Home இலங்கை “இவ்வாறு நடக்கும் என தெரிந்திருந்தால் சமஸ்டி ஆட்சி முறையை நாங்கள் இலங்கையில் விட்டுச் சென்றிருப்போம்”

“இவ்வாறு நடக்கும் என தெரிந்திருந்தால் சமஸ்டி ஆட்சி முறையை நாங்கள் இலங்கையில் விட்டுச் சென்றிருப்போம்”

by admin

1833ல் பிரிந்திருந்த  அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக மாற்றியிராவிட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகவே இருந்திருக்கும்..

தமிழ் மக்கள் பேரவை
மக்களுக்கான அறிவு விருத்திப் பணி
கருத்தமர்வும் கலந்துரையாடலும்
நகரசபை மண்டபம் , திருகோணமலை
18.03.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணிக்கு
தலைவருரை

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி இலக்ஸ்மன் அவர்களே, இணைத்தலைவர் திரு. வசந்தராஜா அவர்களே, எம் மக்களுக்கு அறிவு விருத்திப் பணியாற்ற வந்திருக்கும் கலாநிதி மு.வ.கணேசலிங்கம் அவர்களே, சட்டத்தரணி திரு.யோதிலிங்கம் அவர்களே, சிNரஸ்;ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல் அவர்களே மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் ஆன்றோர்களே, சான்றோர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!

தமிழ் மக்கள் பேரவை எம் மக்களுக்கான அறிவு விருத்திப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சர்வதேச மட்டப் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களும் எமது இளம் சட்ட விரிவுரையாளர் திரு.குமாரவடிவேல் குருபரன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். அரசியல் ரீதியாக எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல பற்றிப் பேசினார்கள்.

இன்று மூன்று துறைசார் விற்பன்னர்கள் வந்துள்ளார்கள். உங்கள் அறிவுப் பசியைப் போக்க ‘வட கிழக்கு இணைப்பிற்கான புதிய தந்திரோபாயம்’ என்ற பொருள்பற்றிப் பேச யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவர் கலாநிதி கே.ஃடி. கணேசலிங்கம் அவர்கள் வந்துள்ளார். ஆய்வு நூல்கள் 15யும் ஆய்வுக் கட்டுரைகள் 24ஐயும் வெளியிட்ட அவர் 22 ஆய்வரங்கங்களில் பங்குபற்றியுள்ளார். 1000க்கு மேற்பட்ட பத்திரிகைக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். அவர் பேசப்போகும் பொருள் ஒரு முக்கியமான விடயம். எமது அரசியல்வாதிகள் சிலர் வடகிழக்கு இணைப்புக் கிடைக்காது, ஆகவே மாற்றுத் திட்டங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லித் திரிகின்றார்கள். 18 வருடங்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்திருந்தது என்பதை மறந்து விட்டார்கள் அந்த அரசியல்வாதிகள். அது இந்தியாவின் அனுசரணையுடன் பெறப்பட்டது என்கின்றார்கள். ஏன் எமது மாகாண சபைகளும் இந்திய அனுசரணையால் வந்தவைதானே! அவற்றையும் அரசாங்கம் பறித்து விடும் என்று சொல்கின்றார்களா? இவர்கள் அரசியலைக் கடைப்பொருளாக மாற்றி வருகின்றார்கள். எமது வாழ்வுரிமைகளைப் பேரம் பேசத் துணிந்து விட்டார்கள். அதிலே அவர்களின் சுயநலமும் கலந்திருக்கின்றது என்று யூகிக்க அதிகப் பிரயத்தனங்கள் தேவையில்லை. உதாரணமாகக் கொழும்பில் ஒரு தமிழ் அன்பர் ‘ஏன் நீங்கள் வடகிழக்கு இணைப்பைக் கோருகின்றீர்கள்?’ என்று கேட்டார். ‘அதில் என்ன பிழை?’ என்று கேட்டேன். ‘அதைக் கேட்கப்போக சிங்களவர் எம்மை இங்கிருந்து விரட்டி அடித்து விடுவார்களோ என்று பயப்பிடுகின்றேன்’ என்றார். பெரும்பான்மையினர் எம்மை அடித்துத் துன்புறுத்தி தமது வழிக்கு நம்மைக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதை அவரில் கண்டுகொண்டேன்.

எதற்காக வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கோருகின்றோம்? முதலாவது வடக்கும் கிழக்கும் தொடர் தமிழ் பேசும் பிரதேசங்களாக காலாதி காலமாக இருந்து வந்துள்ளன என்பது. 1833ம் ஆண்டில் பிரிந்திருந்த இந்த நாட்டின் அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக மாற்றியிராவிட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகவே இருந்திருப்பன.

நாட்டை நிர்வாகத்திற்காக ஒருங்கிணைத்து விட்டு, ஒருங்கிணைந்த நாட்டை விட்டு வெளியேறும் போது, வேற்றுமைப்பட்ட அலகுகளை ஒன்று சேர்த்து பெரும்பான்மையினரிடம் கையளித்து விட்டுப் போகின்றோமே, சிறுபான்மையினர் ஆக்கிவிடப்பட்ட மக்கட் கூட்டங்களுக்கு என்ன நடக்கும் என்று ஆங்கிலேயர்கள் வெகுவாகச் சிந்திக்கவில்லை. அரசியல் யாப்பின் உறுப்புரை 29 அவர்களைக் காப்பாற்றும் என்று நினைத்துச் சென்றுவிட்டார்கள்.

சுதந்திர இலங்கையில் பின்னர் நடந்ததைப் பத்துப்பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பார்த்த போதுதான் முன்னைய தேசாதிபதி சோல்பரிப் பிரபுவிற்கு அறிவு பிறந்தது.  B.H.Farmer  என்ற ஆங்கில எழுத்தாளருக்கு ‘இவ்வாறு நடக்கும் என்று தெரிந்திருந்தால் ஒரு சமஸ்டி ஆட்சி முறையை நாங்கள் இலங்கையில் விட்டுச் சென்றிருப்போமே’ என்று கூறி அங்கலாய்த்தாராம். ‘இவ்வாறு நடக்கும்’ என்று அவர் குறிப்பிட்டது 1958ம் ஆண்டில் நடந்த இனக் கலவரத்தையே. அரச அனுசரணையுடன் நடந்த அந்த இனக்கலவரம் சோல்பரிப் பிரபுவை வெகுவாகப் பாதித்தது.

ஆகவே எமது மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வட கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையர். தொன்று தொட்டு அவர்களே பெரும்பான்மையர். நாங்கள் நாட்டின் சிறுபான்மையர் என்று இப்போது கருதப்பட்டாலும் அருகருகே தொடர்ந்திருக்கும் வட கிழக்கு மாகாணங்களில் நாமே பெரும்பான்மையினர். அப்பொழுதும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படித்தான். இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று தான் புரியவில்லை.

எமது இந்த நிலையைக் கேள்விக்கிடமாக்கவே தொடர்ந்து வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைக்க எத்தனித்தனர். வட கிழக்கில் நாட்டின் பெரும்பான்மையினர் குடியேற்றங்களை முடுக்கி விட்டு, சரித்திரத்தைத் திரித்தெழுதி முழு நாடும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றார்கள். முன்னர் ஒரு காலத்தில் அவ்வாறுதான் இருந்தது; பின்னர் வந்தவர்கள் கள்ளத்தனமாக அல்லது வன்முறை பாவித்து எம் நாட்டில் குடியேறிவிட்டார்கள் என்றெல்லாம் கூறித்திரிகின்றார்கள். அப்பாவிச் சிங்களப் பொது மக்களும் இவற்றை நம்பி வந்துள்ளார்கள். இன்றும் நம்புகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வட கிழக்கில் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுவிடுவார்கள்.

ஆகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது என்று பெரும்பான்மையின அரசாங்கங்கள் கூறி வந்தமைக்குக் காரணம் உண்டு. ஆனால் அவர்கள் கூற்றை வைத்து ‘அது கிடைக்காது’ என்று எமது அரசியல் கத்துக்குட்டிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது? ‘தந்ததை ஏற்போம்’ என்று சுய நல காரணங்களுக்காக இன்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள். வருங்காலம் எவ்வாறிருக்கும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. கட்சிக்காரர்களிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தும் போது தூர நோக்குடன் நீதிபதிகள் செயற்படுவார்கள். இன்றைய நன்மைகள் கருதி எதிர்காலத்தை நாங்கள் அடகு வைக்கப்படாது.

இரண்டாவதாக வட கிழக்கு இணைப்புக்கெதிராக இவர்கள் கூறுவது முஸ்லீம்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றார்கள் என்பதை. சென்ற செவ்வாய்க்கிழமைதான் அதாவது மார்ச் மாதம் 13ந் திகதிய வட மாகாணசபைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதியாகிய கௌரவ உறுப்பினர் சீனிமுகமது அப்துல் நியாஸ் அவர்கள் வெகு ஆணித்தரமாக சமஷ;டி முறையே இந்த நாட்டுக்கு உகந்தது என்றார். சமஷ;டியின் போது வடக்கும் கிழக்கும் இணைவதை அவர் எதிர்க்கவில்லை. ஆகவேதான் இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்களுக்கு ஒரு தனியலகு வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை சிபார்சு செய்து வருகின்றது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது வெறும் தர்க்கிக்கும் விடயம் அல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, மொழி, பண்பாடுகள் சார்ந்து பாரம்பரிய காணிகளைக் கணக்கில் எடுத்து அவர்கள் பாதுகாப்பு கருதி தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் இவை சம்பந்தமாக எடுக்கக்கூடிய ஒரே முடிவு வடக்கு கிழக்கு இணைப்பே!

அடுத்து நண்பர் யோதிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் அதற்கான வழி வரைபடமும் என்பது பற்றிப் பேச உள்ளார்.  சமஷ்டியை மையமாக வைத்துப் பேசப்போகும் அவர் ஒரு அரசியல் ஆய்வாளர் ஆவார். சட்டத்தரணியுங் கூட. கொழும்பு நல்லாயன் பாடசாலையில் கற்பித்த போதிருந்தே அவரை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவர் முக்கியமான ஒரு விடயம் பற்றிப் பேச இருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம் மக்களும் சமஷ்டியை ஆதரிக்கும் போது எமக்கான அரசியல் தீர்வு எத்திசை நோக்கிப் போகக்கூடும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.

முதலமைச்சர்கள் மகாநாட்டில் சென்ற வருடம் சமஷ்டியே எம் நாட்டுக்கு உகந்தது, சிங்கள மக்களும் அதையே நாட வேண்டும் என்று நான் கூறியதும், அப்போதைய வட மத்திய மாகாண முதலமைச்சர் ‘உச்ச மட்ட அதிகாரப் பரவலாக்கம் எமக்குத் தேவை; ஆனால் சமஷ்டியை ஏற்க முடியாதெ’ன்றார். அந்த அளவுக்கு சமஷ்டி என்றால் நாட்டைப் பிரிப்பதென்று சிங்கள மக்களின் மனதில் ஆழப் பதித்து விட்டனர் சிங்கள அரசியல்வாதிகள்!

சமஷ்டியே முழு நாட்டுக்கும் உகந்தது என்று நான் அண்மையில் கூறியிருந்ததை பல சிங்கள நண்பர்கள் வரவேற்றார்கள். 1930 – 40களில் கண்டிய சிங்களவரே சமஷ்டியை ஆதரித்தார்கள். சமஷ்டி அலகு தமக்குத்தரப்பட்டால் கண்டிய மக்களின் தனித்துவத்தைப் பேணிக் காப்பாற்றலாம் என்றே அந்தக் கோரிக்கையை அவர்கள் அன்று முன்வைத்தார்கள். திரு.ளு.று.சு.னு.பண்டாரநாயக்க அவர்கள் 1926ல் சமஷ்டி முறையே நாட்டுக்குச் சிறந்தது என்று கூறிய போது எமது தமிழ் மக்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் அந்த காலகட்டத்தில் நாடு பூராகவும் நாங்கள் பரந்து வாழ்ந்து வந்தோம். வணிகத்தில் ஈடுபட்டிருந்தோம். தெற்கத்தைய பல ஏக்கர் காணிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தோம். அரசாங்க உயர் பதவிகளில் எல்லாம் எம் தமிழ் மக்களே இருந்தார்கள். ஆகையால் சமஷ்டி வேண்டாம், நாங்கள் இப்போது இருப்பது போலவே இருப்போம் என்றார்கள்.

ஆனால் இன்று சமஷ்டியை நாங்கள் கேட்பதில் பிழையில்லை. நாட்டை முழுமையாக சிங்கள பௌத்த மயம் ஆக்க சிங்கள மக்களுள் ஒரு சாரார் முயன்று வருகின்றனர். நான் திருகோணமலை நோக்கி இன்று வந்த போது இந்த நகரத்தைச் சுற்றி சிங்கள மக்கள் முழுமையாக ஆக்கிரமித்திருப்பதை அவதானித்தேன். வட கிழக்கை இணைத்து சமஷ்டி தரப்பட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பயம் அந்த மக்களுக்கு இயல்பாகவே வரும். அதற்குப் பதில் இதுதான். நாம் எவரையும் வெளியேற்றத்தேவையில்லை. ஆனால் வட கிழக்கு தமிழ்ப்பேசும் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எமது மொழி, நிலம், பொருளாதாரம், கலாச்சாரம் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கடங்க எவ்வாறு தமிழ் மக்கள் தெற்கில் பல இடங்களில் கூடி வாழ்ந்து வருகின்றார்களோ அதே போல் சிங்கள மக்களுந் தமிழ்ப் பேசும் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்வதை நாம் எதிர்க்கத்தேவையில்லை. ஆனால் இங்கு தமிழ் மொழிக்கே முதலிடம் வழங்கப்படும். மதங்கள் அனைத்துக்கும் சம உரிமை வழங்கப்படும். எவ்வாறு வட மாகாணசபையில் நாம் இரண்டு சிங்களப் பிரதிநிதிகளுக்காக எல்லா ஆவணங்களையும் சிங்களத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்து அவர்களை சகோதரர்கள் போல் நடத்துகின்றோமோ அதேவாறே எம்மிடையே வாழும் சிங்கள மக்களையும் நாம் அல்லலின்றி வாழ விடுவோம்.

சமஷ்டி என்றதும் தங்களை விரட்டி அடித்து விடுவார்கள் தமிழர்கள் என்று அஞ்சுகின்றார்கள் சிங்கள மக்கள். அதே போல் தெற்கில் வாழும் தமிழ் மக்களும் தாங்கள் வட கிழக்கிற்குப் போக வேண்டி வரும் என்று அஞ்சுகின்றார்கள். இது தவறான எண்ணமாகும். நிர்வாகமானது மத்தியில் இருந்து மாகாணத்திற்குக் கைமாறும்; மாகாண நிர்வாகத்தை மாகாண மக்களே நிர்ணயிப்பர். மாகாணக்காணி மாகாண மக்களுக்கே சொந்தமாகும். மாகாணப் பாதுகாப்பு மாகாணப் பொலிசாராலேயே கண்காணிக்கப்படும். இவற்றைவிட மக்கள் பெருவாரியாகப் புலம் பெயர வேண்டிய அவசியமில்லை. எவ்வாறு பிற மாகாணங்களில் சிங்கள மொழியில் ஆவணங்கள் அனைத்தும் இருக்கத் தமிழ் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ அதே போல்த்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வட கிழக்கில் சிங்கள மக்கள் தொடர்ந்து சட்டத்திற்கு அமைவாக வாழ்ந்து வரலாம். நாம் தமிழர்கள் என்ற முறையில் சிங்கள, முஸ்லீம் மக்களை மனிதாபிமானத்துடனேயே நடத்துவோம். எம்மை மற்றவர்கள் பண்பற்ற முறையில் இது காறும் நடாத்தி வந்தது போல் நாமும் நடந்து கொள்ள மாட்டோம். அவ்வாறு நடந்து கொண்டால் எமது 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட எமது இலக்கியக் குறிக்கோள்கள், கலை, கலாச்சாரத்தை மீறியவர்கள் ஆகிவிடுவோம். தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. விதந்துரைக்கக்கூடிய விழுமியங்கள் உண்டு. அவற்றிற்கு அனுசரணையாக நாம் நடந்து கொள்வோம்.

இவை என் கருத்துக்கள். நண்பர் யோதிலிங்கம் கருத்தையறிய ஆவலாய் இருக்கின்றேன். அவை என் கருத்துக்களுடன் ஒன்றுபடாவிட்டாலும் மக்கள் பரிசீலனைக்காக நாம் அவற்றைக் கூறுவது எமது கடமை.

மூன்றாவதாக பேசப்போகின்றவர் நண்பர் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.K.S.இரத்னவேல் அவர்கள். மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் இயக்குநராக இருக்கும் அவர் எமது இளைஞர்கள் பலரின் வழக்குகளைக் கையாண்டு வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட எம் மக்கள் நலனுக்காக வருடக்கணக்காகப் பாடுபட்டு வருபவர். அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பங்களும் என்ற பொருள் பற்றிப் பேசவுள்ளார்.

அவர் பேசப்போகும் விடயமே இப்பொழுது தமிழ் மக்கள் பலரின் சிந்தனையையுங் கவனத்தையும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. ஜெனிவாவில் என்ன நடக்கும்? இலங்கை அரசாங்கம் உலகரங்கில் 2015ல் ஏற்றுக்கொண்ட இயைந்த தீர்மானத்தில் கூறப்பட்டவற்றை செய்வதாகக் கூறி செய்யாததன் விளைவு பற்றி அவரிடம் இருந்து அறியப்போகின்றோம். அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசாங்கம் பற்றி அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி எல்லாம் அவர் கூறுவார். நான் ஐநா மனிதவுரிமை ஆணையாளருக்கு 2015ல் இருந்தே கடிதங்கள் பல அனுப்பி இலங்கை தனது கடப்பாடுகளில் இருந்து தவறும் என்று எச்சரித்து வந்துள்ளேன். சர்வதேச உள்ளீடல்களை அது அனுமதிக்காது என்று கூறிவந்துள்ளேன். அவை இப்பொழுது நடைபெற்றுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் கூட இதுவரையில் கைவாங்கப்படவில்லை, காணாமல்ப்போனோர் அலுவலகம் மக்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. அவ்வலுவலகம் வெறும் கண்துடைப்போ என்று எண்ணவேண்டியுள்ளது. வேறு பல விடயங்கள் அவரால் அலசி ஆராயப்படும்.

பேச்சாளர்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் நந்தி போல் நிற்காது இத்துடன் எனது ஆரம்ப உரையை முடிவுக்குக் கொண்டுவந்து முதல் பேச்சாளராகிய கலாநிதி மு.வு.கணேசலிங்கத்தை ‘வடகிழக்கு இணைப்பிற்கான புதிய தந்திரோபாயம்’ என்ற பொருள்பற்றிப் பேச அழைக்கின்றேன்.
கலாநிதி K.T.கணேசலிங்கம் அவர்கள்!

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More