்கு ஒவ்வொரு காலங்களிலும் அந்தந்த காலங்களுக்கும் அந்தந்த நிலைமைகளுக்கும் ஏற்ப எம்மால் விளக்கமளிக்க முடியும். அதற்கான விளக்கங்களையும் பெற்றுக்கொடுக்க முடியும். அந்தவகையில் இன்று தேசப்பற்று என்பது அனைவரும் அதாவது அரசியல்வாதி முதல்  அரச அதிகாரிகள் உள்ளிட்ட கடைசி குடிமகன் வரை அனைவரும் தத்தமது பணிகளை முன்னெடுக்கும்போது நிதி ஒழுக்கத்தினை கடைப்பிடித்தலே என்பதை மிகுந்த கௌரவத்துடனும் ஆணித்தரமாகவும் குறிப்பிட விரும்புகிறேன். ஊழலுக்கும் திருட்டுக்கும் எதிராக நிதி ஒழுக்கத்தினை ஏற்படுத்த வேண்டியதன் பாரிய தேசிய செயற்திட்டத்தின் தேவையினை நான் இங்கே காண்கின்றேன். சுதந்திரத்தின் உறுதிப்பாடு தூய்மையான அப்பழுக்கற்ற அரசியலாகும் என நான் கருதுகின்றேன். அதனால் தூய்மையான, அழுக்கற்ற அரசியலுக்காக அடிப்படையில் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், நமது நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்துறைசார் நிபுணர்கள், விற்பன்னர்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டு முயற்சியொன்றை நாட்டில் உருவாக்கி அனைவரினதும் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டை முன்னேற்றுவதற்கு முக்கிய தடையாகவும் சவாலாகவும் இருக்கும் இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்காக நாம் அனைவரும் பாரிய தேசிய செயற்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்ற செய்தியினை எனது நன்மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய மக்களுக்கு இந்த 70வது சுதந்திர தின விழாவில் நான் தாழ்மையுடன் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று இதுவொரு முக்கியமான சந்தர்ப்பமாகும். மதிப்பிற்குரிய சந்தர்ப்பமாகும்.  தேசத்தின் மதிப்பிற்குரிய சந்தர்ப்பமாகும்.  இதன்போது நமது நாட்டை கூறுபோடுவதற்காக குறிப்பாக எல்.டீ.டீ.ஈ. கொடூர பயங்கரவாதிகள் முயன்றபோது எமது தரைப்படை, கடற்படை, வான்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு ஆகியன ஆற்றிய மகத்தான பணியை நாம் மறந்துவிடலாகாது. அவர்கள் உயரிய அர்ப்பணிப்பும் உயிர்த்தியாகங்களும் செய்து தமது உடல்உறுப்புக்களை இழந்து, அங்கவீனர்களாகி சிலவேளைகளில் தமது சொந்த பந்தங்களையும் குடும்பங்களையும் கூட இழந்து பல்வேறு துன்பியல் அனுபவங்களுடன் தேசத்தின் எதிர்காலத்திற்காக, தேசத்தின் சுதந்திரத்திற்காக, தேசத்தின் ஒருமைப்பாட்டிற்காக, தேசத்தின் சுயாதீனத்திற்காக, நாட்டின் இறைமைக்காக அவர்கள் போராடினார்கள்.

அதனால் இந்த 70வது சுதந்திர தின விழாவில் குறிப்பாக நான் அரசாங்கத்தினதும் மக்களினதும் கௌரவம் கலந்த மரியாதையினை தரைப்படை, கடற்படை, வான் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அந்த யூத்தம் நடந்த காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கும் தெரிவித்துக் கொள்வதுடன், குறிப்பாக இன்று இந்த 70வது சுதந்திரத் தின விழாவில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது கௌரவம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேவேளை எமது தேசத்தின் எதிர்காலத்திற்காக வறுமையிலிருந்து விடுதலைப் பெற, இலஞ்ச, ஊழலிலிருந்து விடைபெற்ற, இலஞ்ச ஊழல் அற்ற, சுதந்திரமான, வளமான பொருளாதாரத்தை உருவாக்கி உலகில் உயர்ந்த ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்வதற்கு எமது வரலாற்று முக்கியத்துவம் மிக்க குறிப்புகளுடனும் அனுபவங்களுடனும் புதிய அதிதொழினுட்பத்தை உலகின் புதிய சந்ததியினருடன் கற்ற, ஆற்றல்மிகு இளம் சமுதாயத்துடன் இணைந்து நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்ற கௌரவமான வேண்டுதலை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகளைக் கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி. வணக்கம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2018.02.04

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2018-02-04

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More