Home இலங்கை கருணா, KP வெளியில்- ஆனந்தசுதாகரன்கள் சிறையில்- யோகராணிகள் சுடுகாடுகளில்- கொள்ளிகளுடன் பிஞ்சுகள்..

கருணா, KP வெளியில்- ஆனந்தசுதாகரன்கள் சிறையில்- யோகராணிகள் சுடுகாடுகளில்- கொள்ளிகளுடன் பிஞ்சுகள்..

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..

மனசாட்சி உள்ள எவரும் துடிதுடித்துப் போகும் காட்சி அது. நெஞ்சில் ஈரமுள்ள எவரும் துடிதுடித்துப் போகும் கதை அது. ஆனந்தசுதாகரன் யோகராணி அரசியல் கைதியின் மனைவி, அவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மரணமடைந்தார். இந்த நிலையில் அவரது இறுச்சிடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள வெறும் மூன்று மணித்தியாலம் ஆனந்தசுதாகரன் அனுமதிக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்திருந்த ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் தாயை நிரந்தரமாக இழந்துவிட்ட நிலையில் சிறையிலிருந்து வந்த தந்தையை பார்க்கும் அவர்களின் விழிகளில் தெரியும் துயரம் இந்த நல்லாட்சி (?) அரசை உலுக்கவில்லையா?

ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக யோகராணி இறந்திருக்க மாட்டார் என்பதை நம்பலாம். 2008ஆம் ஆண்டில் கணவனை பிரிந்த இந்தப் பெண் கடந்த பத்து ஆண்டுகளாக தனது கணவனின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தாள். இந்தப் பத்தாண்டு காலமே அவளை கடுமையாக பாதித்திருந்தது. இந்த மரணத்திற்கும் இழப்புக்கும்கூட இலங்கை அரசே பொறுப்பு. இன்று தாயை இழந்து இரண்டு சிறுவர்கள் அநாதை ஆக்கப்பட்டதற்கும் இந்த அரசே பொறுப்பு. இப்போது, தாயின் சாவுடலின் பின்னே கொள்ளிக்குடத்துடன் செல்லும் அந்தச் சிறுவனின் கோலமும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் அந் சிறுமியும் இந்த நல்லாட்சி (?) அரசை உலுக்கவில்லையா?

மனச்சாட்சி உள்ள எவரையும் இது உலுக்கும். எந்தவொரு அரசும் தன் பிரசைகளுக்கு இந்த நிலையை ஏற்படுத்தாது. ஆனந்தசுதாகரனை விடுவித்திருந்து, யோகராணியை காப்பாற்றி இச் சிறார்களுக்கு இந்த நிலமை ஏற்படுவதை தடுத்திருந்தால், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக தெற்கில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இந்த ஆட்சியை பாதுகாக்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் தமது பதவி மற்றும் கட்சிகளை காப்பாற்றிக் கொள்ளவும் ஆனந்தசுதாகரன்களையோ யோகராணிகளையோ இத்தகைய சிறார்களையோ உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய துயரத்தில்தான் இப்போதைய நல்லாட்சி நடக்கின்றது. இப்படியான காட்சிகளின் பின்னரும் இதுவொரு நல்லாட்சி என நம்பிக்கொண்டு நமது தமிழ் தலைவர்களும் ஆதரவளித்துக் கொண்டு எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இலங்கையில் உண்மையின்மீதும் நீதியின்மீதும் ஒரு ஆட்சி நடைபெறுவதில்லை என்பதையோ யோகராணியும் குழந்தைகளும் எடுத்துரைக்கின்றனர். மகிந்த ராஜபக்சவும் அவரைப்போன்ற முன்னைய ஜனாதிபதிகளும் ஈழத் தமிழ் மக்கள்மீது போரை தொடுத்து அவர்களை கொன்று குவித்து அந்த வெற்றிச் செய்தியை தெற்கிற்கு கொண்டு சென்று அரசியல் செய்தனர். தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடியபோது, அதனை தமது அரசியல் ஆதாயங்களுக்காக திரிவுபடுத்தி தமது அரசியலை செய்தனர். அன்று எமது சிறார்கள் கொன்று அரசியல் செய்யப்பட்தற்கும் ஆனந்தசுதாகரன் – யோகராணி குழந்தைகள் நிர்கதி ஆகியிருப்பதற்கும் எந்த வேறும்பாடும் இல்லை. தெற்கின் அரசியல் இருப்பிற்கான யுத்தகளத்தில் இந்தச் சிறுவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் பேசியே ஆட்சிக்கும் அரசியலுக்கும் வந்த பலர் இன்று அரசில் உள்ளனர். அவர்களும் இப்போது மௌனிகள். பயங்கரவாதத் தடை என்ற போர்வையில் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எப்படி எல்லாம் வதைபடுகின்றனர் என்பது மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுகின்றது. பிள்ளையை சிறையில் விட்டு இறந்துபோன தாய் தந்தைகளும் கணவனை சிறையில் விட்டு இறந்துபோன மனைவிகளுமாக இருக்கிறது ஈழநிலம். இவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படுகிறார்கள்? அதுவும் செய்யாத குற்றங்களுக்காகவும் வெறும் சந்தேகங்களுக்காகவும் அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி ஓர் கடுமையான இன ஒடுக்குமுறை சட்டத்தின் மூலம் இவர்கள் எதுவரை இப்படி தண்டிக்கப்படுவார்கள்?

கருணாவும் கே.பியும் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். இவர்கள்தான் சிறைச்சாலையிலும் சுடுகாட்டிலும் உள்ளனர். இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இணைந்தார். இவரைப்போன்றவர்கள் பண முதலாளிகளாகவும் சுதந்திரப் பிரசைகளாகவும் இன்றும் மைத்திரிபால – ரணில் நல்லாட்சி (?) அரசியல் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ராஜபோக வாழ்வு. சுதாகரன்களுக்கு இறுதிச்சடங்கிலும் வெறும் மூன்று மணித்தியாலங்கள்தான். தாய் தந்தையுடன் இணைந்து வாழ ஏங்கும் எங்கள் அப்பாவிக் குழந்தைகள்தான் கொள்ளிக் குடத்துடன் சுடுகாடு செல்லும் வாழ்க்கை. தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் துணை நின்றவர்கள் அவர்கள். சுதாரகன் போன்றவர்கள் தமது உரிக்கைகாக ஒரு ஈக்கில் குச்சை எடுத்துக் கொடுத்திருந்தாலும் பயங்ரவாதிகள்.

ராஜபக்சக்களின் கொடூரங்களையும் விஞ்சுகிறதா ரணில் மைத்திரி கூட்டரசு? ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்கான போராட்ட வராற்றில் மிகவும் அதிகமான உலகில் நிகழ்ந்திராத கொடூரங்களை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்தியிருந்தார். ஆனால் கத்தியும் யுத்தமும் இல்லாமல் ராஜபக்ச நிகழ்த்திய கொடூரங்களை இன்றைய மைத்திரி – ரணில் கூட்டரசு விஞ்சும் நிலமை ஏற்பட்டுள்ளது. மிக நூதனமாக தமிழ் மக்களை இப்படி எல்லாம் வதைப்படுத்தி அழிப்பதில் இந்த அரசு ராஜபக்சவை விஞ்சுகிறது. இலங்கையில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அணுகும் வித்தில் மாற்றம் ஏற்படுவதில்லை என்பதையும் தத்தமது அரசியல் நலன்களுக்கான நோக்கிலேயே தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றனர் என்பதையும், மைத்திரிபால – ரணில் ஆட்சியும் விதிவிலக்கல்ல என்பதையும் உணர்த்துகிறது ஆனந்தசுகாதரனின் கதை.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More