இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஐ நாவில் நிறைவேற்றம்….

முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில், இணங்கி வாழ முடியாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் – ரவிநாத் ஆரியசிங்க..

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரின் நேற்றைய (19.03.18) அமர்வில் இந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறித்த அறிக்கையில் 253 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் 177 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், சுயவிருப்பத்துடன் 17 உறுதி மொழிகளையும் இலங்கை வழங்கியுள்ளது.

இலங்கை தொடர்பான குறித்த மீளாய்வு அறிக்கைக்கு பலமான ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நேற்றைய அமர்வில் கூறியுள்ளார்.

நவம்பர் மாதத்தில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ரவிநாத் ஆரியசிங்க இதன்போது கூறியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்குதல், காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபித்தல், சிறுவர் உரிமைகள் சம்பந்தமான உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதல் உட்பட மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகள் சம்பந்தமாக ரவிநாத் ஆரியசிங்க தனதுரையில் விரிவாக கூறியுள்ளார்.

அத்துடன்  கண்டியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் ரவிநாத் ஆரியசிங்க உரையாற்றியுள்ளார். குறிப்பாக  கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில், இணங்கி வாழ முடியாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என  தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் அனைவருக்கும் சமமானது என்ற இலங்கையின் பகிரப்பட்ட நோக்கத்திற்கு எதிரானவையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தின் சரியான செயல்முறைக்கு அமைவாக இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உறுதியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயல்முறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தனதுரையில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை சம்பந்தமாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் எழுத்து மூலப் பிரதி நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் சமர்பிக்கப்பட உள்ளது.

நாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான அமர்வில் இலங்கை சார்பாக பங்கேற்பதற்காக அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 11 other subscribers