இந்தியா பிரதான செய்திகள்

கேரளாவை தலைகுனிய வைத்த நிகழ்வு!

கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா   முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சிறந்த ஆட்சி நிலவுகிறது என்றும் கேரள மாநில முதல்வர் பல முற்போக்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மாநிலமாக விளங்கியது கேரளா.

இந்த நிலையில் அம் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவரை  அரிசி  திருடியமைக்காக சிலர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அம் மாநிலத்தை தலை குனிய வைத்துள்ளது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மது என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர். ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார். நேற்று முன்தினம் இது போல கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார்.
திருடியதாக தவறாக நினைத்ததால்?
மது அரிசி வாங்க சென்ற கடை வீதியில் அடிக்கடி அரிசி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது.  இந்நிலையில், அரிசி திருடுபோன சம்பவத்தில் மதுவுக்கு தொடர்பு இருக்குமென்று கடைக்காரர்கள் சந்தேகப்பட்டனர். நேற்று முன்தினம் மது, அரிசி மூட்டையுடன் சென்றதை கண்டதும் மது, அரிசி திருடிச்செல்வதாக நினைத்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து, கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்ததுடன், அவர் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கைகளையும் கட்டி காட்டுமிராண்டி தனமாக தாக்கினர்.
இதில் வலி தாங்க முடியாமல் துடித்த காட்சிகளை கொலை வெறி அடங்காத மனசாட்சி இல்லாத மக்கள் செல்ஃபி மற்றும் வீடியோக்களையும் எடுத்து வட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது.  சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த கொடூரமான காட்சிகள் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காட்சிகள் சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி நல ஆணைய உறுப்பினர்கள் பார்வைக்கும் சென்றன. உடனடியாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அட்டப்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிவாசி வாலிபர் மதுவை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். கட்டி வைத்து தாக்கப்பட்ட மது வாகனத்தில் ஏறியதும் போலீஸாரிடம், அனைவரும் என்னை கொடூரமாக அடித்து உதைத்தனர். திருடன் என்று கூறி என்னை தகாத வார்த்தைகள் திட்டினர். நான், எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்து, வாகனத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மது, போலீஸாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், மத்தாச்சன், மனு, அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உம்மர் ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

கேரள முதல்வர் கண்டனம்

இந்நிலையில், மது கொலை சம்பவம் தொடர்பாக இன்று 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க திருச்சூர் சரக ஐ.ஜி. அஜித்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஐ.ஜி. அஜித்குமார் தலைமையிலான போலீஸார் அட்டப்பாடி சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். .

கொலையை கண்டித்துப் போராட்டம்
மதுவின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை நடத்தக்கூடாது என்று மதுவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மதுவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், வயிற்று பசிக்காக உணவுப் பண்டங்ளை திருடியவர்களை கொல்லப்படுகிறார்கள்; வசதியான ஆடம்பர வாழ்க்கைக்காக கோடிகணக்கில் கொள்ளையடிப்பவர்களை சர்வ சாதரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகிறார்களே அவர்களை கொல்லுவது யார்? என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைரலாகி வருகின்றன.

மலையாள திரையுலகம் கண்டனம்

இச்சம்பவத்திற்கு மலையாளத் திரையுலக நடிகர் மம்மூடி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,  கொல்லப்பட்ட மதுவை அதிவாசி என்று அழைக்காதீர்கள், அவர் என் இளைய சகோதரர். என்னை மன்னித்துவிடுங்கள் மது என உருக்கமான தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக பாலக்காடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதேவேளை இக்  கொலை கும்பலைச் சேர்ந்த 2 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers