Home இலங்கை இந்தியாவை தஞ்சமடையவோ   இந்தியாவுடன்  சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை..

இந்தியாவை தஞ்சமடையவோ   இந்தியாவுடன்  சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை..

by admin

இந்தியத் துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களுக்கான
பிரிவு உபசார வைபவம்
வடமாகாண சபை அலுவலக கேட்போர் கூடம், கைதடி
04.03.2018 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4.30 மணியளவில்
முதலமைச்சர் உரை

இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கின்ற அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே. சிவஞானம் அவர்களே, எமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கும் இலங்கையின் வடபகுதிக்கான இந்தியத்துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களே, வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, மற்றும் இங்கே கலந்துகொண்டிருக்கின்ற உயர் அதிகாரிகளே, மற்றும் உத்தியோகத்தர்களே!

கடந்த மூன்று ஆண்டுகளாக எம்மிடையே இந்திய துணைத்தூதுவராக சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று இடமாற்றலாகிச் செல்லுகின்ற உயர்திரு நடராஜன் அவர்களிற்கான கௌரவத்தை வழங்குவதற்கும் அவரை வாழ்த்தி கௌரவித்து வழியனுப்புவதற்குமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். கடந்த 25.02.2018 அன்று ஹொட்டேல் ஃகிறீன் கிறாஸ் மண்டபத்தில் திரு நடராஜன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில் நானும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத்துணைத்தூதுவர் அலுவலகம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து துணைத்தூதுவர்களாக தமிழர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள் அது எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும்.முதலில் திரு மகாலிங்கம் அவர்கள் இருந்தார். மென்மையான போக்குடையவர் அவர். அதன் பின்னர் சற்றுக்காலம் பதிற்கடமையாற்றிய திரு மூர்த்தி அவர்கள் எல்லா மட்டங்களிலும் இறங்கிப் பழகக்கூடியவராக இருந்தார். திரு நடராஜன் அவர்கள் சாதுவான தோற்றம் பெற்றிருந்தாலும் தனது பதவிக்குரிய காரியங்களை ஆற்றுவதில் மிகவும் திறமைசாலி. எமது ஒவ்வொரு அசைவுகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் இவர்கூர்ந்து அவதானித்து வந்ததை நாம் தெரிந்து வைத்திருந்தோம். திரு நடராஜன் அவர்கள் கண்டியில் இருந்து மாற்றலாகி யாழ்ப்பாணத்திற்கு வந்த ஓரிரு தினங்களிலேயே மாணவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும்புலமைப்பரிசில் திட்ட ஒழுங்கு ஒன்றை உருவாக்கிஇந்தியாவிற்கு அவர்களை அனுப்பி அவர்களின் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து திரும்பும் வரையான காலப்பகுதிக்கான முழுச்செலவுகளையும் இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ள வழிசெய்தார். மேலும் அவர்களுக்கான ஒரு சிறிய கொடுப்பனவையும் அக்காலப்பகுதிக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று வடமாகாணத்திற்கான முதலாவது சபையாக இந்தச் சபை தோற்றுவிக்கப்பட்டமையால் எமக்கான வசதிகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. எனவே இந்த முதலாவது சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகன வசதியை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து சொகுசு வாகனங்களைத் தருவித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு சில காரணங்களால் அத்திட்டம் நிறைவேறவில்லை. இருப்பினும் இலங்கை அரசினால் எமக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையுடன் கூடிய விசேட அனுமதிப்பத்திர வழங்கல் மூலமாக அப்பிரச்சனை தற்போது தீர்விற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் கௌரவ உறுப்பினர் தர்மபால செனவிரத்ன அவர்கள் என்னைப்பார்க்குந்தோறும் ‘இந்தியா கார் வழங்குவதாகக் கூறினீர்களே. எங்கே எங்கள் கார்கள்? என்று விடாது கேட்டு வந்தமை நினைவிற்கு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று அமைக்கப்படுகின்ற கலாச்சார நிலையம் திரு நடராஜன் அவர்களையும் அவர்களின் சேவையையும் சதாகாலமும் நினைவுறுத்திய வண்ணமே இருக்கும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்தற்காக திரு.நடராஜன் அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

வால்மீகி இராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதிய போது அந்த இராமாயணப்பாடல்களுக்கு உரை எழுதாமல் விட்டு விட்டார். கம்ப இராமாயணத்திற்கு கம்பர் உரை எழுதாத காரணத்தினால் அவருக்கு பின் தோன்றிய தமிழ் அறிஞர்களும் இலக்கிய விற்பன்னர்களும் தத்தமது திறமைகளுக்கேற்ப இராமாயணத்திற்கான உரைகளைப்புதிது புதிதாக உருவாக்கிக் கொடுத்தார்கள்.

அதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இராப்போசன விருந்து உபசாரத்தில் திரு நடராஜன் அவர்களுக்கு யாழ் மக்கள் சார்பாக வாள் ஒன்றை ஞாபகார்த்தப் பரிசிலாக வழங்கியிருந்தமைக்கு வௌ;வேறு விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது. கம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத்தாம் எழுதிய உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் மாசி 25ம் திகதி தொடக்கம் இன்று வரை விதம்விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்த வாளுக்கான குறியீட்டுச் செய்திகளை வெளியிட்டுவருகின்றார்கள்.

அது மட்டுமல்லாது எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும் அதில் அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.உதாரணத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் எமது அண்டைநாடான இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப்பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவதுநகைப்பிற்குரியது.எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள், எமது பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள், மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு,மேலும் நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை. இதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு எந்தளவுக்கு நன்மையானதும் இன்றியாமையாததுமானது என்ற உண்மையின் அடிப்படையிலானதே இந்தியா தொடர்பிலான எனது கூற்றுக்கள்.

யுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட தக்க ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள். எமது மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள் ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள் , சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறம்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டிய காலம் இது.

அத்துடன் எனது தனிப்பட்ட அரசியற் போக்கு குறித்து இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி விமர்சிக்கின்றமை ஹாஸ்யம் நிறைந்தது. ஒன்றை எம் பத்திரிகையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டைத் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை. இந்தியாவுடனான எனது உறவு ஆன்ம ரீதியானது. மகாத்மாகாந்தி 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதியன்று சுட்டுக் கொல்லப்பட்டதும் அன்றைய சிறு வயதிலேயே குடும்பத்திலிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி நாட்கணக்காக அழுது தீர்த்தவர்கள் நாம். ஆச்சார்ய வினோபாபாவே பூதான இயக்கத்தைத் தொடங்கிய போது அது வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்தவர்கள் நாங்கள். ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அகிம்சை முறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்த போது அவரின் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றம் பற்றிக் கரிசனையாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைய பத்திரிகையாளர்களுக்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றி எதுவுமே தெரியாது இருக்கலாம். அவர் அஹிம்சை முறையில் அரசாங்கத்தை எதிர் கொண்ட விதம் பற்றி எல்லாம் எமது ஊடகவியலாளர்கள் படித்தறிய வேண்டும்.

அத்துடன் இலங்கை இந்திய சங்கம் மாகாத்மாகாந்தி பற்றிய முதல் நினைவுப் பேருரையை என்னை வைத்தே ஒழுங்கமைத்தனர். பாரத நாட்டின் ஆத்ம பலத்தில் ஆன்மீக பாரம்பரியத்தில் ஈடுபாடுடையவன் என்றே என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்று நம்புகின்றேன். அப்போதைய இந்திய ஸ்தானிகர் கௌரவ கோபாலகிருஷ்ண காந்தி எனது பேச்சை வெகுவாக இரசித்தார். அவருடன் இருந்த ஒருவர் காந்தி பற்றி இலங்கைத் தமிழர்களாகிய நீங்கள் அறிந்த அளவு இந்தியர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று தெரியவில்லை என்றார். எம் மக்கள் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எனக்குத் தேவைகள் இல்லை. காங்கேசன்துறை பற்றிய எமது கோரிக்கையை இந்தியா பெருமனதுடன் ஏற்றுள்ளது. அதே போல் பலாலி விமான நிலையம் பற்றிய எமது கோரிக்கைக்கும் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் செவி சாய்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். எது எப்படியோ நாம் எமது அரசியற் கொள்கைகளில் வழுவாது நின்று எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய அனைத்து அனுகூலங்களையும் பெற்றுக்கொடுப்பதே எமது சிந்தனையாகும். அதனைப் பத்திரிகைகள் கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அவற்றிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அரசியற் கட்சிகள் பலவும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான முத்தாய்ப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கி விட்டன. இந்த நிலையில் எமது ஒவ்வொரு செயலும் கட்சிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. எமது நடவடிக்கைகள் சம்பந்தமாக புதிது புதிதாக உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. தொடர் தேடல்களே விடியல்களுக்கு வழிவகுக்கும் என்ற வகையில் இவர்களின் முயற்சிகள் புதிய புதிய தேடல்களாக மாறி எம்மையும் வழிப்படுத்தட்டும்!

இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட திரு நடராஜன் அவர்களின் சேவைகள் பற்றிய குறிப்பில் 32 வருடங்களிற்கும் மேலாக இவர் வெளிவிவகார அமைச்சில் பல்வேறு பதவிகளை வகித்து சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், யேமன்,பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சிறப்பாக சேவையாற்றியதுடன் வெளிநாடுகளுக்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான பேச்சுவார்த்தை,பாரிஸ் நகரில் நடைபெற்ற டீயபடihயச னுயஅதொடர்பான பேச்சுவார்த்தை,2007 டெல்கியில் நடைபெற்ற சார்க் மகாநாடு,2010ல் திம்புவில் நடைபெற்ற சார்க் மாநாடு,இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திகளும் கால நிலை மாற்றங்களும் தொடர்பான மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றியதாக அறியத் தந்துள்ளார்கள்.1984ற்கு முன்பதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன் 1982ல் டெல்கியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் முக்கிய பதவிகளை வகித்தவர் திரு.நடராஜன்என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.நடராஜன் அவர்கள் தமிழர் என்ற வகையிலும் எம்மிடையே போரின் போதும் அதன் பின்னரும் என்ன நடந்தது என்றுஅறிந்திருந்த வகையிலும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி எம் மக்களின்சுபீட்சமான எதிர்காலத்திற்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்குரிய நெருக்குதல்களை இந்திய அரசினூடாக இலங்கை அரசிற்கு வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்.திரு.நடராஜன் அவர்கள் நியூடெல்கிக்கு மாற்றலாகிச் செல்லும் இத் தருணத்தில் அவர் இந்தியாவில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து சகல சௌபாக்கியங்களும் பெற்று நிரம்பிய ஒரு நிறைவான வாழ்வை வாழ வாழ்த்தி அமர்கின்றேன்.

நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More