இந்தியா சினிமா பிரதான செய்திகள்

தமிழ் திரையுலகின் மயிலு – பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்!


1963ல் தமிழ்நாட்டில் சிவகாசியில் பிறந்தவர் ஸ்ரீதேவி. இவர், 1967ல் ‘துணைவன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் `கந்தன் கருணை’, எம்ஜிஆருடன் ‘நம்நாடு’, சிவாஜிகணேசனுடன் ‘வசந்தமாளிகை’ போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான `16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் விலகாத நாயகியாக மிளிர்ந்தவர். 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மயிலு என்ற பாத்திரத்தை நிலை நிறுத்தியவர். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜனிகாந்த், கமல் ஹாசன் முதலிய முக்கிய நட்சத்திரங்களுடன் கடித்த முன்னணி நடிகையாகவும் தமிழ் திரையுலக வரலாற்றில் தன் பெயரை பதித்தவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி, கமலுடன் `சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், குரு,வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை ஆகிய ஹிட் படங்களிலும், ரஜினியுடன் `தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திலும் விஜய்யின் `புலி’ படத்திலும் நடித்தார். இதுவே ஸ்ரீதேவி நடிப்பில் கடைசியாக வெளியான படம். இது அவருடைய 300ஆவது படமாகும்.

ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், ஆறு முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் வென்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நள்ளிரவில் காலமானார். டுபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்தது.

இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டரில், ஸ்ரீதேவி மறைந்த நாள் கருப்பு தினம் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் நடிகை த்ரிஷா தனது டிவிட்டரில், வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை உணர்த்துகிறது ஸ்ரீதேவியின் மரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.